கலைக்களஞ்சியம்/அறிவாராய்ச்சியியல்
அறிவாராய்ச்சியியல் (Epistemology) : உண்மையான அறிவு ஏற்படுவது எப்படி? அதன் இயற்கை யாது? அறிவு உண்மை எனக் கருதப்படுவது எப்பொழுது? பொய்யெனக் கருதப்படுவது எப்பொழுது? அறிவை மெய் என்றோ பொய் என்றோ துணிவதற்கும் அளப்பதற்குமுள்ள உரைகல் எது? அறிவுக்கு வரம்புகள் உண்டா? இவ்வினாக்கள் அளவையியற் கொள்கையின் முக்கியமான கேள்விகளாம். மனித அறிவின் தத்துவங்களை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுவனவாம்.
அன்றாட வாழ்க்கையிலும் விஞ்ஞானத் துறையிலும் நாம் பெறும் அறிவு பல தடவைகளில் தவறாக ஆகிவிடுகின்றது. ஐயப்பாடு,தெளிவின்மை, தவறாகப் பற்றுதல் முதலிய குற்றங்களுக்கு உள்ளாகின்றது. தத்துவங்களைப்பற்றிப் பலர் பலபடியாகக் கூறுகின்றனர். ஒரே பொருளைப்பற்றி முற்றிலும் முரணான கொள்கைகள் ஆதரிக்கப்படுகின்றன. அதனால், நமது அறிவின் திறனை எத்துணை நம்பலாம், அறிவுத்திறன் செய்யும் முடிவுகளின் பிராமாண்யம் எத்தகையது என்று கேட்க நேரிடுகிறது.
அளவையியற் கொள்கையார் அறிவு என்பதை அறிபவன், அறியப்படும் பொருள், இரண்டுக்குமுள்ள தொடர்பு என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர். ஆனால் இம்மூன்றையும் பற்றிப் பல்வேறு கொள்கைகள் வற்புறுத்தப்படுவதால் அறிவின் உற்பத்தி, பிராமாண்யம், உண்மை பொய்ம்மையை நிதானிக்கும் அளவுகோல் முதலியவை பற்றிக் கருத்து வேற்றுமை காணப்படுகிறது.
அறிவின் தோற்றத்தைப் பற்றிய கொள்கைகள்
1. புலன்வழிக் கொள்கை (Sensationalism) : இருட்டறைக்குள் சன்னல் வாயிலாக மட்டுமே வெளிச்சம் வருவதுபோல, அறிவின்றிக் கிடக்கும் உள்ளத்தினுள்ளே புலன்கள் வாயிலாக அறிவு புகுகின்றது. புலன்கள் வாயிலாகப் புகுந்து உள்ளத்தை அடைந்த உட்பதிவுகள் (Impressions) சிந்தனாசக்தியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கருத்துக்கள் ஆகின்றன. ஆகவே அறிவானது அகத்தே தானாக உண்டாவதன்று, புறத்தேயிருந்து புலன்கள் வாயிலாகவே உண்டாவது. ஆதலால் இதைப் புலக்கொள்கை என்பது பொருந்தும். அறிவின்றிக் கிடக்கும் மனத்தில் அனுபவத்தின் மூலமாகவே அறிவு தோன்றி வளருவதால் இதை நுகர்ச்சிவழிக் கொள்கை (Empiricism) என்றும் கூறுவதுண்டு. விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நன்கு விளக்குவது இக்கொள்கையே என்று சிலர் புகழ்வர். பேக்கன், ஜேம்ஸ், டூயி ஆகியோர் பொதுவாக இக்கொள்கையை ஆதரித்தவருள் சிலராவர்.
2. அறிவுமுதற் கொள்கை (Rationalism) : அனுபவம் ஏற்படுவதற்கு முன்பே மனத்தில் அறிவு உண்டு. மனம் ஒருபோதும் அறிவில்லாமல் இருக்காது. மனத்தின் சிந்தனைத் திறத்தாலேயே அறிவு என்பது உண்டாகின்றது என்னும் இக்கொள்கையை மறுப்போர் இக்கொள்கையினரை அடவாதிகள் (Dog- matists) என்று இழிவாகப் பேசுவர். ஒரு சிலர், அறிவுக்குக் காரணம் புலன்களோ சிந்தனையோ மட்டுமல்ல, இரண்டும் சேர்ந்ததே என்பர்.
3. உள்ளுணர்வுக் கொள்கை (Intuitionism) : புலன்கள், சிந்தனை என்பவை தவிர உள்ளுணர்வு என்று ஒரு தெய்விகத் தன்மை உண்டு. அதன் மூலமாகவே நாம் கடவுள், தருமம், ஆன்மா போன்ற மனத்துக்கு எட்டாத சிறந்த உண்மைகளைச் சில சமயங்களில் நேரில் அறிகிறோம்.
அறிவை மதிப்பிடுவது பற்றிய கொள்கைகள்:
1. சிலர் அறிவு என்பது உண்மையே என்று கூறுவர். 2. சிலர் அறிவு என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றதே என்பர். ஜைன மதத்தில் காணப்படும் சியாத்வாதம் என்பது இத்தகையதே. 3. சிலர் அறிவு மனத்தின் விகாரமே தவிர புறத்தேயுள்ள பொருள்களைக் குறிப்பதில்லை என்பர். இது அகநிலைக்கொள்கை (Subjectivism) ஆகும். இதற்கு உதாரணமாக இந்தியநாட்டு 'விஞ்ஞானவாதிகளையும்', பார்க்ளே போன்ற மேனாட்டுத் தத்துவ ஞானிகளையும் கூறலாம். 4. மற்றுஞ் சிலர் அறிவைப் பற்றி எதுவும் திட்டமாகக் கூற இயலாது என்பர். இவர்கள் அறியொணாமைக் கொள்கையினர் (Agnostics) எனப்படுவர்.
அறியப்படும் பொருள்பற்றிய கொள்கைகள் : 1. கருத்துக் கொள்கை (Idealism): அறியப்படும் பொருள், அறியும் கர்த்தாவைப்போல் சித்துப் பொருளாகவோ அல்லது சித்துப் பொருளை நாடி நிற்பதாகவோ உள்ளது. இக்கொள்கையினர் ஒரு பொருள் இருக்குமானால் அதை யாரேனும் ஒருவர் அறிந்திருக்கவே வேண்டும் என்று கூறுவர். ஆகவே இக்கொள்கையின்படி அனைத்தும் மனோமயம்.
2. புறப்பொருட் கொள்கை (Realism) : அறியும் கர்த்தாவுக்கு வேறாகப் புறத்தே பொருள்கள் இருப்பதாகவும், அவற்றின் அமைப்பு அறியும் கர்த்தாவின் வயப்பட்டதில்லை என்பதாகவும், அறிவும் பொருளும் பொருத்தமுற்றிருப்பது உண்மை, பொருத்தமற்றிருப்பது பொய் என்பதாகவும் இக் கொள்கையினர் கூறுவர். கி. ர. அ.