கலைக்களஞ்சியம்/அலெக்சாந்தர்

அலெக்சாந்தர் III (போப், ப.கா. 1159-1181) : 1153-ல் சான்சலராக நியமனம் பெற்றார். பிரெடரிக் பார்பரோசா என்னும் ஜெர்மன் மன்னனை எதிர்த்த மதத் தலைவர்களில் ஒருவர். 1159-ல் போப் VI-ம் ஆட்ரியனுக்குப்பின் இவர் போப்பாக நியமனம் பெற்றார். இவருக்கெதிராக நின்று சிறுபான்மையோரால் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் IV-ம் விக்டர் என்பவர். IV-ம் விக்டரை முதலில் அங்கீகரித்த பார்பரோசா வமிசத்தினர் லெக்னானோத் தோல்விக்குப் பிறகு அலெக்சாந்தரையே போப்பாக ஏற்றுக்கொண்டனர். 1179-ல் அலெக்சாந்தர் ஒரு மதகுரு மாநாட்டைக்கூட்டி ரோமன் கத்தோலிக்கச் சமய சம்பந்தமான சில சட்டங்களை இயற்றினார். இங்கிலாந்தில் அப்போது ஆண்டுவந்த II-ம் ஹென்ரியைத் தாமஸ் பெக்கட் கொலையை முன்னிட்டுப் பணியவைத்தார். I-ம் அல்பான்சோவைப் போர்ச்சுகேசிய மன்னனாக்கியவரும் இவரே. 1179க்குப் பிறகு ரோமானியக் குடியரசு இவரை ரோமில் இருக்கவிடவில்லை. அவ்வாண்டில் III-ம் இன்னசன்ட் என்பவவரைப் போட்டிக்குப் போப்பாக ஏற்படுத்தினர் ; ஆயினும் அலெக்சாந்தர் அவரையும் தம்வசப்படுத்திக் கொண்டார். III-ம் இன்னசன்ட் 1180-ல் பதவியிழந்தார். அலெக்சாந்தர் 1181-ல் ஸ்காட்லாந்து அரசரான வில்லியம் என்பவரைச் சமயநீக்கம் செய்தார். 1181 ஆகஸ்டு 30-ல் இறந்தார்.

அலெக்சாந்தர் VI (போப், 1431-1503) : அலெக்சாந்தர் என்னும் பெயருடைய போப்புக்களில் இவரே மிக்க புகழ் பெற்றவர். இவர் ஸ்பெயினிலுள்ள வாலன்சியா என்னுமிடத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது திறமை நன்கு விளங்கிற்று. III-ம் காலிக்ஸ்டஸ் என்னும் போப் இவரைக் கார்டினலாக நியமித்தார். இவர் 1492-ல் VI-ம் இன்னசன்ட் இறந்ததும் போப் பதவி ஏற்றார். இவர் பேரறிவும் துணிச்சலும் வாய்ந்தவர். இவர் காலத்தில் திருச்சபைக்கு வருவாய் அதிகரித்தது. இவர் கல்வியையும் கலைகளையும் வளர்த்தார். ரோம் நகரை அழகுபெற அமைத்தார். அமெரிக்காவிலிருந்த ஸ்பானிய, போர்ச்சுகேசியக் குடியேற்றங்களுக்கிடையே இவர் எல்லை வகுத்தார். இவர் போப்பாக இருந்த காலத்தில்தான் சவனரோலா (த. க.) எரிக்கப்பட்டார். இவர் மக்களில் சீசர் போர் ஜியா, லுக்ரிஷா போர்ஜியா என்பவர்கள் இருவரும் புகழ் பெற்றவர்கள்.

அலெக்சாந்தர், மகா (கி. மு. 356-323) மாசிடோனியா மன்னனாகிய II-ம் பிலிப்பின் புதல்வன். அரிஸ்டாட்டில் முதலிய பல தகுந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்றான். இவனது புத்தி நுட்பமும் வீரத் தன்மையும் இளமையிலேயே புகழ்பெற்றன. 16ஆம் வயதில் - திரேசில் தோன்றிய கலவரத்தைத் தானே சென்று அடக்கினான். இவனது 18ஆம் வயதில் பிலிப் ஈடுபட்ட கெரொனியாப் போரில் இவன் தீப்ஸ் படையைத் தோற்கடித்தான்.

கி. மு. 336-ல் பிலிப் கொலை செய்யப்பட்டதும் நாட்டில் கலவரங்கள் தலை தூக்கின. ஒரு பக்கம் கிரேக்கர்களும், மற்றொரு பக்கம் திரேசியர்களும் கிளர்ச்சி செய்தனர். சற்றேனும் அஞ்சாமல் அலெக்சாந்தர் யாவரையும் போரில் வென்று அடக்கினான். கிரீசில் தெஸ்ஸாலியரையும் தீபன்களையும் தோற்கடித்தவுடன், மற்றக் கிரேக்கர்கள்யாவரும் அவனுக்குப் பணிந்தனர். அன்றியும் காரிந்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் ஆசியாமீது படையெடுப்பதற்கு முன்பு பிலிப்பைத் தலைவனாக ஏற்றுக்கொண்டதுபோல், இப்பொழுது அவன் மகனை அப்பதவிக்கு நியமித்தார்கள்.

திரும்பி நாட்டிற்குச் சென்ற சில நாட்களில் அலெக்சாந்தர் இறந்துவிட்டானென்ற பொய் வதந்தி கிரீசில் கிளம்பவே தீப்ஸில் கிளர்ச்சி தொடங்கியது. அதீனியர்களும் இதற்கு ஆதரவு அளித்தனர். மிக விரைவாக அலெக்சாந்தர் தீப்ஸ்மீது பாய்ந்து, கிளர்ச்சியை அடக்கி, தீப்ஸ் நகரத்தை அறவே அழித்தான் ; மக்கள் பலரை அடிமைகளாக்கி விற்றான். தான் செய்த இக்கொடிய செயல்களுக்காக அலெக்சாந்தர் பின்பு வருந்தினான் என்று கூறுகிறார்கள். எதுவாயினும் அவனது தண்டனை உடனே பலனளித்தது. கிரேக்க நகரங்கள் யாவும் அடிபணிந்தன.

மாசிடோனியாவிற்குத் திரும்பியதும் அவன் பாரசீக சாம்ராஜ்யத்தைத் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தான். தகுந்த படையுடன் கி. மு. 334-ல் புறப்பட்டுத் தன்னை எதிர்த்த பாரசீகப் படைகளை வென்று, பல நகரங்களைக் கைப்பற்றி, மேற்கு ஆசியாமைனர் முழுவதையும் வென்றான். மைலீட்டஸ், ஹாலிக்கர் நாசஸ் போன்ற சில நகரங்கள் முதலில் எதிர்த்த போதிலும், இறுதியில் இவனுக்குட்பட்டன.

ஆசியாமைனரிலிருந்து சைலீஷியன் கணவாய் வழியே சென்று, அலெக்சாந்தர் சிரியாவை அடைந்தான். இங்கு இஸ்ஸ்ஸ் என்னுமிடத்தில் டரையஸ் என்னும் பாரசீக மன்னனது பெரும் படையைப் போரில் வென்றான். டரையஸ் போர்க்களத்தினின்றும் ஓடிவிட்டான். உடனே அலெக்சாந்தர் மத்திய தரைக் கடலின் கீழ்ப் பக்கமிருந்த துறைமுகங்களைக் கைப்பற்றினான். டயர் துறைமுகம் மட்டும் உறுதியான கோட்டையின் பலத்தால் ஏழு மாதம் எதிர்த்து நின்றது. கடைசியில் அதுவும் பணிந்தது. பின்பு அவன் எகிப்தைத் தாக்கினான். இங்கு மக்கள் தங்களை ஆண்டுவந்த பாரசீக அரசாங்கத்திடம் வெறுப்புற்றிருந்தபடியால் நாடு முழுவதும் மிக எளிதில் அவன் கைவசமாயிற்று. அங்கு அலெக்சாந்திரியா என்ற நகரத்தை உருவாக்கினான். அதற்கப்பால், பின்னும் ஆசியாவிற்குள் சென்று, டைக்ரிஸ் ஆற்றைக் கடந்து, கி. மு. 331-ல் மறுபடியும் டரையஸின் படையைக் காகமேலா என்னும் இடத்தில் தோற்கடிக்கவே, பாரசீக மன்னன் உயிர் தப்பி ஓடினான். அலெக்சாந்தர், பாபிலோன், சூசா, பெர்சபொலிஸ், எக்பட்டானா முதலிய இடங்களை எளிதில் கைப்பற்றினான். அதற்குள் டரையஸை அவனது துணைவர்களே குத்திக் கொன்றனர். பாரசீகப்பேரரசு முழுதும் அலெக்சாந்தர் வசமாயிற்று.

காடும் மலையும் பாலைவனமும் நாடும் கடந்து எதிரிகள் யாவரையும் வென்று ஆசியாவின் உள்நாடுகளுக்குச் சென்றான். முதலில் கீழ்த்திசையை நோக்கிப் பாக்டிரியாவிற்கும், பின்பு வடதிசையை நோக்கி ஆக்சஸ், ஜக் ஸார்ட்டிஸ் ஆறுகளைக் கடந்து துருக்கிஸ்தானத்திற்கும், இறுதியாகத் தெற்கே இந்தியாவிற்கும் போனான். சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. ஜீலம் நதிக்கரையில் புரு வம்ச மன்னனைத் தோற்கடித்தான். அவனைக் கிரேக்கர்கள் போரஸ் என்று அழைத்தனர். போரஸின் வீரத்தை மெச்சி அவன் நாட்டை அவன் கையிலேயே ஒப்படைத்தான். பின்னும் இந்தியாவிற்குள் செல்ல விரும்பிய அலெக்சாந்தரை அவன் படையினர் தடுத்து விட்டனர். அவர்கள் நாடு விட்டு வெகு நாளானதால் திரும்பிச்செல்ல ஆசை கொண்டனர். மிக்க வருத்தத்துடன் அலெக்சாந்தர் இசைந்தான்.

கப்பல்களைப் பாரசீக வளைகுடாவைச் சுற்றிச் செல்லும்படி படைத்தலைவர்களில் ஒருவனான நியார்க்கஸ் தலைமையில் அனுப்பிவிட்டு, அலெக்ஸாந்தர் படையுடன் கரைவழியாகப் பல பாலைவனங்களைக் கடந்து பாபிலோனை அடைந்தான். அங்கிருந்து அரேபியா, கார்த்தேஜ், இத்தாலி முதலிய நாடுகளைத் தாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது கி. மு.323-ல் நோய்வாய்ப்பட்டு இறந்தான்.

அலெக்சாந்தர் பெரு வீரன். அவன் காலத்திற்கு முன் எவரும் இவ்வளவு நாடுகளை வென்றதில்லை. ஆனால் இவன் வெறும் போர்வீரன் மட்டுமல்ல. ஐரோப்பாவையும் ஆசியாவையும் கிரேக்கப் பண்பாட்டால் ஒன்று சேர்த்து இணைக்க விரும்பினான். இந்த முற்போக்கான எண்ணத்தைக் கருதியே ஆசிய நாடுகளில் பற்பல நகரங்களை உண்டாக்கி, அங்குக் கிரேக்கர்களைத் தங்க வைத்தான். மேலும், கிரேக்கர்கள் பலருக்குப் பாரசீகப் பெண்களை மணஞ்செய்வித்தான். தானும் ஒரு பாரசீக இளவரசியை மணம் புரிந்தான். ஆனால் ஐரோப்பியரையும் ஆசியரையும் இணைத்து வைக்க இவன் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. ஏனெனில், கிரேக்கர்களுக்கு இனப் பற்று அளவுகடந்ததா யிருந்தது. ஆசியரோடு இணங்கும் தன்மை அவர்களிடம் காணப்பட வில்லை. அலெக்சாந்தர் கீழ்நாட்டு வழக்கங்களையும், ஆசிய மன்னர்களின் முறைகளையும் பின்பற்றியது கிரேக்கர்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிற்று. அவன் கருத்து நிறைவேறாது போயினும், அவன் உருவாக்கிய பேரரசு அவன் காலத்திற்குப்பிறகு சிதைந்து போயினும், அவன் இயற்றிய மாறுதல்களின் விளைவுகள் ஆசியாவில் பல நூற்றாண்டுகள் தென்பட்டு வந்தன. கே. க.

அலெக்சாந்தர் (யூகோஸ்லாவியா) (1888-1934) 1921-ல் செர்புகள், குரோவாட்டுகள், சுலோவீன்கள் ஆகியோருடைய நாடுகளின் அரசனானான். 1929க்குப் பிறகு இந்நாட்டுத் தொகுதி யூகோஸ்லாவியா என்னும் பெயர் பெற்றது. இம்மன்னன் நாட்டில் இருந்த அமைதிக் குறைவை நீக்க, 1929-ல் நாட்டின் பார்லிமென்டு அரசியலமைப்பை விலக்கிவிட்டுத் தானே சர்வாதிகாரியானான். இதனாலும் பயன் ஏற்படாமற் போகவே, 1931-ல் பார்லிமென்டு ஆட்சியை மறுபடியும் நிறுவினான். ஆயினும் பயங்கர இயக்கம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1934-ல் இவன் பிரெஞ்சு ஜனாதிபதியைப் பார்க்கவேண்டிப் பிரான் சிற்குப் போனபோது இவனைச் சில குரோவாட்டுப் பயங்கரவாதிகள் மார்சேல்ஸில் சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனுக்குப் பின் இவனது 11 வயது மகனான பீட்டர் அரசனானான்.

அலெக்சாந்தர் : ரஷ்யாவில் இப்பெயருடைய மன்னர்கள் மூவர்


அலெக்சாந்தர் I (1777-1825) I-ம் பாலின் மகன். 1801-ல் ரஷ்யப் பேரரசுப் பட்டம் எய்தினான். II-ம் காதரீனின் ஆட்சிக் காலத்தில் கற்றுக் கொண்ட அறிவுமுதற்கோட்பாடுகளும், ரூசோவின் கருத்துக்களும், பரம்பரையாக வந்த தனியாட்சிக் கொள்கைகளும் ஆகப் பலவகைக் கருத்துக்களைக் கொண்டவன் இவன். வட ஐரோப்பிய நாட்டவர்களுடைய படைதரித்த நடுநிலைமையை இவன் கைவிட்டான். ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நெப்போலியனோடு பொருது தோல்வியடைந்ததால் 1808-ல் அவன் பக்கம் சார்ந்தான். 1812ஆம் ஆண்டுப் போர்கள் இவனது ஏற்பாடுகளையும் எண்ணங்களையும் மாற்றிவிட்டன. ஐரோப்பாவில் அமைதி நிலைநிறுத்துவதையே முக்கியத் தொழிலாக இவன் கருதினான். வியன்னாவில் நெப்போலியனைக் கண்டதிலிருந்து ஐரோப்பிய நாடுகளை அப்பிரெஞ்சுப் பேரரசனுக்கு எதிராக ஐக்கியப்படுத்துவதில் முனைந்தான். இவன் ஆட்சியின் இறுதியாண்டுகளில் தன் தாராளக் கொள்கைகளைக் கைவிட்டான். உஸ்மானியப் பேரரசில் உள்ள கிறிஸ்தவத் திருச்சபையின் இரட்சகன் என்று தன்னைக் கூறிக்கொண்டான்.

அலெக்சாந்தர் II (1818-1881) I-ம் நிக்கலசின் மகன். 1855-ல் பட்டமெய்தினான். 1861-ல் அடிமைகளுக்கு விடுதலையளித்தான். இவன் கையாண்ட வெளிநாட்டுக் கொள்கையால் ரஷ்யாவின் மதிப்புப் பிறநாடுகளில் மிகுந்தது. இவன் 1881-ல் நிகிலிஸ்ட் என்னும் ரஷ்யத் தீவிரக் கட்சியினனாற் கொல்லப்பட்டான்.

அலெக்சாந்தர் III (1845-1894) II-ம் அலெக்சாந்தரின் மகன் ; 1881-ல் பட்டமெய்தினான். இவன் தன் தந்தையின் கொள்கைகளைப் பின்பற்றாது தனியாட்சியில் முனைந்தான்.

அலெக்சாந்தர் : ஸ்காட்லாந்தில் இப்பெயருடைய மன்னர்கள் மூவர் :

அலெக்சாந்தர் I (ஆ. கா. 1107-1124) மால்கம் கான்மோரின் நான்காம் மகன். தமையனான எட்கருக்குப்பின் 1107 ஜனவரியில் பட்டமெய்தினான். போர்த், கிளைடு கடலுள்வாய்களுக்கு வடபாலுள்ள ஸ்காட்லாந்தை ஆண்டான். இவன் காலத்தில் ஸ்காட்லாந்துத் திருச்சபை சுவாதீனமாக அமைக்கப்பட்டது. இவன் இங்கிலாந்து மன்னனான I-ம் ஹென்ரியின் மகள் செபிலை மணந்தான். இவனுக்கு மக்களில்லை. இவனைக் 'கொடூ ரன் 'என்று அழைப்பர்.

அலெக்சாந்தர் II (ஆ. கா. 1214-1249) இவன் வட ஸ்காட்லாந்திலிருந்த பிரபுக்களோடு போர் புரிந்தான். இவன் காலத்தில் இங்கிலாந்து மன்னனான ஜான் ஸ்காட்லாந்தின் மீது படையெடுத்து, எல்லைப்புறங்களை அழித்து நாசஞ் செய்தான் ; பிரெஞ்சு அரசனான லூயியைத் தன் தலைவனாக ஏற்றுக்கொண்டு ஜானை மேலும் பகைத்துக்கொண்டான். ஆயினும் 1217-ல் ஜானுடைய மகளான ஜோவானாவை இவன் மணந்துகொண்டபின் நிலைமை சிறிது மாறிற்று. III-ம் ஹென்ரியின் ஆட்சியில், 1244-ல், நியூகாசிலில் நடந்த ஒப்பந்தப்படி ஆங்கிலேய மன்னனுக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை என்று ஏற்றுக்கொண்டான். இவன் 1249-ல் இறந்தான். இவனுக்குப்பின் இவன் மகன் III-ம் அலெக்சாந்தர் பட்டமெய்தினான்.

அலெக்சாந்தர் III (ஆ. கா. 1249-1285) ஸ்காட்லாந்துக்கு மேற்கேயுள்ள தீவுகளை 1263-ல் தன்னாட்சிக்குள்ளடக்கினான். இவன் காலத்தில் அரசாங்க நிருவாக முறை சீர்திருத்தியமைக்கப்பட்டது. இவன் கிங்ஹாரன் மலையிலிருந்து வீழ்ந்து இறந்தான்.