கலைக்களஞ்சியம்/அழற்சி

அழற்சி (Inflammation) என்னும் சொல் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் திசுக்களில் சிவத்தல் வீங்குதல், நோதல், சுடுதல் ஆகியவற்றுடன் கூடி மாறுதல் ஏற்படுவதைக் குறிப்பதாகும். இந்த நான்கு குறிகளுமே முக்கியமானவை என்று செல்சஸ் என்னும் லத்தீன் மருத்துவர் கி. பி. 34-ல் கூறினார். இப்போது வேலை பழுதுபடுதல் (Loss of functions) என்பது ஐந்தாவது குறியாகச் சேர்க்கப்பட்டி.ருக்கிறது. உடம்பில் திசுக்களைச் சேதப்படுத்தும் பாக்டீரியாவையோ, நஞ்சுகளையோ, அல்லது வேறு அன்னியப் பொருள்களையோ உடம்பானது தன்னிடமிருந்து அப்புறப் படுத்துவதற்காக முயலுகின்ற செயலே அழற்சியாகும். அழற்சி பாக்டீரியாவினால் ஏற்பட்டால் அப்போது மேற்கூறிய நான்கு குறிகளும் தோன்றும். அதனுடன் சில வேளைகளில் கட்டிகளும் உண்டாகலாம். பாக்டீரியா இல்லாமல் திசுக்கள் சேதம் அடைந்து அழற்சி ஏற்பட்டால் வேதனையும் வீக்கமும் குறைவாகவே இருக்கும்.

அழற்சி காணும் இடத்தில் இரத்தக்குழாய்கள் விரிந்து இரத்தம் மிகுதியாக வந்து சேரும். அந்த இடம் சிவந்து தோன்றுவதும், சூடாயிருப்பதும் அதனால்தான். இரத்தக் குழாய்கள் விரிவதும், இரத்தம் வந்து சேர்வதும், உணர்ச்சி நரம்புகளை அழுத்தி வலி உண்டாகும்படி செய்கின்றன. இரத்தம் மிகுதியாக வந்து பாயும்போது இருதயத்தின் துடிப்பு இரத்தக் குழாய்களிலும் பரவி விண் விண் என்று துடித்து நோவு தரும். இரத்தக் குழாய்களில் அதிக இரத்தம் வந்து சேரும்போது அவைகளிலிருந்து கசிவு ஏற்படுகிறது. கசியும் இரத்த நீரும் அதில் உள்ள இரத்த வெள்ளணுக்களும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உடையவை. இவ்விரண்டு உயிர்களும் இடும் போரின் விளைவே சீழ். சிதைந்தும் சிதையாமலும் இருக்கும் இவ்வணுக்களையும் பாக்டீரியாவையும் மைக்ராஸ்கோப் வாயிலாகக் காணலாம்.

சிகிச்சை : உடம்பிலுள்ள இரத்த வெள்ளணுக்கள் பாக்டீரியாவைக்கொன்று அழற்சியை நீக்க முயலுகின்றன. அவற்றிற்கு உதவுவதே மருத்துவர் செய்யக் கூடிய சிகிச்சையின் நோக்கம். அழற்சி உண்டான பகுதியை அசையாமல் வைத்துப் பாக்டீரியாவை அழிக்கவும், அவைகளிலிருந்து உண்டாகும் நஞ்சை முறிக்கவும் கூடிய மருந்துகளைப் பயன் படுத்தவேண்டும். தோலில் அழற்சி கண்டால் நஞ்சுகொல்லி மருந்துகளை வைத்துக் கட்டுக் கட்டவேண்டும். மூக்கில் கண்டால் மருந்து நீரைக்கொண்டு கழுவவும், வாயில் கண்டால் மருந்து நீரைக் கொப்பளிக்கவும், உணவுப்பாதையில் கண்டால் ஆன்டிபயோட்டிக்குகள் (Antibiotics) போன்ற மருந்துகளை உண்ணவும் வேண்டும். நுண்ம நஞ்சுமாற்றி (Antitoxin), நச்செதிர்ப்புச் சீரம் (Antiserum) ஆகியவற்றை ஊசிகுத்துவதுமுண்டு. அழற்சி வேகத்தைக் குறைப்பதற்காகவும் சீழ் உண்டாவதைக் குறைப்பதற்காகவும் சுருக்கு மருந்துகளைப் (Astringents) பயன்படுத்துவர். என். சே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அழற்சி&oldid=1455446" இலிருந்து மீள்விக்கப்பட்டது