கலைக்களஞ்சியம்/அழுத்தக்கலம்
அழுத்தக்கலம் (Autoclave) காற்றுப் புகாமல் மூடி வைக்கத்தக்க ஒரு கலம். திரவங்களின் கொதி நிலையைவிட அதிகமான வெப்பநிலையில் இதில் அவற்றைச் சூடேற்றலாம்.
இது வலிவான எஃ கினாலான கலம். இது அதிகமான வெப்பத்தைத் தாங்குமாறு அமைக்கப்படும். அழுத்தம் குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் திறந்து அதைக்குறைக்கும் காப்பு வால்வும், அழுத்தமானியும் இதில் இருக்கும். இதில் பல வகைகள் உண்டு. ஆஸ்பத்திரிகளில் ரண சிகிச்சைக் கருவிகள் முதலிய வற்றைக்கிருமி சுத்தப்படுத்த அவை இதற்குள் 115° வெப்பநிலையில் கொதிக்கும் நீரில் இடப்படுகின்றன. பல ரசாயனத் தொழில்களில் பொருள்களை வேகவைக்க இது பயன்படுகிறது. மெழுகுவர்த்திகள், கரித்தார்ப் பொருள்கள் முதலியவற்றின் தயாரிப்பிலும் இது பயனாகிறது. உயர்ந்த அழுத்தங்களில் ரசாயன வினைகளை நிகழ்த்த அழுத்தக்கலம் மிகவும் ஏற்றது.