கலைக்களஞ்சியம்/அழுத்தக் குக்கர்
அழுத்தக் குக்கர் (Pressure cooker) உயர்ந்த அழுத்தத்தில் உணவைச் சமைக்க உதவும் ஒரு சமையற்கலம். உருளை வடிவமான இது காற்றுப்புகாத மூடியையும், நீராவியைக் கட்டுப்படுத்தும் வால்வையும்,
அழுத்தமானியையும் கொண்டது. இதைத் திறந்து இதற்குள் சிறிதளவு நீரை ஊற்றிச் சமைக்கவேண்டிய உணவையும் இட்டுக் கலத்தை இறுக மூடி அடுப்பின் மேல் வைத்துவிட வேண்டும். உள்ளிருக்கும் நீர் ஆவியாகி அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த அழுத்தத்தினால் கலத்தின் வெப்ப நிலை உயருகிறது. ஆகையால் சாதாரணப் பாத்திரத்தைவிட இதில் பொருள்கள் சுமார் பத்து மடங்கு விரைவாக வெந்துவிடுகின்றன. நீராவி வால்வைக் கட்டுப்படுத்திக் கலத்தின் அழுத்தத்தையும், இதனால் வெப்பநிலையையும் தேவையானவாறு மாற்றலாம். இதைக்கொண்டு சில நிமிஷங்களில் பருப்பை வேக வைத்துவிடலாம். பெரிய அழுத்தக் குக்கர்களில் பல உணவுப்பொருள்களை ஒரேசமயத்தில் வேகவைப்பதற்கு ஏற்றவாறு பல தட்டுகள் இருக்கும்.
அழுத்தக் குக்கரினால் சமையலுக்குத் தேவையான காலம் குறைவதோடு எரிபொருளும் சிக்கனமாகிறது. மிகக் குறைவான அளவுள்ள நீரில் பொருளை வேகவைப்பதால் அதிலுள்ள உணவுச் சத்துக்கள் கெடாமல் இருக்கும். ஆனால் பொருள்கள் மிக விரைவில் வெந்துவிடுவதால் அவை மிகையாக வெந்து, அவற்றின் சுவையும் சத்தும் கெட்டுவிடக்கூடும். சிலநாள்பழக்கத்தில் சரியான பதத்தை முடிவு செய்து இக்குறையைத் தவிர்க்கமுடியும்.
உயரமான மலைகளின்மேல் நீரின் கொதிநிலை குறைவதால் அங்குத் திறந்த பாத்திரங்களில் சமைப்பது கடினம். இத்தகைய இடங்களுக்கு அழுத்தக் குக்கர் மிகவும் ஏற்றது.
உயர்ந்த வெப்பநிலையில் பொருளை வேகவைக்கும் அழுத்தக் குக்கர் உணவு வகைகளை டப்பியில் அடைத்துப் பாதுகாக்க ஏற்றது. ஏனெனில் அந்த வெப்பநிலையில் உணவைக் கெடுக்கும் சிற்றுயிர்கள் எளிதில் மறைந்துபோகின்றன.