கலைக்களஞ்சியம்/அவதானம்

அவதானம் என்பது நினைவாற்றலையும் ஊன்றிய கவனத்தையும் குறிக்கும். இதிலிருந்து அது ஒரேசமயத்தில் பல செயல்களைக் கவனித்துச்செய்யக்கூடிய ஞாபகத் திறமைக்குப் பெயராயிற்று. அவ்வாறு எத்துணைச் செயல்களைக் கவனிக்கக் கூடுமோ, அவற்றிற்கேற்றவாறு இது அஷ்டாவதானம், தசாவதானம், சோடசாவ தானம், சதாவதானம் எனப் பலவாறு சொல்லப்படும்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரெனக் கருதப்படும் அஷ்டாவதானம் ஆதி சரவணப்பெருமாள் கவிராயர், இலக்குமணப்பிள்ளை என்பவருக்கு எழுதிய சீட்டுக் கவியிலே அஷ்டாவதான முறையைக் குறித்துள்ளார் (பெருந்தொகை 1790).

வாய் வேலுமயிலும் என்று கூறிக்கொண்டே யிருத்தல், நால்வரை அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதிய கவியின் அடியைக் கூறிப் பாட்டை முற்றும் சொல்லி எழுதச் செய்தல், காலாலும் கையாலும் கவிதையெழுதுதல், கணக்குரைத்தல், இலக்கம் உரைத்தல், திரை மறைவிலே ஆடும் சூதுக்கும் சதுரங்கத்துக்கும் இந்தக் காய்களை நகர்த்துக என்று கூறுதல், குதிரையடி கூறல், முதுகில் எறியும் பருக்கைக் கற்களையாவது நெல்லையாவது எண்ணிக் கூறுதல் ஆகியவை அஷ்டாவதானம் எனப்படும். இவற்றிற் சில மாறி வழங்கியும் இருக்கக்கூடும். பத்துச் செயல் தசாவதானம், பதினாறு செயல் சோடசாவதானம், நூறு செயல் சதாவதானம். இக்காலத்திலே இலாடசங்கிலி சேர்த்தல், பத்திரிகை கூறல் போன்ற தம் திறமைக்கேற்ற செயல்களையும் அமைத்துக்கொண்டுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவதானம்&oldid=1503200" இலிருந்து மீள்விக்கப்பட்டது