கலைக்களஞ்சியம்/அஸ்க்லிபியடேசீ

அஸ்க்லிபியடேசீ (Asclepiadaceae) : எருக்குக் குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த செடிகளை எளிதில் அறிந்துகொள்ளலாம். பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகளும் குற்றுச் செடிகளும், சில பெருங் கொடிகளும் இதில் உண்டு. ஏறக்குறைய எல்லாவற்றிலும் வெண்மையான பாலுண்டு. இந்தக் குடும்பம் அப்போ சைனேசீ குடும்பத்திற்கு நெருங்கிய உறவுடையது. அந்தக் குடும்பச் செடிகளைப்போலவே இவையும் அநேகமாக அயனமண்டலத்தில் வளர்பவை. சுமார் 320

எருக்கு
கிளை
1.மொக்கு
2. பூ
3. சூலகம்
4. மகரந்தப்பை
5. மகரந்தத் திரள்

சாதியும், 1700 இனமும் இதில் உண்டு. இந்தக் குடும்பத்திற்கு முக்கியமான இடம் ஆப்பிரிக்கா. இலைகள் எதிரொழுங்கு, தனி, இலையடிச் செதிலில்லாதவை. பூ ஒழுங்கானது. இதழிணைந்தது. சாதாரணமாகக் குடை மஞ்சரி அல்லது வளர்நுனி மஞ்சரியாக இருக்கும். உறுப்புக்கள் வட்டத்திற்கு ஐந்தாக இருக்கும். புல்லி வட்டம் 5,அடி வரையில் பிரிவுபட்டது. அல்லி வட்டம் 5 பிரிவுள்ளது ; சக்கர வடிவம். சில வகையில் அகவிதழ்க்கேசம் உண்டு. கேசரம் 5; ஒரு குழாயாகச் சேர்ந்திருக்கும். இந்தக் குழாயிலிருந்து வெளிப்புறமாக உபமகுடம் வளர்ந்திருக்கும். மகரந்தப் பைகள் தனித்திருக்கலாம், அல்லது சூல் முடியுடன் சேர்ந்திருக்கலாம். பையின் ஒவ்வொரு அறையிலும் உள்ள மகரந்தமெல்லாம் ஒன்று சேர்ந்து தகடு போன்ற மகரந்தத் திரளாக (Pollinium) இருக்கும். சில வகைகளில் ஒவ்வோரறையிலும் ஒரே திரள் இருக்கும். சிலவற்றில் இரண்டு திரள்கள் இருக்கும். இரண்டு மகரந்தப் பைகளின் அடுத்தடுத்துள்ள அறைகளிலுள்ள மகரந்தத் திரள்கள் இந்தப் பைகளுக்கு நடுவே மேல்முனையில் இருக்கும் ஒரு சுரப்பி போன்ற இணைகருவியில் (Translator) ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த இணைகருவியைத் தூக்கினால் மகரந்தத்திரள்கள் அதனோடு வந்துவிடும். மகரந்தத் திரள்களுடன் கூடிய இந்த இணைகருவி பூவிலே தேன் உண்ண வரும் பூச்சியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். எருக்கம் பூவுக்கு வரும் கருவண்டு என்னும் தச்சன் தேனீயின் (Carpenter bee) மயிர்களில் இது ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மகரந்தத் திரளமைப்பு ஆர்க்கிடுகளில் (Orchids) உள்ள அமைப்புப் போல இருக்கிறது. சூலகம் மற்றவுறுப்புக்களுக்கு மேலேயுள்ளது. 2 சூலிலையுள்ளது. அவ்விலைகள் தனித் தனிச் சூலறைகளாகும். இரண்டு சூல்தண்டுகளும் நுனியில் ஒன்றாகச் சேர்ந்து ஐந்துகோண வடிவமான ஒரு தட்டுப்போல இருக்கின்றன. அந்தத் தட்டின் மேற்பரப்பே சூல்முடியாகும். ஒவ்வொரு பூவிலிருந்தும் இரண்டு ஒருபுற வெடிகனிகள் (Follicles) உண்டாகும். விதைகள் மிகப்பல. தட்டையானவை. விதையின் ஒரு முனையில் நீண்ட பட்டுப்போன்ற மயிர்க்குச்சம் (Coma) குடுமிபோல இருக்கும். கனி வெடிக்கும் போது இந்தக் குச்சத்தின் உதவியால் விதைகள் பூச்சி போலப் பறந்துபோகும். வெயிற்காலத்தில் எருக்கு விதை பறப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

இந்தக் குடும்பத்திலே பூக்கள், பூச்சி மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மிகவும் விசித்திரமாக அமைந்திருக்கின்றன. இதிலுள்ள செடிகளும் பல விசித்திர அமைப்புடையவை. சில வடம்போன்ற கொடிகள். சில தொற்றுச் செடிகள். சிலவற்றில் இலை மிகவும் மாறுபட்டு ஜாடிபோல இருக்கும் ; அது நீரைச் சேகரித்து வைத்துக்கொள்ள உதவும். சில சப்பாத்திக் கள்ளிபோன்ற இலைத்தண்டுள்ளவை. சிலவற்றில் இலையே இல்லை. தண்டு சாட்டை போன்ற சிலவற்றில் சடைச்சடையாக வளரும். இன்னும் அடித்தண்டு கிழங்குபோலப் பருத்து நீரைச் சேர்த்து வைத்திருக்கும்.

இந்தக் குடும்பச் செடிகள் பொருளாதார வகையில் மிகவும் சிறந்தில்லாவிடினும் பல விதத்தில் மிகுந்த பயனுடையவை. இவற்றில் மருந்துக்குதவும் நல்ல மூலிகைகள் பல உண்டு. இலங்கையில் உள்ள ஒரு செடியின் பாலைப் பசுவின் பாலைப் போலப் பருகுகின்றனர். அதே மாதிரி பால்தரும் வேறொருவகைப் பசுச்செடி (Cow plant) ஆப்பிரிக்காவில் உண்டு. பல செடிகளின் இலைகள் கீரையாகச் சமைக்க உதவுகின்றன. சில சாயம் போடுவதற்கு உதவும் செடிகள். பலவற்றில் ரப்பர் உண்டாகிறது. சிலவற்றில் நல்ல நார் எடுக்கிறார்கள். எருக்கநார் பலரும் அறிந் பல செடிகள் அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

எருக்கு, வேலிப்பருத்தி (Daemia), பாலைக்கொடி (Tylophora), மாகாளிக் கிழங்கு அல்லது மாவல்லிக் கிழங்கு, நாட்டு நன்னாரி (Hemidesmus), கள்ளிமுளை யான் (Boucerosia) ஆகிய இந்தக் குடும்பத்துச் செடிகள் சாதாரணமாக இந்தியாவில் உள்ளவை. இவற்றைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு.