கலைக்களஞ்சியம்/ஆகாசத்தாமரை

ஆகாசத்தாமரை நீரின்மேல் மிதந்து கூட்டமாக வளரும் தாவரம். இலைகள் ஆப்பு வடிவமாக இருக்கும். அவை ரோசாப் பூவின் இதழ்களைப்போல நெருக்கமாக அடுக்கியிருக்கும். இந்த இலையடுக்கின் அடியில் வேர்கள் கொத்தாகக் குஞ்சம்போலத் தொங்கிக்கொண்டிருக்கும். இலைக்கணுச் சந்திலிருந்து சிறு ஓடுதண்டுகள் (Stolons) கிளைக்கும். அவற்றின் நுனியிலும் இலைக்கொத்துக்கள் உண்டாகும்.

ஆகாசத்தாமரை
1. செடி. a. பூங்கொத்து.
2. பூங்கொத்து நெடுக்குவெட்டு, a. பெண்பூ. b. ஆண் பூக்கள். G. அலிப்பூக்கள்.

இந்தச் செடி குளங்குட்டைகளில் பொதுவாக உண்டு. இந்தியா, இலங்கை முதலிய அயனமண்டல நாடுகளில் வளர்கிறது. குடிப்பதற்கு உதவும் ஊருணிகளில் இந்தச் செடியிருப்பது நல்லது என்பார்கள். நீரில் மிதக்கும் அழுக்கு இதன் வேரில் ஒட்டிக்கொள்ளும் என்பார்கள். அதற்கேற்ப இந்தச் செடியின் வேர் அழுக்குப் படிந்ததுபோல இருக்கும். இது ஒரு சிறந்த மூலிகை.

குளம் முதலிய நீர்நிலைகளில் காடுபோலக் களையாக வளர்ந்திருக்கும் ஐக்கார்னியா (Eichhornia) என்னும் அழகிய பூண்டையும் ஆகாசத்தாமரை என்பதுண்டு. அதைப்பற்றிப் பிசாசுத் தாமரை என்னும் தலைப்பில் பார்க்க. குடும்பம்: ஆரேசீ (Araceae). இனம் : பிஸ்டியா ஸ்ட்ராட்டியோட்டிஸ் (Pistia stratiotes).