கலைக்களஞ்சியம்/ஆக்சாலிக அமிலம்

ஆக்சாலிக அமிலம் (Oxalic acid) : குறியீடு : (HOOC-COOH) இருமூலக் கரிம அமிலங்களில் எளிய அமைப்புள்ளது இதுவே. இதில் கார்பாக்சில் தொகுதிகள் நேரே இணைந்துள்ளன. இது பல தாவரப்பொருள்களில் காணக்கிடைக்கும். இதன் கால்ஷிய உப்பு உயிரணுக்களில் உள்ளது. சிறுநீரில் இது சிறிது அளவு இருக்கும். மரத்தூளைக் காரத்துடன் இளக்கி நீரிற் கழுவிக் கார ஆக்சலேட்டுகளாக இதைப் பெறலாம். சோடியம் பார்மேட்டை 200° வெப்பநிலையில் சூடேற்றி இது பெறப்படுகிறது. பட்டகவடிவான படிகங்களாக இதைப் பெறலாம். நீரிற் கரையும். அடர் கந்தகாமிலத்துடன் இதைச் சற்றுச் சூடேற்றினால் இது கார்பன் மானாக்சைடு, கார்பன் டையாக்சைடு நீர் ஆகிய பொருள்களாகச் சிதைகிறது. இதன் இரு கார்பாக்சில் தொகுதிகளும் மிக அருகில் இருப்பதால் இது எளிதில் கார்பன் டையாக்சைடை இழந்து, ஒரு மூல அமிலமான பார்மிக அமிலமாக மாறுகிறது. அமிலங்கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு இதை ஆக்சிகரணிக்கும். இவ்வினை ஆக்சாலிக அமிலத்தின் அளவறியப் பயன்படுகிறது.

பயன்கள்: ஆக்சாலிக அமிலம் தொழில்களில் பல வகைகளில் பயன்படுகிறது. இந்த அமிலமும், இதன் அலுமினிய உப்புக்களும், ஆன்டிமனி உப்புக்களும் நிறம் நிறுத்திகளாகப் பயன்படுகின்றன. அச்சுத் தொழிலிலும், தோல் பதனிடுதலிலும் இவை பயனாகின்றன. மைக்கறைகளை நீக்க ஆக்சாலிக அமிலம் பயன்படும்.

ஆக்சாலிக அமிலம் ஒரு நஞ்சு. சுண்ணாம்பும் சீமைச் சுண்ணாம்பும் இதற்கு மாற்றாகும். எஸ். எஸ். க.