கலைக்களஞ்சியம்/ஆசார்ய ஹ்ருதயம்
ஆசார்ய ஹ்ருதயம் அஷ்டாதச ரகசியம் அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருடைய தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றியது. இது நம்மாழ்வாருடைய பெருமை, அவர் அருளிய திருவாய்மொழி முதலிய நூல்கள், ஏனைய ஆழ்வார்கள் அருளிய நூல்கள் ஆகியவற்றின் பெருமை, அவற்றின் முக்கியக் கருத்துக்கள் இவற்றை விளக்கும் நூல். பொதுவாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியிலுள்ள பலவகைக் கருத்துக்களையும், அவற்றைப் பாடிய ஆழ்வாருடைய மனநிலையையும் ஆராய்ந்து கூறும் ஒரு சிறந்த ஆராய்ச்சி நூலென்றே இதனைக் கூறுதல் வேண்டும். இந்நூல் நான்கு பகுதிகளாக உள்ளது. இதன் ஆசிரியர் பெரும்பாலும் ஆழ்வார் பாசுரங்களின் அடிகளையும் தொடர்களையும் இடையிடையே தம்முடைய சில சொற்களைக் கொண்டு இணைத்து இந்நூலை ஆக்கியிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. ஆ. பூ