கலைக்களஞ்சியம்/ஆசிரியர் கல்வி

ஆசிரியர் கல்வி : பண்டைக் கால முதல் எல்லா நாட்டுக் கல்விப்புலவர்களும் ஆசிரியர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். வேதங்களும் வேதங்களுக்குப்பின் எழுந்த இலக்கியங்களும் ஆசிரியருடைய சிறந்த பண்பாட்டையும் சீரிய ஒழுக்கத்தையும் பற்றிக் கூறுகின்றன. கிரேக்க ஆசிரியர்களின் பிரதிநிதிபோல் விளங்கும் பிளேட்டோ யாரையும் ஆராயாமல் ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், ஆசிரியர்களைத் தணிக்கை செய்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். அவரைப் போலவே அரிஸ்டாட்டில், புளூட்டார்க், குவின்டிலீயன், லூதர், முல்காஸ்டர் போன்ற பல பெரிய கல்விப்புலவர்களும் வற்புறுத்தியுளர்.

ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆசிரியர் கல்வி என்பது உலகப் பெரிய கல்விப் புலவரான பெஸ்டலாஜி என்பவரால் உளவியலை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டது. ஐரோப்பாவில் முதன்முதலாக நிறுவப்பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பாட சாலைகள் அவரால் பர்கடார்ப் என்னுமிடத்திலும் வெர்டன் என்னுமிடத்திலும் அமைக்கப்பட்டனவாம். புகழ்பெற்ற ஆசிரியர்களான ஹெர்பார்ட்டும், புரோபெலும் (Froebel) அவற்றில் பயிற்சி பெற்றார்கள். ஹெர்பார்ட், 1809ஆம் ஆண்டில் கோனிக்ஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையும் அதற்குத் துணையாக ஒரு பள்ளிக்கூடமும் அமைத்தார். இவ்வாறு பெஸ்டலாஜியும் ஹெர்பார்ட்டும் வகுத்த ஆசிரியர் கல்வி பின்னால் புரோபெல், ஸ்பென்சர், மான்டிசோரி, டூயி முதலியவர்களால் விருத்தி செய்யப்பெற்றது.

இந்தியாவில் பண்டைக் காலத்திலும் ஒரு குறிப்பிட்டவகை ஆசிரியர் கல்வி இன்றியமையாது வேண்டப்பட்டதாயிருந்தது. ஆசிரியர் சில குணங்களும் தகுதிகளும் உடையவராயிருக்கவேண்டும். ஆசிரியர் தகுதி பார்த்து நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களே சமூகத்தில் தலைசிறந்த மரியாதை பெற்றவர்களாயிருந்தார்கள். அரசன் குடிகளுக்குத் தீமை நேராதவாறு பாதுகாப்பான். ஆசிரியரோ மக்களுக்கு எல்லா நலங்களும் உண்டாகுமாறு செய்வார். அதனால் அரசனும் அமைச்சரும் ஆசிரியர்க்குத் தலைவணங்கக் கடமைப்பட்டவராவர். ஆசிரியர் புலமையும் ஒழுக்கமும் உடையவராயிருந்தால் மட்டும் போதாது; அவர் கல்வி கற்பிக்கும்முறை தெரிந்தவராகவுமிருத்தல் வேண்டும்.

இப்போது கல்வி பலதிறப்பட்டதாக இருப்பதால் ஆசிரியர் கல்வியும் பல திறப்பட்டதாக இருக்கின்றது. அதனால் குழந்தைகள் கல்வி, ஆரம்பக் கல்வி, நடுத்தரக் கல்வி, சித்திரக் கல்வி, தொழிற் கல்வி, உடற் பயிற்சிக் கல்வி, ஊனம் உள்ளோர் கல்வி என்னும் பலவிதமான கல்வியைக் கற்பிப்பதற்குத் தனித்தனியே ஆசிரியர் கல்விக் கூடங்கள் உண்டாயிருக்கின்றன. சில பள்ளிக் கூடங்கள் மான்டிசோரி முறையையும், சில பள்ளிக் கூடங்கள் ஆதாரக்கல்வி முறையையும்கையாளுகின்றன.

ஆசிரியர் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது என்றும், அவர் நன்றாகக் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் வேறு பல பண்புகளும் உடையவராயிருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் கல்வி பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அந்தப் பண்புகளாவன: (1) கல்வி, (2) பண்பாடு, (3) உடல்வளம், (4) அறிவுத்திறன், (5) உணர்ச்சி அமைதி, (6) சமூக ஒப்புரவு.

இந்தப் பண்புகளை உடையவரே ஆசிரியர் பயிற்சி பெறுவதால் நன்மை பெறுவர். ஆதலால் ஆசிரியராக விரும்புவோரை விஞ்ஞான முறையில் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இம்மாதிரியே மேனாட்டில் பல பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்றது. ஆனால் எந்த நாட்டிலும் தகுதியுடையவர்கள் ஆசிரியராக விரும்புவது குறைவாயிருக்கின்றது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்த விஷயம் ஆராயப்பட்ட போதிலும் 1944ஆம் ஆண்டில் வெளிவந்த சார்ஜென்ட் அறிக்கையே அதைப்பற்றித் தெளிவாக எடுத்துரைத்தது. இதர நாடுகளில் கல்வி பெருகியிருப்பது போல இந்தியாவிலும் பெருக வேண்டுமானால், இருபத்துமூன்று இலட்சம் ஆசிரியர்கள் தேவையாகும். ஆனால் நடைபெற்றுவரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கூடங்களின் தொகையையும், அவற்றில் பயிற்சி பெறுவோரின் தொகையையும், அங்குச் செலவாகும் பணத்தையும் கவனித்தால் தேவைக்குத் தக்கவாறு நடைபெறவில்லை என்பது தெரியவரும்.

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கும் கல்லூரிகள் (1951) :

(1) பல்கலைக் கழகப் பயிற்சி இலாகாக்கள் 5
(2) பயிற்சிக் கல்லூரிகள் 41
(3) பயிற்சி வகுப்பும் உள்ள சாதாரணக் கல்லூரிகள் 35

ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளும், பயிற்சி வகுப்புக்களுமுள்ள மற்றப் பள்ளிகளும் (1949-50) :

மொத்தம்

702

மாணவர்கள்

65,331

செலவு

ரூ 1,48,07,551

பயிற்சிக் கல்லூரிகளும், பயிற்சி வகுப்புக்களுள்ள மற்றக் கல்வி நிலையங்களும் (1949-50) :

மொத்தம்

67

மாணவர்கள்

4,842

செலவு

ரூ.37,36,934

இவ்வாறு ஆசிரியர் தொகை குறைவாயிருந்தாலும் அவர்களுடைய திறமையைப் பெருக்குவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுபற்றி ஆராய்ச்சி நிலையங்கள் 1950-ல் ஒரு சங்கமாகச் சேர்ந்து, ஆண்டுதோறும் கூடி, ஆசிரியர் கல்விபற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்து வருகின்றன. டி. கே. என். மே.