கலைக்களஞ்சியம்/ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு ஆடித் திங்களில் முதன்முதலாக ஆறுகளில் நீர் பெருகி வருவதைக் களிப்புடன் வரவேற்று இந்துக்கள் கொண்டாடும் விழா. இது ஆடி 18ஆம் நாளில் கொண்டாடப்படுவதால் இதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவர். அன்று சித்திரான்னங்கள் செய்துகொண்டு, ஆற்றங்கரைக்கு ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் சென்று, நீரிலும் கரையிலுமாக நின்றுகொண்டு உண்டு களிப்பர். இது பழந் தமிழ் இலக்கியங்கள் கூறும் ‘புனலாடல்’ என்ற விழாவுடனும், பண்டைய சமஸ்கிருத இலக்கியங்கள் கூறும் ‘நவோதகாப்புத்கமம்’ (புதுநீர் வரவேற்கை) என்ற விழாவுடனும் தொடர்புடையதென்று கூறலாம். வே. ரா.