கலைக்களஞ்சியம்/ஆட்டமைதானம்

ஆட்டமைதானம் (Playground): பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.

ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும. அந்த இடம் மேடுபள்ளங்களற்றுச் சமதளமாக இருக்கவேண்டும். குழந்தைகள் ஆட்டமைதானத்தை அடையப் போக்குவரத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடந்துவருமாறு அது அமையக்கூடாது. அது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிகத் தொலைவில் இருக்ககூடாது. மைதானத்தில் ஏற்படுத்த இருக்கும் விளையாட்டு வசதிகளையொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதானத்தின் சராசரிப் பரப்புச் சுமார் இருபது ஏக்கர் எனக் கொள்ளப்படுகிறது.

ஆட்டமைதானத்தின் பக்கங்களிலும், மூலைகளிலும், சறுக்குமேடை, உடைபயிற்சி ஏணி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஆட்டங்களுக்கும் ஓட்டங்களுக்கும் மைதானத்தில் நடுவே இடம்விடப்படுகிறது. நீந்தும்குளம் மைதானத்திலுள்ள அனைவரும் எளிதில் பயன்படுத்தத்தக்கவாறு அமைக்கப்படுகிறது. மைதானத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, குழிகளும் கற்களும் இல்லாமல் கூடிவரை மழமழப்பாக இருக்கவேண்டும். மைதானத்தை மிருதுவான புல்வெளியாக அமைத்தல் இன்னும் நல்லது. மைதானத்திற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் விளையாடும் குழந்தைகளும் போதிய பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை மரங்கள், செடி, கொடிகள் முதலியவற்றால் அழகுபடுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

விளையாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியது அவசியம். பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அமைக்கப்படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், ஊஞ்சல்களும், வேறு பல சாதனங்களும் இருக்கவேண்டும். குழந்தைகள் விளையாட நாய், பூனை, முயல் முதலிய சிறு விலங்குகளும், புறாவைப் போன்ற பறவைகளும் அங்கே விடப்படலாம். அவர்கள் திளைத்துக் களிக்க ஆழமற்ற சிறு குளமும், களைத்த பின் இளைப்பாற நிழலுள்ள இடங்களும் இருக்கவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு ஆட்டங்களில் நாட்டம் செல்வதால் அவர்களுக்கு மைதானத்தில் வெவ்வேறு பிரிவுகள் இருக்கவேண்டும். பெண்களது பிரிவில் ஆட்ட வசதிகளோடு நடனத்திற்கும், பூவேலை, பின்னல் வேலைபோன்ற பொழுதுபோக்குகளுக்கும் வசதி தரலாம். பெண்களைவிட இளைஞர்களே அதிகமாக விளையாட வருவதால் அவர்களது பிரிவில் அதிகமான இடவசதி இருத்தல் வேண்டும். எளிய கருவிகளையும், தட்டுமுட்டுக்களையும் செப்பனிடும் வசதிகளை இங்கு அமைப்பதால் இந்த வேலைகளில் இளைஞர்களுக்கு ஆர்வம் பிறக்கும்.

ஆட்டமைதானத்தில் முதிர்ந்தோர்க்கும் இடம் இருந்தால் தம் குழந்தைகளுடைய விளையாட்டுக்களில் பெற்றோர்களுக்குச் சிரத்தை ஏற்படுவதோடு அவர்களது பொழுதுபோக்குக்கும் உதவும். இப்பிரிவில் பெற்றோர் குழந்தைகளுடன் அளவளாவவும், சிற்றுண்டிகள் அருந்தவும், இசை கேட்கவும் வசதிகள் செய்யலாம்.