கலைக்களஞ்சியம்/ஆட்டவா ஒப்பந்தம்
ஆட்டவா ஒப்பந்தம் (Ottawa agreement) : 1929-ல் ஏற்பட்ட உலக வியாபார மந்தத்தினால் பிரிட்டனும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளும் தங்கள் நாட்டு வாணிபத்தைக் காத்துக் கொள்வதற்கு வழி தேடலாயின. அம்முயற்சியின் பலன் ஆட்டவாவில் 1932-ல் நடந்த ஒரு மாநாட்டில் தோன்றியது. பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கானடா, நியூஜீலாந்து, தென் ரோடீஷியா ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டன. டொமினியன் அந்தஸ்து பெறாத நாடுளின் சார்பாகப் பிரிட்டனே பிரதிநிதித்துவம் வகித்து இம்மாநாட்டில் பேச்சுவார்த்தைகளை நடத்திற்று. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திலுள்ள நாடுகள் அச்சாம்ராச்சியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கு முதல் சலுகையளிக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டில் ஏற்பட்ட பதினொரு ஒப்பந்தங்களின் முடிவு. சுதேசப் பொருள்களுக்கு முதல் சலுகை, பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாட்டுப்பொருள்களுக்கு இரண்டாவது சலுகை, உலத்திலுள்ள மற்ற நாட்டுச் சரக்குக்களுக்கு மூன்றாவது சலுகை என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாட்டின் முடிவுகள் உருவாக்கப்பட்டன. இம்மாநாட்டின் கொள்கை சர்வாதிகாரிகள் ஆண்ட இத்தாலி, ஜெர்மனி முதலிய மற்ற நாடுகளின் சர்வதேச வாணிபக் கொள்கைகளையும் ஓரளவு உருவாக்கின எனின் தவறாகாது. சாம்ராச்சியப் பொருள்கள் பிரிட்டனில் தடையின்றிப் புகவேண்டுவதற்கான தலையாய நோக்கம் எனின் அதுவும் தவறாகாது. இவ்வேற்பாடுகளில் சில இந்தியாவில் பெரிய எதிர்ப்பைக் கிளப்பியதால், 1935-லும் 1939-லும் பிற்சேர்க்கைகளாகச் சில ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. சாம்ராச்சியச் சலுகை முறையை மிகவும் ஆதரித்த சில நாடுகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வாணிபத்தில் மிகுதியாக ஈடுபடவேண்டியதன் தேவையை உணரலாயின. அச்சாம்ராச்சியச் சலுகைக் கொள்கைகள் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரு நாட்டிலும் நடைமுறையில் இல்லை என்றே கூறலாம்.