கலைக்களஞ்சியம்/ஆட்டோ

ஆட்டோ I, மகா (912-973) புனித ரோமானியப் பேரரசனான I-ம் ஹென்ரியின் மகன். இவன் 936-ல் ஜெர்மன் அரசனாக ஆக்கனில் முடி சூட்டப்பெற்றான். இவன் ஆட்சி தொடங்கிய காலத்தில் பல கலகங்களை அடக்க வேண்டியிருந்தது. பிரபுக்கள் கலகம் செய்ததால், படை மானியங்களைத் தன் குடும்பத் தலைவர்களிடையே பகிர்ந்து கொடுத்தான். தன் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் செய்து, தன் தம்பியான வென்சஸ்லாஸ் என்பனைக் கொன்ற போலசிலாவை 950-ல் அடக்கினான். 951-ல் ஆல்ப்ஸைக் கடந்து, லம்பர்டியில் 'லம்பர்டுகளின் மன்னன்' என்று முடி சூட்டிக் கொண்டான். இறந்துவிட்ட லொதேர் மன்னன் மனைவியான அடிலேடு என்பவளை மணந்துகொண்டான். 952-ல் ஜெர்மனியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை யடக்கச் சென்று, 954-ல் அதை அடியோடு நசுக்கினான். 954-ல் ஜெர்மனி மீது படையெடுத்த மாஜியர்களை ஆக்ஸ்பர்க் என்னுமிடத்தில் பெருந்தோல்வியுறச் செய்தான். அப்போது அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 961-ல் ரோமிற்குச் சென்று, அங்குப் போப் XII-ம் ஜானால் பேரரசனாக 962-ல் முடிசூட்டப்பெற்றான். 968-ல் மாக்டிபர்கில் ஒரு பிஷப்பு மடத்தை ஏற்படுத்தினான். 973-ல் மெமல்பென்னில் இறந்துபோனான்; அவன் உடலம் மாக்டிபர்கில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆட்டோ II (955-983) I-ம் ஆட்டோவின் மகன். 961-ல் ஆக்கனில் ஜெர்மன் மன்னனாகவும், 967-ல் ரோமில் தந்தையுடன் கூட்டுச் சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டப்பெற்றான். 974-ல் சாக்சனி மேற்சென்ற ஹரால்டு நீலப்பல்லன் என்னும் டேனிஷ் மன்னனைத் தோற்கடித்தான். பாவேரியா டியூக்கான ஹென்ரி செய்த கலகங்களை 978-ல்அடக்கினான். இவன் 982-இல் இத்தாலி மீது படையெடுத்தபோது சாரசன்களால் கலாபிரியாவில் முறியடிக்கப்பட்டான். இத்தோல்வியால் ஜெர்மனியில் இவனுக்கிருந்த அதிகாரமும் குலையத் தொடங்கிற்று. 983 டிசம்பர் 7-ல் இவன் ரோம் நகரத்தில் இறந்தான்.

ஆட்டோ III (980-1002) II-ம் ஆட்டோவின் மகன் ; இவன் தன் மூன்றாம் வயதிலேயே ஆக்கனில் முடிசூட்டப் பெற்றான். இவன் தாய் இவனுக்காக ஆட்சிபுரிந்தாள். 995-ல் இவன் ஆட்சியை மேற்கொண்டான். இவன் உறவினனான பிரூனோவைப் போப்பாக நியமித்தான். இவனுக்கு மதப்பற்று அதிகம் ; தன்னைக் ‘கிறிஸ்துவின் அடியவன்’ என்று கூறிக்கொண்டான். 1002-ல் இவன் சுரம்கண்டு இறந்தான். இவனோடு சாக்சன் வம்சம் முடிவுற்றது.

ஆட்டோ IV (சு.1175-1218) சாக்சன் டியூக் ஹென்ரியின் இரண்டாம் மகன். இவன் வளர்ந்ததெல்லாம் இங்கிலாந்திலேயே. 1198-ல் இவன் ஆக்கனில் ஜெர்மன் அரசனாக முடிசூட்டப்பெற்றான். இவனுக்கு ஜெர்மனியில் அதிக ஆதரவு கிடைக்கவில்லையாயினும், போப் III-ம் இன்னசன்டின் ஆதரவு இருந்தது ; இவன் உள்நாட்டுப் போரில் தோற்று, 1207-ல் இங்கிலாந்திற்குத் திரும்பினான். இவனுடைய எதிரியான பிலிப் அடுத்த ஆண்டே கொலையுண்டு இறந்து விட்டதால் இவன் மறுபடியும் ஜெர்மனியின் மன்னனானான். ஆனால் ஆங்கிலேயருடைய ஆதரவு இருந்தும், இவனால் ஜெர்மனியில் தன்னுடைய எதிரிகளை வெல்ல முடியவில்லை. 1218-ல் ஹார்ஸ்பர்க் என்னுமிடத்தில் இவன் இறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆட்டோ&oldid=1456474" இலிருந்து மீள்விக்கப்பட்டது