கலைக்களஞ்சியம்/ஆண்டு
ஆண்டு : சாதாரண வழக்கத்தில் ஆண்டு எனப்படுவது புவியானது சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். வானவியலில் பலவகை ஆண்டுகள் உண்டு. அடுத்தடுத்த உத்தராயணங்களில் சூரியன் பூமத்தியரேகைக்கு உச்சமாக இருக்கும் சமயங்களுக்கு இடையிலுள்ள காலம் ஒரு சூரிய ஆண்டு ஆகும். சாதாரணமாக வழக்கத்திலுள்ள ஆண்டு இதுவே. இது 365 நாட்கள், 5 மணி, 48 நிமிடம், 46 செகண்டு உள்ளது. நட்சத்திர ஆண்டு என்பது சுமார் 20 நிமிடம் அதிகமானது. சம இராப்பகல்களின் முன்னிழுப்பினால் (Precession of the Equinoxes) இந்த வேறுபாடு தோன்றுகிறது. நட்சத்திர ஆண்டு வானவியற் கணக்குக்களில் மட்டும் வழக்கத்தில் உள்ளது. பன்னிரண்டு சாந்திரமாசங்கள் கொண்டது சந்திர ஆண்டு எனப்படும். இது 354 நாட்கள் கொண்டது. முஸ்லிம்களும், இந்துக்களில் சில வகுப்பினரும் இந்த ஆண்டைப் பின்பற்றுகிறார்கள். சில ஆண்டுகளுக் கொருமுறை ஒரு மாதத்தை அதிக மாசம் எனச் சேர்த்துக் கொண்டு, இவர்கள் சாந்திரமான ஆண்டிற்கும் சௌரமான ஆண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஈடு செய்கிறார்கள்.
நடைமுறையில் பயனாகும் ஆண்டைவிடச் சூரிய ஆண்டு சிறிது அதிகமாக உள்ளதால் ஏற்படும் பிழையை நீக்க, நான்காண்டுகளுக் கொருமுறை 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதனால் நடைமுறை ஆண்டின் நீளம் சூரிய ஆண்டைவிட அதிகமாகி விடுவதால் நூற்றாண்டுடைத் தொடங்கும் ஆண்டுகள் லீப் ஆண்டுகளாகக் கொள்ளப்படுவதில்லை. இதிலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. நூற்றாண்டுகளிலும் 400ஆல் வகுபடும் ஆண்டுகள் மட்டும் லீப் ஆண்டுகள். அதாவது 1500, 1800 போன்றவை லீப் ஆண்டுகள் அல்ல. ஆனால் 1600, 2000 போன்றவை லீப் ஆண்டுகள். பார்க்க: பஞ்சாங்கம், சகாப்தம்.