கலைக்களஞ்சியம்/ஆதாளை
ஆதாளை எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும்.
குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera).