கலைக்களஞ்சியம்/ஆதித்த சோழன்
ஆதித்த சோழன் (கி.பி. 871-907): இவன் விசயாலயன் மகன். இராசகேசரி வர்மன் என்னும் பட்டமுடையவன். கோதண்டராமன் என்னும் பெயருமுண்டெனத் தெரிகிறது. இவன் பல்லவ மன்னன் அபராஜித வர்மனை வென்றான். கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இவனுடன் சேரமான் தாணுரவி என்னும் சேர மன்னன் நட்பினன் என்றும், இவ்விருவரும் விக்கியண்ணன் என்ற ஒருவனுக்குச் 'செம்பியன் தமிழவேள்' என்னும் பட்டம் நல்கிச் சிறப்புப் பல செய்தனரென்றும் தெரிகின்றது. மற்றும் கங்கநாட்டு மன்னனான இரண்டாம் பிருதிவீபதி என்பானும் இவன் நட்பினன். திருப்புறம்பயம் முதலான இடங்களிற் சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்திருக்கிறான்.