கலைக்களஞ்சியம்/ஆந்த்ரசீன்

ஆந்த்ரசீன் (Anthracene) : குறியீடு இது ஒரு ஹைடிரோ கார்பன். கரித்தாரை வாலை வடிக்கும்போது 270°-லிருந்து 300°க்குள் வெளிவரும் கலவையிலிருந்து இதைப் பெறலாம். இதில் 5-10% ஆந்த்ரசீன் இருக்கும். இதைப் பின்னப் படிகமுறையில் (Fractional Crystallization) பிரித்தெடுத்துப் பிரிடீன் போன்ற திரவங்களிற் கரைத்துத் தூய்மையாக்கலாம். தூய ஆந்த்ரசீன் நிறமற்ற படிகங்களாகக் கிடைக்கும். இப் படிகங்கள் நீல நிறத்துடன் ஒளிரும். இதன் உருகுநிலை 218°. இது நீரில் மிகச் சிறு அளவே கரையும். சூடான பென்சீனில் இது அதிகமாகக் கரையும். குளோரினும் புரோமினும் ஆந்த்ரசீனுடன் கூடிக் கூட்டற் கூட்டுக்களையும், பிரதியீட்டுக் கூட்டுக்களையும் அளிக்கும். இது நைட்ரிக அமிலத்துடன் வினைப்பட்டு, நைட்ரோ ஆந்த்ரசீன்கள் என்ற கூட்டுக்களைத் தரும். கந்தகாமிலத்துடன் இது வினைப்பட்டு, ஆந்த்ரசீன் சல்போனிக அமிலங்களைத் தரும். ஆக்சீகரணப் பொருள்கள் ஆந்த்ரசீனுடன் வினைப்பட்டு, அதை ஆந்த்ரோகுவினோன் என்ற கூட்டாக மாற்றும். சாயத் தொழிலில் முக்கியமானது இக்கூட்டு.