கலைக்களஞ்சியம்/ஆனந்தரங்கப்பிள்ளை
ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761): சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் 1709-ல் பிறந்தார். இவர் தகப்பனார் பெயர்
திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின் தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் திருவேங்கடம் பிள்ளையின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென்வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப்பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படையெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன.
1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னர் ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டூப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761).
பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துணைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்தரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்திவந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி, பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக்களேயாகும்.
இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர்களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi-Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக்களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. எஸ். ஆர். பா.