கலைக்களஞ்சியம்/ஆனபிலாக்சிஸ்

ஆனபிலாக்சிஸ் (Anaphylaxis) ஒரு விலங்கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத்திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குடலில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக்சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசைகள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின்றன.

சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரையின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும்; நாடி வேகமாக அடிக்கும்; சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்காமல் உயிர் தப்பினால், மீண்டும் அச்சீரத்தைப் புகுத்தினாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற்படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால் சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆனபிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ்வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும்.

ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால் இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட்டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சியின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில் வசமாகா.

உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத்தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பாதிக்கிறது. ஆதலால், அப்பொருளுக்கு ஓர் எதிர்ப்பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டாகாது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத்திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொருளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற்றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறையும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச்சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளுகிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப்பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை.

மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தோல் தடிக்கும்; கீலுக்குக்கீல் வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்; கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக்குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்துவதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். என். சே.