கலைக்களஞ்சியம்/ஆன்டனி, மார்க்
ஆன்டனி, மார்க் (கி. மு. 83-கி. மு. 30) : ஜூலியஸ் சீசரின் கீழ் ராணுவத்தில் சேவை செய்து வந்த ஆன்டனி முதலிலிருந்தே சீசரின் நேசத்தைப் பெற்றான். சீசர் இறந்த பிறகு பதவி ஆசையால் சீசரின் தத்து மகனான ஆக்டேவியஸுடனும் லெபிடஸ் என்னும் தலைவனுடனும் கி. மு. 43-ல் ஒப்பந்தம் செய்து கொண்டு ரோம் சாம்ராச்சிய மூவராட்சியில் கலந்து கொண்டான். கிழக்கே, இவர்களுக்குப் பகைவர்கள் இருந்தமையால், ஆன்டனி அவர்களை அடக்கச் சென்றான். ஆனால் எகிப்தையாண்ட கிளியோபாத்திரா அரசியின் மயலில் அகப்பட்ட ஆன்டனி தன் அரசியல் கடமையை மறந்து அவளோடு தங்கிவிட்டான். ஆக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் காப்பாளன் என்னும் நிலையில் ஆன்டனியையும் கிளியோபாத்திராவையும் அக்டியம் போரில் கி. மு. 31-ல் வென்றான். ஆன்டனி கி.மு. 30-ல் தற்கொலை புரிந்துகொண்டான். டி. கே. வெ.