கலைக்களஞ்சியம்/ஆன்டியக்கஸ்

ஆன்டியக்கஸ்: கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதல் நாற்றாண்டுவரை ஆசியா மைனரை ஆண்ட பல மன்னர்களுக்கு இப்பெயர் உண்டு. இவர்கள் மகா அலெக்சாந்தர் இறந்தபின் சிரியாவில் செலியூக்கஸ் வமிசத்தை நிறுவிய செலியூக்கஸ் நிகேட்டாரின் மரபைச் சார்ந்தவர்கள். இவர்களின் நால்வரைப்பற்றிய வரலாறுகள் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

ஆன்டியக்கஸ் II-ம் செலியூக்கஸ் மகன் ; செலியூக்கஸ் வமிசத்தில் சிரியாவில் அரசாண்டவன்; கி. மு. 280 முதல் கி. மு. 261 வரை ஆட்சி புரிந்தான்.

ஆன்டியக்கஸ் III, மகா (? - கி. மு. 187) : பாக்ட்ரியா, பார்த்தியா, இந்தியா ஆகியவற்றின் மீது படையெடுத்தான் (கி. மு. 212-கி. மு. 205). ரோமானியர்கள் பலம் குன்றியிருந்தபோது அவர்களோடு போர்புரியுமாறு ஹானிபால் கூறியதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாக்னீஷியா என்னுமிடத்தில் ரோமானியப் படைத்தலைவனான சிப்பியோ என்பவனால் தோற்கடிக்கப்பட்டான் (கி.மு.188). கி.மு. 223 முதல் கி.மு. 187 வரை ஆட்சிபுரிந்தான்.

ஆன்டியக்கஸ் IV (? -கி. மு. 164) அலெக்சாந்திரியாவை முற்றுகையிட்டான் (கி.மு.168). ஆனால் ரோமானியர்கள் எதிர்த்ததால் எகிப்தை வெல்ல முடியாமல் திரும்பினான். கி.மு. 176 முதல் கி.மு. 164 வரை ஆட்சிபுரிந்தான்.

ஆன்டியக்கஸ் XIII சிரியாவின் கடைசி அரசன் ; இவன் ரோமானியத் தலைவனான பாம்பே (Pompey) என்பவனுக்கு உதவிபுரிந்தனன்.