கலைக்களஞ்சியம்/ஆம்பியர்

ஆம்பியர் (Ampere, 1775-1836), பிரெஞ்சுப் பௌதிக அறிஞர். இவரது தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரி. புரட்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆம்பியருக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. இவருக்கு மணமான பின்னரே இவர் தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். 1809-ல் இவர் பாரிஸில் பேராசிரியரானார்.

ஆம்பியர்
உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா.

மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள தொடர்பை எர்ஸ்டெட் (Oersted) என்னும் அறிஞர் கண்டுபிடித்தவுடன் ஆம்பியர் இவ்வுண்மையை நன்குணர்ந்து விரிவாய் ஆராய்ந்தார். மின்காந்தவியல் என்னும் அறிவியல் துறை இவர் பணிகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காகவே மின்னோட்டத்தை அளவிடும் அலகும் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.

ஆம்பியர் மின்னோட்டத்தின் நடைமுறை அலகு. மின்காந்தவியல் அலகில் பத்திலொரு பங்கு திட்டமான அளவுகளுக்காக இது இன்னொரு வகையிலும் வரையறுக்கப்படும். இதன்படி, திட்டமான நிலையில், வெள்ளி நைட்ரேட் கரைவிலிருந்து ஒரு செகண்டில் 0°001118 கிராம் வெள்ளியைப் படிவிக்கும் மின்னோட்டம் ஓர் ஆம்பியர். இதற்கும் மேற்கூறிய மின்காந்த அலகிற்கும் சிறிது வேற்றுமையுண்டு. ஆனால் இந்த வேறுபாடு மிகக்குறைவாகையால் நடைமுறையில் இரண்டும் சமமெனவே கொள்ளப்படும்.