கலைக்களஞ்சியம்/ஆம்ஸ்டர்டாம்

ஆம்ஸ்டர்டாம் ஹாலந்தின் தலைநகரம்; இது ஒரு முக்கிய வாணிப, கைத்தொழில் நகரம். வட கடலோடு இந் நகரத்தை வடகடல் கால்வாய் இணைக்கிறது. இக் கால்வாயின் வழியே மிகப் பெரிய கப்பல்களும் செல்லக்கூடும். இங்குள்ள கப்பல் துறை ராட்டர்டாமிற்கு அடுத்தாற்போல மிகப் பெரியது. இங்கே கரி, தானியம், பெட்ரோலியம், புகையிலை, தேயிலை, காப்பி முதலியன இறக்குமதியாகின்றன; பால் பண்ணைப் பொருள்கள், காகிதம் முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கு நடக்கும் வைரம் பட்டை தீர்க்கும் தொழில் உலகப் புகழ் பெற்றது. ஆம்ஸ்டர்டாம் ரைன் கால்வாய் உள்நாட்டோடு இந் நகரத்தை யிணைக்கிறது. வெனிஸ் நகரத்திற்போல நகருக்குள்ளே பல கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் செல்லுகின்றன. இங்குள்ள மிருகக் காட்சிச்சாலை மிகவும் புகழ் பெற்றது. இங்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. வாணிபம் செழித்தோங்கும் நகரம். இந்நகரம் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் இத்துறைமுகத்தின் ஒரு பெரும் பகுதியை ஜெர்மானியர்கள் அழித்து விட்டனர். ஆயினும் யுத்தத்திற்குப் பிறகு சீர் செய்யப்பட்டுவிட்டது. மக் : 8,32,583 (1949).