கலைக்களஞ்சியம்/ஆயிலர், லியோனார்டு

ஆயிலர், லியோனார்டு (Euler, Leonhard 1707–83) சுவிட்ஸர்லாந்து தேசத்திய கணித அறிஞர். இவருடைய தந்தையாரும் கணிதத்தில் வல்லவர். பாசல் நகரில் ஜீன் பெர்னோயி என்ற கணித அறிஞரிடம் இவர் கல்வி கற்று 1723-ல் பட்டம் பெற்றார். இதன் பின், இவர் இறையியல், கீழ்நாட்டு மொழிகள், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1727-ல் காத்தரின் அரசியின் விருப்பிற்கிணங்க, இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேராசிரியரானார். 1741-ல் இவர் பெர்லினில் வேலையேற்றார். 1766-ல் ரஷ்யாவுக்குத் திரும்பிய இவர் கண்கள் குருடாயின. அப்படியும் இவர் தம் ஆராய்ச்சிகளை விடவில்லை.

தனிக் கணிதத் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிகள் தலை சிறந்தவை. இத்துறையின் தற்கால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் இவரும் ஒருவர் எனலாம். திரிகோணமிதிச் சார்பலன்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் சுருக்கங்களையும், π,e என்ற குறியீடுகளையும் இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தார். கூம்பின் வெட்டுமுகங்களை இவர் விரிவாக ஆராய்ந்தார். பீட்டா, காமா சார்பலன்களைப்பற்றி முதலில் ஆராய்ந்தவரும் இவரே. இவர் பல துறைகளில் தமது மேதையை ஈடுபடுத்தினார். நீரியக்கவியல், வானவியல், ஒளியியல் போன்ற பல துறைகளில் முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தார்.