கலைக்களஞ்சியம்/ஆரஞ்சு சுதந்திர நாடு
ஆரஞ்சு சுதந்திர நாடு: இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்திலுள்ள ஒரு மாகாணம். ஆங்கிலேயர்கள் 1820 க்குப் பிறகு பெரிய எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவில் வந்து குடிபுகத் தொடங்கினர். இதனால் தென் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் இருந்த போயர்கள் அங்கிருந்து பெரிய வெளியேற்றம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று புது இடங்களில் குடியேறத் தொடங்கினர். 1836-ல் இவர்கள் ஆரஞ்சு நதியைக் கடந்து, ஆரஞ்சு நதிக் குடியேற்றத்தை அமைத்தனர். 1854லிருந்து இக்குடியேற்றம் சுதந்திரம் பெற்று, ஆரஞ்சு சுதந்திர நாடு என்று வழங்கி வருகிறது. இக்குடியேற்றம் டிரான்ஸ்வால் ஜனாதிபதிபால் குரூகருக்கு உதவியாக இரண்டாம் போயர்யுத்தத்தில் 1899-ல் பிரிட்டனுடன் போர்புரிந்தது. ஆனால் அந்த யுத்தத்தில் பிரிட்டன் வெற்றியடைந்ததால் ஆரஞ்சு சுதந்திர நாடு 1900-ல் பிரிட்டனுடைய உடைமையாயிற்று. 1909 முதல் இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலோருக்குத் தொழில் கால்நடை வளர்த்தல். இங்கு மழை குறைவு. தலைநகரம்: புளும்பான்டேன் (த.க.); பரப்பு : 49,647 ச. மைல் : மக் : 10.18.207 (1951). பெரும்பாலோர் சுதேசிகள் எம். வீ. சு.