கலைக்களஞ்சியம்/ஆரியர்கள்

ஆரியர்கள் : ஜெர்மானிக், கெல்டிக், கிரேக்க, ஆர்மீனிய, ஸ்லவானிய, பாரசீகம் முதலிய பல மொழிகளும் ஒரே தாய் மொழியினின்று கிளைத்திருக்க வேண்டுமென்பது அறிஞர்களின் துணிபு. இத் தாய் மொழியைப் பேசியவர்கள் பண்டைய ஆரியர்கள். அவர்களுடைய ஆதி இடம் எது என்பது நிச்சயமாகத் தீர்மானிக்கப்படவில்லை. இது மத்திய ஆசியா, ரஷ்யாவின் தெற்குப் பாகம், டான்யூப் ஆற்றுப் பிரதேசம் என்று பலவாறாக யூகிக்கப்படுகிறது. ஆனால் மத்திய ஆசியாவே என்பது பல ஆசிரியர்களின் துணிபு. மேற்கு ஆசியாவில் காபடோசியா நாட்டில் உள்ள ஒரு கல் வெட்டிலிருந்து (கி. மு. 1380) இவர்களின் வாழ்க்கை நிலை சிறிது தெரியவருகிறது. மித்திரன், இந்திரன், நாசத்தியன் என்ற இந்தியத் தெய்வங்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. வேதகாலத்திலுள்ள இந்தியாவிலிருந்த ஆரியர்களுக்கும் ஈரானிய ஆரியர்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்களின் முதல் நூல் ரிக்வேதம். இவ்வேதத்தில் சொல்லப்படும் நிலப்பரப்பு, சிந்து நதி, சரஸ்வதி, கங்கை, அதன் உபநதியாகிய யமுனை ஆகிய ஆறுகள் பாயும் பிரதேசம் வரையிலும் பரவியது. இவை சப்தசிந்து, மத்தியதேசம் என்ற பெயர்க ளுடன் வழங்கின. ஆரியர்களைப்பற்றிய மற்ற விவரங் களுக்குப் பார்க்க: இந்தோ-ஆரியர். கூ. ரா. வே.