கலைக்களஞ்சியம்/ஆர்க்கிமிடீஸ்

ஆர்க்கிமிடீஸ் (Archimedes, கி. மு.287-212) கிரேக்கக் கணித அறிஞர். சிசிலியிலிருந்த இவர் சைரக்யூஸ் நகரில் வாழ்ந்தார். அந்நாட்டு மன்னனுக்கு உற்ற துணைவராக இருந்தார். அவனுக்குப் பல படைக் கலங்களைக் கண்டுபிடித்துத் தந்து, அவன் போரில் வெற்றி காண உதவினார்.

பௌதிகத்தில் இவர் பெயரால் வழங்கும் சித்தாந்தம் இவரால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது அரசனுக்குப் புதிதாகச் செய்யப்பட்ட மகுடத்தில் தங்கத்தைத் தவிர வேறு உலோகம் ஏதாவது கலந்திருக்கின்றதா என அறியும் முறையைக் கண்டுபிடிப்பதில் இவர் முனைந்திருந்தார். அதைப்பற்றி எண்ணிக்கொண்டே இவர் குளிக்குந் தொட்டியில் இறங்கினார். அப்போது அதிலிருந்து தண்ணீர் வழிவதைக் கண்டதும் தம்முள்ளத்தை வாட்டிய கேள்வியின் விடையை இவர் கண்டார். அந்த மகிழ்வில் இவர் ஆடையுமின்றி, “கண்டேன்! கண்டேன்!” எனக் கூவிய வண்ணம் வீதிகளில் ஓடத் தொடங்கிவிட்டாராம்.

நிலையான விசைகளையும், நெம்புகோல், உருளை முதலிய எளிய எந்திரங்களையும் இவர் விஞ்ஞான அடிப்படையாக ஆராய்ந்து பயன்படுத்தினார். நெம்புகோலைப் பற்றிக் கூறுகையில் இவர் “பூமிக்கு வெளியே இருக்க ஓரிடமிருப்பின் உலகையே அசைப்பேன்” என்றாராம். மிதக்கும் பொருள்களைப்பற்றிய விதிகளை இவர் கண்டுபிடித்தார். இவரது கணித நூலாராய்ச்சிகள் புகழ்பெற்றவை. உருளை, கோளம், வட்டம், சுருள் இவற்றைப்பற்றிப் பல கணித நூற்கொள்கைகளை இவர் வெளியிட்டார்.

சைரக்யூஸ் நகரம் பகைவர்களாற் பிடிபட்டபோது போர்வீரர்கள் இவர் இல்லத்திலும் நுழைந்தனர். அப்போதும் இவரது சிந்தனை கலையவில்லை. தரையில் வரைந்த வடிவங்களை நோக்கியவண்ணம் இருந்த இவ் அறிஞரை அறியாமையால் ஒரு போர்வீரன் கொன்று விட்டான்.