கலைக்களஞ்சியம்/ஆர்க்டிக் சமுத்திரம்
ஆர்க்டிக் சமுத்திரம் வடதுருவத்தைச் சுற்றியுள்ள சமுத்திரம். ஐரோப்பா, ஆசியா, கிரீன்லாந்து, கானடா, அலாஸ்கா முதலிய நிலப்பரப்புக்களின் இடையே இது அமைந்துள்ளது. இதிலிருந்து பேரிங் ஜலசந்தியைக் கடந்தால், பசிபிக் சமூத்திரத்தையடையலாம். மக்கன்சி, ஒபு, லீனா, யெனிசெய் முதலிய ஆறுகள் இச்சமுத்திரத்தையடைகின்றன. முர்மான்ஸ்கிலிருந்து இதன் வழியாகவே பேரிங் ஜலசந்திவரை வேனிற் காலத்தில் கப்பல்கள் செல்வதற்குச் சோவியத் அரசாங்கத்தார் வசதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தச் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் குளிர் மிகுதியாயினும், கோடைக்காலத்தில் மனிதர்கள் வசிக்க முடியும். குளிர்காலத்தில் இங்கு -90° பா. வரை வெப்பநிலை குறைகிறது. இங்கு வாழும் மக்கள் எஸ்கிமோக்கள் (த.க.). வெண்கரடிகளும், சீல் முதலிய நீர் விலங்குகளும் இங்கு உள்ளன.