கலைக்களஞ்சியம்/ஆர்ஜென்டீனா
ஆர்ஜென்டீனா தென் அமெரிக்காவில், தெற்கில், அட்லான்டிக் சமுத்திரத்தை அடுத்துள்ள நாடு. பரப்பு: 1,0,79,965 ச. மைல்.
இந்நாடு மலைப்பாங்காகவும் மேடுபள்ளங்களுடையதாகவும் இருக்கிறது. சராசரி 13,000 அடி உயரமுள்ள ஆண்டீஸ் மலைத்தொடர் இந்நாட்டின் ஒரு முக்கிய அமிசம். போனஸ் அயர்ஸுக்குத் தெற்கே விரிவான மலைப்பிரதேசம் இருக்கிறது. வடக்கேயும் கிழக்கேயும் செழிப்புள்ள பள்ளத்தாக்குக்கள் உள்ளன. இங்குள்ள புல்வெளிகள் விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்கும் மிகவும் பயன்படுகின்றன. இவற்றிற்குப் பாம்பாப் புல்வெளிகள் என்று பெயர். தென் ஆர்ஜென்டீனாவிற்குப் பெட்டகோனியா என்பது பெயர். இங்குள்ள முக்கியமான ஆறு பிளேட் ஆறு.
இந்நாட்டின் தென்கோடி அன்டார்க்டிக்கின் அருகேயிருப்பதால் மிகுந்த குளிர்ப்பிரதேசமாயிருக்கிறது. ஆயினும் பெட்டகோனியாவின் கிழக்குப் பக்கம் அட்லான்டிக் நீரோட்டத்தால் சிறிது வெப்பமடைகிறது. வட ஆர்ஜென்டீனாவில் கோடைகாலத்தில் வெப்பம் மிகுதியாயிருக்கிறது. சில சமயங்களில் 105° பா.வரை வெப்பநிலை உயர்கிறது.
நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மழை மிகுதியாகப் பெய்கிறது. ஆண்டுதோறும் இங்கு 40 அங்குலம் முதல் 60 அங்குலம் வரை மழை பெய்கிறது. தென் பகுதியில் மழை மிகக் குறைவாயிருக்கிறது. மத்திய ஆர்ஜென்டீனாவில் 20 முதல் 39 அங்குலம் வரை மழை பெய்கிறது. இங்குள்ள வெப்ப மண்டலத்தில் அயன மண்டலத் தாவரங்கள் மிகுதியாக உள்ளன. வட பகுதியில் பனையும் இடையிடையே வேலைக்கான பல வகை மரங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆண்டீஸ் மலையடிப் பிரதேசங்களைத் தவிரப் பெட்ட கோனியாவின் பிற பகுதிகள் விவசாயத்திற்குப் பயனின்றி இருக்கின்றன.
இங்குள்ள கரிசல் மண் இந்நாட்டின் செல்வத்திற்கு ஆதாரமாயிருக்கிறது. எருப்போட்டு வளப்படுத்த வேண்டாதவாறு இப்பூமி வளமுடையதாயிருக்கிறது. தோல் பதனிடுவதற்கு உபயோகப்படும் கெப் ராக்கோ என்னும் ஒருவகை மரம் இங்கு மிகுதியாக விளைகிறது.
டங்ஸ்டன், வெள்ளீயம், நாகம், செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை சிறிது கிடைக்கின்றன. முக்கியமான விளைபொருள்கள் கோதுமை, சோளம், ஆளி விதை, புகையிலை முதலியன. செய்பொருள்கள் சிமென்டு, சவர்க்காரம், தட்டுமுட்டுச் சாமான்கள், கண்ணாடிச் சாமான்கள், செருப்பு, துணிமணி முதலியன. கானடாவிற்கு அடுத்தபடியாகக் கோதுமையும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மக்காச் சோளமும், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாகக் கம்பளி மயிரும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.
இந்நாட்டின் மக்: சு. 1,71,80,000 (1950) இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள். இவர்களிலும் மிகுதியானவர்கள் ஸ்பானியர் அல்லது இத்தாலியர் மரபில் வந்தவர்கள். சுதேசிகளான அமெரிக்க இந்தியர்கள் சுமார் 30,000 பேருக்குக் குறைவாகவே இருக்கின்றனர். நாட்டு மொழி ஸ்பானிய மொழிதான். இந்நாட்டில் ஆடுமாடுகளும் செழிப்பான விளைநிலங்களும் நிரம்ப இருப்பினும், மக்களில் பகுதியினர் பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர். 1½ லட்சம் மக்கள் ஆலைகளில் வேலை செய்கின்றனர். இங்குப் பல இருப்புப்பாதைகளும் பெரிய சாலைகளும் இருக்கின்றன. தலைநகரமான போனஸ் அயர்ஸ், மக் : 30,00,371 (1947). அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்தபடியாகப் பெரிய துறைமுகப்பட்டினமாகும். ரோசேரியோ, மக் : 7,61,300, கார்டோபா மக்: 3,51,644, லாபிளாட்டா, மக்: 2,68,000 என்பவை முக்கியமான பிற நகரங்கள்.
வரலாறு: 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆர்ஜென்டீனாவின் வரலாறு அங்கிருந்த ஆதிக்குடிகளின் வரலாறே. 1516-ல் ஜுவான் டெ சோலிஸ் என்னும் ஸ்பானிய மாலுமி ஆர்ஜென்டீனாவைக் கண்டு பிடித்தான். 1535-ல் ஸ்பெயின் மன்னனால் அனுப்பப்பட்டு ஆர்ஜென்டீனாவிற்கு வந்த டான் பிட்ரோ மெண்டோசா என்பவன் போனஸ் அயர்ஸ் குடியேற்றத்தை நிறுவினான். இக்குடியேற்றத்தை நாட்டு மக்களான ஆதிக்குடிகள் போரிட்டு அழித்துவிட்டனர். அங்கிருந்த ஐரோப்பியர்கள் பரானா ஆற்றின் வழியே சென்று, ஆசூன் சியோன் என்னுமிடத்தில் 1537-ல் குடியேறினர்.
சில ஆண்டுகட்குப் பிறகு டொமினோ மார்ட்டினெசு என்பவர் முதல் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1810 வரையில் ஆர்ஜென்டீனா ஸ்பெயின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அவ்வாண்டில் ஒரு புரட்சி அரசாங்கம் தோன்றி ஸ்பானியர் ஆட்சியை எதிர்த்தது. 1816-ல் ஆர்ஜென்டீனா சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
1816-லிருந்து 1852 வரை நாட்டில் குழப்பங்களே மிகுந்திருந்தன. 1853-ல் மானுவல் டெரோஜாஸ் என்னும் எதேச்சாதிகாரியைப் பதவியினின்றும் நீக்கிவிட்டனர். அதன் பிறகு நிலையான அரசாங்கம் ஏற்பட்டது. சிலிக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் நெடுநாளாக இருந்துவந்த எல்லைத் தகராறுகளை இங்கிலாந்து மன்னராயிருந்த VII-ம் எட்வர்டு தீர்த்து வைத்தார். ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி ஆகிய மூன்று நாடுகளும், தென் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை. 1914-ல் மெக்சி கோவிற்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இவ்விஷயமாகத் தகராறு வலுத்தபோது ஆர்ஜென்டீனா மத்தியஸ்தம் செய்து, 1915-ல் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தி வைத்தது. முதல் உலக யுத்தத்தின்போது ஜெர்மனிக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் நல்லுறவு ரத்தாகியிருந்தது. 1933-ல் ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலீ, மெக்சிகோ, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1943-ல் ரமோன் சாஸ்டிரிலோ என்னும் ஜனாதிபதியைப் பதவியினின்றும் நீக்கிவிட்டு. ஜுவான் டொமிங்கோ பெரான் என்பவர் ராணுவத்தின் பலத்தைக் கொண்டு பதவி யெய்தினார். இவர் 1945-ல் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மறுபடியும் தேர்தலுக்கு நின்று 1946-ல் வெற்றி பெற்றார். 1951-ல் இவரே மறுபடியும் ஜனாதிபதியானார்.
1945-ல் ஆர்ஜென்டீனாவிற்கும் அச்சு நாடுகளுக்கும் போர் மூண்டது. அது இரண்டாம் உலக யுத்தம் முடியும் தறுவாயாகையால் ஆர்ஜென்டீனா போர் புரியத் தேவையில்லாமல் இருந்தது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் ஆர்ஜென்டீனாவும் சேர்ந்து கொண்டது.
அரசியலமைப்பு: 1949-ல் பெரான் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலே இப்போது ஆர்ஜென்டீனாவின் குடியரசில் அமலில் உள்ளது. அது 1858-ல் ஏற்படுத்தப்பட்ட லிபரல் அரசியலமைப்பைப் பெரும்பாலும் பின் பற்றியுள்ளது. ஜனாதிபதியும் பொது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் 6 ஆண்டு காலம் பதவியிலிருப்பர். இவர் மறுபடியும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஜனாதிபதியே நாட்டின் ராணுவத்திற்குத் தலைமைச் சேனாதிபதி. ஜனாதிபதியும் உபஜனாதிபதியும் ஆர்ஜென்டீனா நாட்டுக் குடிகளாயும், ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராயுமிருக்க வேண்டும்.
ஆர்ஜென்டீனாவின் சட்டசபைக்குத் தேசிய காங்கிரசு என்பது பெயர் ; இது செனட், டெபுட்டிகள் சபை என இரு சபைகள் கொண்டது. செனட்டில் 34 அங்கத்தினர்கள் உண்டு. இவர்கள் பொதுமக்களால் 6 ஆண்டுக் கொருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 13 அங்கத்தினர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலகுவர். கீழ்ச் சபையில் உள்ள இரண்டாவது பெரிய கட்சிக்காக 10 ஸ்தானங்கள் ஒதுக்கப்படும். டெபுட்டிகளும் ஆறாண்டுகளுக்கு ஒருமுறையே தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 1/2 அங்கத்தினர் 3 ஆண்டுக்கு ஒருமுறை விலகுவர். கீழ்ச் சபைக்கே பண மசோதாக்களைச் சமர்ப்பிக்கும் உரிமையுண்டு. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 20 காரியதரிசிகளைக் கொண்ட மந்திரி சபை நிருவாகம் நடத்துகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் யாவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.
தேர்தல்களுக்காகவே கட்சி கூட்டுதலைச் சட்ட மூலமாகத் தடுத்துள்ளனர். பொது அமைதிக்கு விரோதமான கட்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. கன்சர்வெடிவ், முன்னேற்ற ஜனநாயக, தீவிர, சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டுக் கட்சிகள் சட்ட மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
1947-ல் ஏற்படுத்தப்பட்ட தேசியப் பொருளாதாரக் கவுன்சில் தேசத்தின் பொருளாதார விஷயங்களை மேற்பார்க்கிறது. இக்கவுன்சில் தலைவருக்கு மந்திரியின் அந்தஸ்து உண்டு.
நீதி: கூட்டாட்சிக் கோர்ட்டுக்களும் மாகாணக் கோர்ட்டுக்களும் இங்கு நீதி செலுத்துகின்றன. முந்தியவை தேசிய விஷயங்களையும் மாகாணங்களுக்கு இடையே எழும் பிரச்சினைகளையும் மட்டுமே விசாரிக்கின்றன. முக்கியக் கூட்டாட்சிக் கோர்ட்டு போனஸ் அயர்ஸ் நகரத்தில் இருக்கிறது. இதில் 3 நீதிபதிகள் உண்டு. இது தவிர, 5 அப்பீல் கோர்ட்டுக்களும் முக்கியமான நகரங்களில் இருக்கின்றன. ஜூரி முறை விசாரணை அரசியல் சட்டப்படி கிரிமினல் வழக்குக்களில் அமலிலிருக்கிறது ; ஆயினும் இது போனஸ் அயர்ஸ் மாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளது.
ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மிகுதியான ஆதரவு இருக்கிறது. கட்டாய இலவசக் கல்விமுறை நடைமுறையிலிருக்கிறது. பெரான் ஜனாதிபதியாகத் தொடங்கிய பிறகு கல்விக்கு அதிக ஆதரவு ஏற்பட்டது. 5 தேசியப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. 1949-ல் 14.722 தொடக்கப் பள்ளிகளும், இவற்றில் 21 இலட்சம் மாணவர்களும் இருந்தனர்.