கலைக்களஞ்சியம்/ஆர்மடில்லோ

ஆர்மடில்லோ (Armadillo) பாலூட்டும் விலங்கு. தென் அமெரிக்கா முழுவதிலும், வடஅமெரிக்காவின் தெற்கிலும் பரவியிருக்கிறது. இதில் பெரிய இனம் 3 அடி நீளமுள்ளது. சிறிய இனம் பிச்சிசியாகோ என்பது 5 அங்குலமிருக்கும். தலையும் உடம்பும் வாலும் கொம்புப் பொருளாலான செதில்களால் மூடியிருக்கும். அவற்றிற்கு அடியிலே தோலில் எலும்புத் தகடுகள் இருக்கின்றன. தலையிலும், தோள்களிலும், இடுப்பின் கீழ்ப் பாகத்திலும் எலும்புத் தகடுகள் ஒன்று சேர்ந்து கேடயங்கள் போல் ஆகின்றன. தோளருகிலும் தொடையருகிலும் இருக்கும் கேடயங்களுக்கு அடியில் இந்தப் பிராணி தன் கைகால்களை இழுத்துக் கொள்ள முடியும். கேடயங்களுக்கு இடையிடையே உடம்பைச் சுற்றி எலும்பில்லாத தோல் மட்டும் மூடிய பல வளையங்கள் இருக்கின்றன. இந்த இடங்களிலே உடம்பை மடக்கவும் வளைக்கவும் முடிகிறது. எலும்புத் தகடுகளுக்கிடையில் இங்கொன்று அங்கொன்றாகப் பாலூட்டிகளுக்கு அடையாளமான மயிர் வளர்ந்திருக்கும். தாலிபியூடெஸ் என்னும் சாதி தன் உடம்பைப் பந்துபோலச் சுருட்டிக்கொள்ளும். தனக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் அது தன்னை இப்படித்தான் காத்துக்கொள்ளும். மற்றச் சாதிகளிலெல்லாம் நன்றாக வளர்ந்த கெட்டியான நகங்களுண்டு. அவற்றால் அதிசயிக்கத்தக்க வேகத்தோடு குழி தோண்டி அதில் மறைந்துகொள்ளும். ஆர்மடில்லோக்கள் இரவில் சஞ்சரிப்பவை. அவை எதையும் தின்னும். ஆயினும் பூச்சியுணவே அவற்றிற்கு விருப்பமானது.