கலைக்களஞ்சியம்/ஆர்மீனியா

ஆர்மீனியா சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு. பரப்பு: 11,640 ச. மைல். மக் : சு. 13 இலட்சம் (1939). ஜார்ஜியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே உள்ளது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஒரு பல்கலைக் கழகமும் பல கல்லூரிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பெரும்பாலும் ஆர்மீனியர்களும், ரஷ்யர்களும், துருக்கித் தார்த்தர்களும் ஆவர்.

இந்நாட்டுப் பண்டைய மக்கள் நாட்டுச் சுதந்திரத்திற்காக எந்நாளும் போராடி வந்திருக்கின்றனர். I-ம் டைக்ரேனிஸ் (கி. மு. 94-கி. மு. 56) என்னும் மன்னர் காலத்தில் ஆர்மீனியா மிக உயர்ந்த நிலையடைந்திருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இது அரபுகளின் ஆதிக்கத்தில் வந்தது. கி.பி.1000க்குப்பின் ஆர்மீனியர்கள் செல்ஜுக் துருக்கியரோடு போராடவேண்டி வந்தது; ஆயினும் சில ஆண்டுகளில் ஆர்மீனியா முழுவதும் செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. 1405-ல் தைமூர் என்னும் மங்கோலியப் பேரரசன் இறந்த பிறகு பாரசீக மன்னர்கள் சில காலம் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்கள் இதை எதிர்த்தனர்.

ஆர்மீனியா

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காக்கசஸ் மலைவழியே தெற்கு நோக்கி முன்னேறிவந்த ரஷ்யர்கள் இப்பிரதேசத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பிறகே ஆர்மீனியாவில் நல்ல நிலை ஏற்பட்டது; பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. ரஷ்யப் புரட்சிக்கு முன் துருக்கிச் சாம்ராச்சியத்தில் சேர்ந்திருந்த ஆர்மீனியப் பிரதேசத்தின் ஒரு பகுதியும் அப் புரட்சிக்குப்பின் ஆர்மீனியாவோடு சேர்க்கப்பட்டது. 1920-லிருந்து ஆர்மீனியாவில் சோவியத் கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது.