கலைக்களஞ்சியம்/ஆர்ம்ஸ்ட்ராங்கு, வில்லியம் ஜார்ஜ், பிரபு

ஆர்ம்ஸ்ட்ராங்கு, வில்லியம் ஜார்ஜ், பிரபு (1810-1900) ஆங்கிலப் பொறியியலறிஞர். இவர் டைன் நதிக்கரையிலுள்ள நியூகாசில் நகரில் பிறந்து, சட்டக் கல்வி பயின்று, வழக்கறிஞராக இருந்தார். ஆனால் விஞ்ஞான ஆர்வம் மிக்கு, இவர் அத் துறையிலிருந்து விலகிப் புதுப் பொருள் ஆக்கத்தில் முனைந்தார். நீரின் இயக்கத்தால் மின்சாரத்தைத் தோற்றுவிக்கும் பொறியையும் வேறு பல நீரியல் எந்திரங்களையும் இவர் கண்டுபிடித்து எல்ஸ்விக் (Elswick) என்னுமிடத்தில் இவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினார்.

1885-ல் இவர் அமைத்த புதுவகைப் பீரங்கி, ஆயுதங்களின் தயாரிப்பில் பெரும் புரட்சியை விளைவித்தது. இப்பீரங்கியின் குழாய் சுருளான தவாளிப்பும், பின்னிருந்து குண்டு போடும் அமைப்பும், உறுதியான வளையங்களையும் கொண்டு மிக்க திறமையாக வேலை செய்தது. இத்துறையில் செய்த பணிக்காக இவர் 1887-ல் பிரபுவாக்கப்பட்டார்.