கலைக்களஞ்சியம்/ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்
ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் (River valley projects) : ஆறுகளைச் சரியாகக் கட்டுப்படுத்தினால், பாசனத்திற்குத் தேவையான நீரையும், தொழிலுக்கும் வீட்டுக்கும் பயனாகும் மின்சார சக்தியையும், தொலைவிலுள்ள நகரங்களுக்குத் தேவையான குடிதண்ணீரையும் பெறவும், ஆற்றிலும் கால்வாய்களிலும் ஆண்டு முழுவதும் போதிய ஆழம் இருக்குமாறு செய்து படகுப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும், மண் அரிமானத்தினால் வளமுள்ள பிரதேசங்களும் கட்டாந்தரையாக ஆவதைத் தடுக்கவும் முடியும். இத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களால் எத்தகைய பயன்கள் விளையக்கூடும் என்பதற்கு அமெரிக்கா ஓர் உதாரணமாகும். இந்திய நாட்டிலும் ஏராளமான நீரைக் கடலுக்குக்கொண்டு சேர்க்கும் பேராறுகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நலம்பெற அமெரிக்கத் திட்டங்களைப் பற்றி அறிதல் நலம்.
அமெரிக்கத் திட்டங்களில் முக்கியமானது டி. வீ. ஏ. (T.V.A.) என வழங்கும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம். டென்னசி ஆற்றைக் கட்டுப்படுத்து முன், அது பாய்ந்த பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு மலைச் சரிவுகள் தேய்ந்துபோயின. இவற்றின்மேல் விழுந்த மழைநீர் மண்ணை அடித்துச் சென்று அப்பகுதியை வெறுந்தரிசு நிலமாக்கியது. இவ்வகையில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் பாழாகியது. இன்னும் 45 இலட்சம் ஏக்கர் நிலம் வரம்புகடந்த சாகுபடியினால் வளமிழந்தது. வண்டல் நிறைந்த டென்னசி ஆற்றுநீர் ஓஹியோ மிசிசிப்பி ஆறுகளை அடைந்து,வெள்ளத்தை மிகுவித்துப் பெரு நாசம் விளைவித்தது. 1933ஆம் ஆண்டில் டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரம் (Tennessee Valley Authority) என்ற ஸ்தாபனம் அமெரிக்கக் காங்கிரசால் நிறுவப்பெற்றது. இது 1933-1944 ஆம் ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஒன்பது அணைகளையும், உபநதிகளின் குறுக்கே எட்டு அணைகளையும் கட்டி, ஆற்றின் வெள்ளத்தை அணைகளால் படிப்படியாகக் கட்டுப்படுத்தியது. இந்த அணைகளால் ஆறும் அதன் உப நதிகளும் பெரிய ஏரிகளாக மாறிவிட்டன. 9 அடி ஆழமும் 650 மைல் நீளமுமுள்ள கால்வாய்கள் ஆண்டு முழுதும் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக உள்ளன. இந்த அணைகளில் தோன்றும் பிரமாண்டமான அழுத்தம் மின்னாக்கிகளை இயக்கி மின்சார சக்தியைத் தோற்றுவிக்கிறது. அதனால் அடுப்பெரிக்க மரங்களை அழித்து வந்தது தவிர்க்கப்பட்டது. இச் சக்தியைக் கொண்டு உரங்களை உண்டாக்கி வயல்களின் வளத்தைப் பெருக்க முடிந்தது. மின்சாரத்தைப் பயன்படுத்தும் வேறு பல தொழில்களும் தோன்றின.
அமெரிக்காவில் இதையொத்த வேறு பல திட்டங்களும் உண்டு. மேற்குப் பகுதிகளில் நிலமீட்சிச் செயலகம் (Bureau of Reclamation) என்ற ஸ்தாபனம் 160 அணைகளைக் கட்டி, 30 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளித்துள்ளது. இவற்றுள் கொலொராடோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட போல்டர் அணையும், கொலம்பியா நதியின் குறுக்கே கட்டப்பட்ட கிராண்டு கூலி அணையும் முக்கியமானவை. சகாராவையொத்த பாலைவனத்தின் வழியே செல்லும் கொலொராடோ ஆற்றின் நீரைப் போல்டர் அணை கட்டுப்படுத்துகிறது. இது 737 அடி உயரமுள்ளதாகி, 305 இலட்சம் ஏக்கர் அடி நீரைக்கொண்டது. இதில் 14 இலட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 115 மைல் வரை படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சுமார் 250 மைல் தொலைவிலுள்ள லாஸ் ஆஞ்சலிஸ் போன்ற 13 நகரங்களுக்குத் தேவையான குடிதண்ணீர் இதிலிருந்து கிடைக்கிறது. இதன்கீழ் 150 மைல் தொலைவிலுள்ள பார்க்கர் அணை நீர்ப்பாசன வசதிகளால் விவசாயிகள் பெரும்பயன் அடைந்துள்ளனர். மேல் கொலொராடோப் பகுதியில் இன்னும் 10 அணைகளைக் கட்டத் திட்டங்கள் உள்ளன. கிராண்டு கூலி அணை 550 அடி உயரமுள்ளது, இது 20 இலட்சம் கிலோவாட் மின்சாரச் சக்தியை உற்பத்தி செய்கிறது. இதிலிருந்து 300 அடி உயரமுள்ள இன்னொரு நீர்த்தேக்கத்திற்கு நீரை இறைத்து, 12 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது.
இதைப்போன்ற வெற்றிகளை இந்தியாவிலும் அடைய முடியும். இந்தியாவில் மக்கட் பெருக்கமும் நிலப்பரப்பும், நீர் வசதியும் உள்ளன. கி.மு.3000 லிருந்தே இந்தியாவில் பாசன முறைகள் இருந்து வருகின்றன. 7 கோடி ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. இவ்வளவு அதிகமான பாசன வசதியுள்ள நிலப்பரப்பு உலகிலேயே இல்லை. அப்படியிருந்தும் இந்தியா உணவிற்குப் பிற நாடுகளின் தயவை நாடவேண்டியிருக்கிறது. 1945-50 ஆகிய ஐந்தாண்டுகளில் 500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவுத் தானியங்களை இறக்குமதி செய்தது. தற்போது திட்டமிடப்பட்டுள்ள 23 பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களும் நிறைவேறினால், இவை ஆண்டிற்கு 27 இலட்சம் டன் உணவையும், 17 இலட்சம் கிலோவாட் மின்சாரச் சக்தியையும் தரும்.
இந்தியாவில் ஏராளமான ஆறுகள் இருந்தும், அவற்றைச் சரியானவாறு பயன்படுத்தவில்லை. ஆற்று நீரில் சுமார் 6-5% மட்டும் பயனாகிறது. மற்றப் பகுதியனைத்தும் கடலையடைந்து வீணாகிறது. இவ்வாறு அது வீணாவதோடு வெள்ளத்தால் ஏராளமான சேதத்தையும் விளைவிக்கிறது. நிலப்பரப்பில் சுமார் 37 கோடி ஏக்கர் விவசாயத்திற்கு ஏற்றது. இதில் 13.5% மட்டுமே தற்போது சாகுபடியில் உள்ளது. மற்றப் பகுதி அனைத்தும் பாசன வசதியின்றி உற்பத்தி குறைவாக இருக்கிறது. விவசாயம் பருவ மழையை மட்டும் நம்பி இருப்பதும் பெருங்குறையாகும். ஆறுகளின் கழிமுகப் பிரதேசங்கள் வரம்பு மீறிய சாகுபடியால் வளமிழந்து விட்டன. டென்னசி பள்ளத்தாக்கின் முன்னைய நிலையில் இப்போது இந்தியா உள்ளது.
இந்தியாவில் மின்சாரச் சக்தி 3-4 கோடி கிலோவாட் உற்பத்தி செய்ய முடியுமாயினும், 5 இலட்சம் கிலோவாட்டுக்களே தற்போது உற்பத்தியாகின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. மின்சாரத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தினால் உழைப்புக் குறையும். நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களின் செலவு குறையும்.
ஒரு நாட்டின் நீர்வழிகள் அதன் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாக உள்ள நாடுகளிலும்கூட இவை முக்கியமாக விளங்குகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டாக இந்தியாவில் நீர்வழிகளைப் புறக்கணித்தது தவறு என்பது இரண்டாவது உலகப் போரின்போது மற்றப் போக்குவரத்துச் சாதனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் தெளிவாகியது. தொழில் வளர்ச்சிபெற்ற மேனாடுகளில் நீர்வழிச் சாதனங்களைத் தக்க திட்டங்களின்படி பெருக்கி வருகிறார்கள். இந்தியாவிலும் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் மூலம் இதைச் செய்ய முடியும். சென்ற சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி நடந்து வருகிறது. சுமார் 160 திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டோ, ஆராயப்பட்டோ வருகின் றன. இவற்றிற்கு 1279 கோடி ரூபாய் செலவாகும். இவை நிறைவேறினால் 3-12 கோடி ஏக்கர் நிலம் புதிதாகச் சாகுபடிக்கு வரும். உணவு உற்பத்தி 103 கோடி டன் பெருகும். 85 இலட்சம் கிலோவாட் மின்சாரம் அதிக மாக உற்பத்தியாகும். வெள்ளத்தினால் விளையும் சேதம் குறைந்து, நீர் வழிப்போக்குவரத்து அதிகமாகும்.
நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்
காகரபார் திட்டம் (பம்பாய்): 1949-ல் தொடங்கப்பட்ட இது இரு நிலைகளில் நிறைவேற்றப்படும். 1952-53-ல் முடிவடையும் முதற்படியில் தபதி ஆற்றின் குறுக்கே அணைபோட்டு, 10 இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி, 50,000 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டு முழுதும்,5,50,000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு பருவத்தில் மட்டும் பாசன வசதி அளித்து, 24,000 கிலோவாட் மின்சாரச் சக்தியையும் தோற்றுவிக்கும். இதற்கான செலவு 12 கோடி ரூபாய். 1956-57-ல் முடிவடையும் இரண்டாம் படியில் அணையை உயர்த்தி, 35} இலட்சம் ஏக்கர் அடி நீரைத் தேக்கி 1,00,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 2,00,000 கிலோவாட் மின்சாரமும் பெறப்படும். செலவு 31 கோடி.
கோதாவரித் திட்டம் (ஐதராபாத்): கோதாவரியின் குறுக்கே இரண்டு அணைகளும், கதம் (Kaddam), மனாயர் (Manair) ஆகிய உப நதிகளின் குறுக்கே இரு அணைகளும், 30 இலட்சம் ஏக்கர் அடி நீர் தேக்கி, 20 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமும், 1,75,000 கிலோவாட் மின்சாரமும் பெற உதவும். மொத்தச் செலவு 75 கோடி ரூபாய். இது 1955-ல் முடிவுறும். துங்கபத்திரைத் திட்டம் (ஆந்திரா) : இது ஆந்திரா, ஐதராபாத், மைசூர் அரசாங்கங்களால் கூட்டாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணா நதியின்
உபநதியான துங்கபத்திரையின் குறுக்கே 160 அடி உயரமும், 7.942 அடி நீளமும் உள்ள ஓர் அணை போடப்பட்டு, 26 இலட்சம் ஏக்கர்-அடி நீர் தேக்கப்படும்.
இதன் பிரதம கால்வாய் 225 மைல் நீளம் கொண்டு பெல்லாரி, கர்நூல் ஜில்லாக்களில் 3,00,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கும். இதன் செலவு மதிப்பு 17 கோடி. ரூபாய். இத்திட்டம் 1953-ல் முடிவடையும். ஐதராபாத் இராச்சியத்தின் பக்கத்தில் கால்வாய் 140 மைல் நீளம் கொண்டு, 6,71,000 ஏக்கருக்குப் பாசனம் அளிக்கும்.1,50,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி யாகும். இதன் செலவு மதிப்பு 12.1கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.
கீழ்பவானித் திட்டம் (சென்னை) : மேட்டுப் பாளையத்திலிருந்து 20 மைல் தொலைவில் பவானி யாற்றில்
160 அடி உயரமும், 1,520 அடி நீளமும் உள்ள அணையைக் கட்டி, இதன் வலது பக்கத்தில் 121 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2,00,000 ஏக்கருக்குப் பாசனவசதி அளிக்கப்படும். செலவு 8-2 கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.
மச்குந்துத் திட்டம் (ஆந்திரா): விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆந்திரா, ஒரிஸ்ஸா இராச்சியங்களின் எல்லையில் உள்ள மச்குந்து நதியில் தோதுமா நீர் வீழ்ச்சியினருகே இந்நதியைக் கட்டுப்படுத்தி, 1,00,000 கிலோவாட் மின்சாரத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. செலவு முதலில் 484 கோடி ரூபாயும், படிப்படியாக அதிகமாகிப் பத்தாண்டுகளுக்குப்பின் 7·59 கோடி ரூபாயும் ஆகும். இச்செலவை இரு இராச்சியங்களும் பகிர்ந்துகொள்ளும்.
மலம்புழைத் திட்டம் (சென்னை): பாலக்காட்டிற்கு அருகே மலம்புழை ஆற்றில் 60 அடி உயரமுள்ள கல்லணை ஒன்றைக் கட்டி, 20 மைல் நீளமுள்ள கால்வாயும் வெட்டி, பாலக்காடு தாலுகாவில் 40,000 ஏக்கருக்கு இரண்டாம் போகத்திற்கும், 13,000 ஏக்கருக்கு மூன்றாம் போகத்திற்கும் பாசன வசதி யளிக்கப்படும். செலவு 3.8 கோடி ரூபாய். இது 1954-ல் முடிவடையும்.
மணிமுத்தாற்றுத் திட்டம் (சென்னை): திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியின் உபநதியான மணிமுத்தாற்றில் 145 அடி உயரமுள்ள அணை கட்டிச் சுமார் 30 மைல் நீளமுள்ள கால்வாயும் வெட்டிச் சுமார் ஓர் இலட்சத்து மூவாயிரம் ஏக்கர் பாசனவசதி அளிக்கப்படும். செலவு 3.98 கோடி ரூபாய்.
மோயாற்றுத் திட்டம் (சென்னை) : இதில் பைக்காரா மின்னாக்க நிலையத்திற்கு ஏழு மைல் கீழே மோயாற்றின் சரிவுகளில் உள்ள 1,250 அடி ஆழத்தைப் பயன்படுத்தி 36,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். செலவு முதலில் 3·64 கோடி ரூபாயும், ஐந்தாண்டுகளில் உயர்ந்து மொத்தம் 476 கோடி ரூபாயும் ஆகும்.
சம்பல் திட்டம் (மத்திய பாரத்): சம்பல் நதியில் நான்கு அணைகளைக் கட்டி, மத்திய பாரத், ராஜஸ்தான் ஆகிய இரு இராச்சியங்களும் பயனுறுமாறு செய்யப்படும். இதனால் சுமார் 11 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதோடு, சுமார் ஓர் இலட்சம் கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். 1948-ல் தொடங்கப் பெற்ற இத்திட்டம் 1955-ல் முடிவுறும்.
மகாத்மா காந்தி நீர் மின்சார நிலையம் (மைசூர்): சராவதி நதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, 12,000 கிலோவாட் சக்தியைப் பெறும் முதல் அமைப்பு 1948-ல் முடிவடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொன்றும் 12,000 கிலோவாட் சக்தி தரும் மூன்று அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. 18,000 கிலோவாட் சக்தி தரும் நான்காவது அமைப்பும் முடிவடைய இருக்கிறது. மொத்தச் செலவு 8·25 கோடி ரூபாய்.
மகாநதித் திட்டம் (ஒரிஸ்ஸா) : இது ஹீராகுட், திக்கரபாரா,நராஜ் ஆகிய மூன்று அணைகளைக் கொண்டது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கால்வாய்களும் மின்னாக்க அமைப்புக்களும் உண்டு. இத்திட்டத்தின் முதற்படியாக ஹீராகுட் அணை கட்டப்பட்டு வருகிறது. இது பிரதம கால்வாயின் குறுக்கே மூன்று மைல் நீளம் இருக்கும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 59·8 இலட்சம் ஏக்கர் - அடி. இதனால் 9 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மின்சாரத்தினால் நீரை இறைத்து, இன்னும் 4 இலட்சம் ஏக்கர் பெறுமாறு செய்யப்படும். இரு மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுச் சுமார் 3 இலட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையை அமைப்பதால் கழிமுகப் பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாடு செய்வதும் எளிதாகும். மகாநதியின் போக்குவரத்து வசதிகளும் அதிகமாகும். ஹீராகுட் அணைத் திட்டத்திற்கான செலவு 48 கோடி ரூபாய்.
பாக்ரா-நங்கல் திட்டம் (பஞ்சாப்) : இத்திட்டத்தின் முக்கிய அமிசம் சட்லெஜ் ஆற்றின் குறுக்கே 680 அடி உயரமுள்ள அணையைக் கட்டி, 57·25 இலட்சம் ஏக்கர்- அடி நீரைத் தேக்குதல். இந்த அணைக்கு எட்டு மைல் கீழே 90 அடி உயரமுள்ள நங்கல் அணை கட்டப்படும். இது மூன்று மின்னாக்க நிலையங்களுக்குத் தேவையான நீரை அளிக்கும். 4 இலட்சம் கிலோவாட் சக்தியை அளிக்கும். இது பஞ்சாப், பெப்சு, இமாசலப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தானம் ஆகிய இராச்சியங்களில் அணைகளிலிருந்து வெட்டப்படும் புதிய கால்வாய்கள் 36 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கும். இதனால் உணவு உற்பத்தி 11'3 இலட்சம் டன் பெருகுவதோடு 8 இலட்சம் பொதி பருத்தியும் உற்பத்தியாகும். 132·9 கோடி ரூபாய் செலவாகும். 1957-58-ல் முடிவடையும்.
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்- மேற்கு வங்காளம்) : இத்திட்டத்தில் தாமோதர் நதியின் குறுக்கேயும், அதன் உபநதிகளின் குறுக்கேயும் எட்டு அணைகளும், ஒரு பேரணையும் கட்டப்பெறும். இதனால் 7.60,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைப்பதோடு, 2,40,000 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். வெள்ளத்திற்குப் பேர்போன தாமோதர் நதியின் நீரைக் கட்டுப்படுத்தி, வெள்ளத்தால் விளையும் கேட்டினைக் குறைக்கவும் இது உதவும். 55 கோடி ரூபாய் செலவாகும். இதை நிறைவேற்ற அமெரிக்காவிலுள்ள டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரம் என்ற ஸ்தாபனத்தைப்போல் ஒரு ஸ்தாபனம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் தொடங்கப்பெறாத திட்டங்கள்
கோசித் திட்டம் (நேபாளம்): நேபாளத்தில் பராக்ஷேத்திரத்தினருகில் கோசி நதியில் 785 அடி உயரமுள்ள அணை கட்டப்பெறும். இது நேபாளத்தில் 5·2 இலட்சம் ஏக்கருக்கும், பீகாரில் 33.25 இலட்சம் ஏக்கருக்கும் பாசன வசதி அளிப்பதோடு 18 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தையும் தோற்றுவிக்கும். ஏழு படிகளில் நிறைவேறவிருக்கும் இத் திட்டத்திற்கு 177 கோடி ரூபாய் செலவாகும்.
கண்டகிப் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்) : இத்திட்டத்தில் திரிவேணி மலைத்தொடர்ச்சியினருகே கண்டகி நதியில் ஓர் அணை கட்டிப் பீகாரில் 25 இலட்சம் ஏக்கரும், உத்தரப் பிரதேசத்தில் 7·5 ஏக்கரும்,நேபாளத்தில் ஓர் இலட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுமாறு செய்யப்படும். 25 கோடி ரூபாய் செலவாகும்.
புரோச்சு நீர்ப்பாசனத் திட்டம்(பம்பாய்):புரோச்சு நகருக்கு 48 மைல் வடகிழக்கே நருமதை யாற்றில் 160 அடி உயரமுள்ளதோர் அணைகட்டி, 18 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கப்பெறும். 10 இலட்சம் ரூபாய் செலவு.
கிருஷ்ணா-பெண்ணையாற்றுத் திட்டம் (ஆந்திரா): ஆந்திரா இராச்சியத்தில் முக்கியத் திட்டம் இதுவே. கர்நூல் மாவட்டத்தில் சித்தேசுவரத்தின் அருகே கிருஷ்ணா நதியில் ஓர் அணையும், சோமேசுவரத்தின் அருகே பெண்ணையாற்றில் ஓர் அணையும் அமைக்கப்படும். இவ்விரு ஆறுகளும் ஒரு கால்வாயினால் இணைக்கப்படும். இதனால் கர்நூல், கடப்பை ஜில்லாக்களில் 32 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறும். ஏராளமான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். பாசனத்திற்கான அமைப்புக்களை நிறுவ மட்டும் 120 கோடி ரூபாய் செல்வாகும்.
இராமபாதசாகர் திட்டம் (ஆந்திரா) : இதுவும் ஒரு பெருந்திட்டம். ஆற்றடியிலிருந்து 190 அடி ஆழம்வரை செல்லும் அஸ்திவாரமும்,430 அடி உயரமுமுள்ள ஓர் அணை கட்டி, 27 இலட்சம் ஏக்கர்களுக்கு இரண்டு போகங்களுக்குத் தேவையான பாசனத்தை அளிப்பதோடு தற்போது பெறும் 21-1 இலட்சம் ஏக்கருக்கு நல்ல பாசன வசதிகளும் அளிக்கப்படும். இது 15 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பின் நிலத்திற்குப் படகு போக்குவரத்து வசதி செய்யவும் இது உதவும். இதனால் ஆற்றில் 320 மைல் தொலைவு போக்குவரத்து வசதியும் பெறலாம். இதற்கு 50 கோடி ரூபாய் செலவாகும்.
நாயார் அணைத்திட்டம் (உத்தரப்பிரதேசம்) : கங்கையின் உபாதியான நாயார் ஆற்றில் 600 அடி உயரமுள்ள அணை கட்டி, 106 இலட்சம் ஏக்கர் - அடி நீர் தேக்கப்படும். இதனால் தற்போதுள்ள மேல்கங்கைக் கால்வாயின் பயன் அதிகமாகும். 1,81,700 கிலோ வாட் மின்சாரமும் உற்பத்தியாகும். 27 கோடி ரூபாய் செலவாகும்.
பிப்ரி திட்டம் (உத்தரப் பிரதேசம்): சோணை ஆற்றின் உபநதியான ரீகண்டு நதியின் குறுக்கே பிப்ரீ கிராமத்தினருகே 280 அடி உயரமுள்ள அணை கட்டி, 40 இலட்சம் ஏக்கருக்குப் பாசனமும், 24 இலட்சம் கிலோவாட் மின்சாரமும் பெறப்படும். செலவு 31-2 கோடி ரூபாய்.
கங்கைப் பேரணைத் திட்டம் (மேற்கு வங்காளம்): இது ஒரு பல நோக்கத்திட்டம். கங்கையின் குறுக்கே அணை கட்டிப் பாகீரதி நதியின் இரு பக்கங்களிலும் பாசனம், போக்குவரத்து, வெள்ளக்கட்டுப்பாடு ஆகிய வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். இதனால் வங்காளத்துக்கும் அஸ்ஸாமுக்கும் கால்வாய் வழியாகப் போக்குவரத்து உண்டாகும்.
நிறைவேறிய திட்டங்கள்
மேட்டூர் அணை (சென்னை): 176 அடி உயரமுள்ளது. இது பாசனத்திற்கு உதவுவதோடு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இது 1934-ல்
6.8 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இது 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது. இது ஆண்டு முழுவதும் 14,000 கிலோவாட் மின்சாரத்தைம், ஒரு பருவத்தில்மட்டும் 30,000 கிலோ வாட் மின்சாரத்தையும் அளிக்கிறது.
பெரியாற்று அணை (சென்னை) : மதுரை மாவட்டத்திலுள்ளது. 15 அடி உயரமுள்ளது. 1887-ல்கட்டப்பட்ட இது 1.75,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கிறது.
தாமிரபரணி அணை (சென்னை) : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது.124 அடி உயரமுள்ளது. 21,750 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கிளென்மார்கன் அணை (சென்னை) நீலகிரி மாவட்டத்திலுள்ளது. 48,430 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணை (மைசூர்): இது 134 அடி உயரமுள்ளது. இது 2.6 கோடி ரூபாய் செலவில் 1932-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. இது 61,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
உஸ்மான் சாகர் அணை (ஐதராபாத்) : மூசி ஆற்றின் குறுக்கே உள்ளது. 112 அடி உயரமுள்ளது. வெள்ளக்கட்டுப்பாடு அளிப்பதோடு குடிநீர் வசதியும் அளிக்கிறது. இது 1920-ல் முடிவுபெற்றது.
தேகர்வாடி அணை (பம்பாய்) : ஆந்திரா ஆற்றின் குறுக்கே உள்ளது. 190 அடி உயரமுள்ளது. 1922-ல் கட்டப்பட்டது. 48,000 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
லாயிடு அணை (பம்பாய்) : பூனா மாவட்டத்திலுள்ளது. 168 அடி உயரமுள்ளது. 1928-ல் கட்டி முடிக்கப்பட்ட இது சுமார் 3 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கவல்லது. ஆற்றில் 12 மைல் தொலைவுவரை போக்குவரத்து வசதி அளிக்கின்றது.
முல்ஷி அணை (பம்பாய்): பூனா மாவட்டத்தில் உள்ளது. 146 அடி உயரமுள்ளது. 1,10,000 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
ராதாநாகிரி அணை (பம்பாய்) : கோலாப்பூர் மாவட்டத்திலுள்ளது, 140 அடி உயரமுள்ளது. இது 15,000 ஏக்கருக்குப் பாசன வசதியும், கோலாப்பூருக் குக் குடிநீர் வசதியும் தருவதோடு, 1,600 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தி செய்கிறது. ஏ.ஆர்.ஸ்ரீ.