கலைக்களஞ்சியம்/ஆற்றுவாளை

ஆற்றுவாளை (வாளை) ஆறு, ஏரி குளங்களில் வாழும் நன்னீர் மீன். சேறான நீர்நிலைகளில் இது மிகுதியாக இருக்கிறது. இது ஒரு வலுவான மீன். தாவாரப் பொருள்களையும் தின்னும்; பிராணிகளையும் தின்னும். மற்றவகை மீன்களையும் மீன் குஞ்சுகளையும் தொடர்ந்து சென்று பிடித்துத் தின்றுவிடும். ஆதலால் இதற்கு நன்னீர்ச் சுறா என்றும் பெயருண்டு. குளம் போன்ற சிறிய நீர்நிலைகளில் இது இருக்குமானால், கெண்டை முதலிய நல்ல மீன்வகைகளை அங்குக் காணமுடியாது. அவற்றைக் குளங்களில் விட்டு வளர்க்க வேண்டுமானால், அங்கு ஆற்றுவாளை யில்லாமல் செய்யவேண்டும். இதைப் பெரிதான வலைபோட்டும் பிடிப்பார்கள், தூண்டில் போட்டும் பிடிப்பார்கள். ஆற்றுவாளை பார்ப்பதற்கும் விருப்பமானதாகக் காண்பதில்லை. இது அசுத்தமான இரைகளையே தின்னும். ஆதலால் இதை விரும்பி உணவாகப் பலர் கொள்வதில்லை. ஆயினும் இது உணவுக்கு நல்ல மீன் என்பார்கள்; கருவாடு போடுவதும் உண்டு.

இது ஒருவகைக் கெளிறு. கெளிற்றில் செதில் இருப்பதில்லை. நீண்ட மீசையிருக்கும். இந்த மீன் நீளமானது. தலைதான் மிகவும் அகன்றிருக்கும். வாய் மிகப் பெரியது. பெரிய கூரிய பற்கள் இரண்டு அகன்ற பட்டைகளாக அமைந்திருக்கும். இது மிகப் பெரியதாக வளரும். ஆறடி நீளம் கூட உண்டு. ஆனால் சாதாரணமாக 4 அடிக்குமேல் இருப்பது அரிது. 100 ராத்தல் எடையுள்ளவை உண்டு.

இந்த மீனில் முள்கதிரில்லாத சிறிய முதுகு துடுப்பும், இருபிளவான வால்துடுப்பும், மிக நீளமாக ஆசனத் துடுப்பும் உண்டு. தோள், இடுப்புத் துடுப்புக்கள் சிறியவை. தோள் துடுப்புக்களின் முள் பலமாக இராது. இதன் நிறம் மேற்புறம் பொன்னிறங் கலந்த கரும்பச்சைச்சாயை. பக்கங்கள் சிறிதே மஞ்சள் சாயையுள்ள வெண்மை. அடிப்பக்கம் வெண்மை; சிறு கரும்புள்ளிகள் விழுந்திருக்கும். நீரைவிட்டு எடுத்துச் சிறிது நேரமானபிறகு ஒருவித ஈய நீலநிறம் பரவிவிடும்.

இது இந்தியா முழுவதும் உண்டு. இலங்கை, பர்மா, ஜாவா, சுமாத்ரா முதலிய இடங்களிலும் உண்டு. வல்லகோனியா ஆற்று என்பது இதன் விஞ்ஞானப் பெயர்.