கலைக்களஞ்சியம்/ஆல்காட், ஹென்ரி ஸ்டீல்
ஆல்காட், ஹென்ரி ஸ்டீல் (1832-1907) அமெரிக்க அறிஞர். பல்கலைக் கழகப் படிப்பு முடிந்ததும் விவசாயியாக இருந்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் போர்வீரராக இருந்து கர்னல் பதவி பெற்றார். அதன் பின் சட்டம் பயின்று வழக்கறிஞராக வேலை பார்த்தார். 1875-ல் பிளவட்ஸ்கி அம்மையாருடன் சேர்ந்து பிரமஞான சபையை நிறுவி, அதன் முதல் தலைவராக இருந்து, அச்சங்கம் உயர்ந்த நிலை எய்துமாறு உழைத்தார். சிறந்த நாவலர். பிரமஞானம் பற்றி நூல்கள் இயற்றியுள்ளார். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுடையவர். ஹரிஜனங்களுக்காகப் பல பாடசாலைகள் நிறுவி உதவினார். மக்கள் இனத்துக்குச் சேவை செய்த பெரியார்களுள் ஒருவர்.