கலைக்களஞ்சியம்/ஆல்பிரடு

ஆல்பிரடு (Alfred, 849-899) இங்கிலாந்திலுள்ள வெஸ்ஸெக்ஸ் பிரதேசத்து அரசன். இவன் தந்தை எதல்வுல்பு. இவன் தன் தமையனான எதல்ரெட்டிற்குப் பின் 871-ல் பட்டமெய்தினான். சிறு வயதிலேயே இவன் இரு முறை ரோம் நகருக்குச் சென்று வந்தான். இவன் தனது 20ஆம் வயதில் மர்சிய அரச வமிசத்தைச் சேர்ந்த ஏல்ஸ்வித் என்பவளை மணந்தான்.

இவன் பட்டமெய்துவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே டேனர்களுடைய பெரும்படை வெஸ்ஸெக்ஸைத் தாக்கிற்று. இப் படையை இந்த ஆல்பிரடும் மற்றவர்களும் எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் எங்கல் பீல்டில் வெற்றி கண்டனராயினும் டேனர்கள் ரெடிங், ஆஷ்டவுன், பேசிங் முதலிய இடங்களில் வெற்றி கொண்டனர். வில்ட்டன் என்னுமிடத்தில் டேனர்களிடம் தோற்ற ஆல்பிரடு அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. 876-ல் டேனர்கள் ஆங்கிலேயர்களை முறியடித்து விடவே, ஆல்பிரடு சோமர்செட்டிற்கு ஓடவேண்டியதாயிற்று. ஆயினும் விடாமுயற்சியை மேற்கொண்ட ஆல்பிரடு 878-ல் எடிங்க்டன் என்னுமிடத்தில் டேனர்களைத் தோற்கடித்தான் ; அவர்களும் வெஸ்ஸெக்ஸை விட்டுச் செல்ல ஒப்புக்கொண்டனர். இவ் வெற்றியில்லாவிடில் டேனர்கள் இங்கிலாந்து முழுவதையும் தமக்கு அடிப்படுத்தியிருப்பர். இதனால் ஆல்பிரடு நாட்டின் ஐக்கியத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறான்.

ஆல்பிரடு ஆங்கிலேயத் தற்காப்புப் போர் முறையில் இருந்த குறைபாடுகளைச் சீர்திருத்தினான். டேனர்களுடைய கப்பல்களைக் காட்டிலும் பெரிய கப்பல்களைக் கட்டுவித்தான். நிரந்தரத் தற்காப்பு நிலையங்களையும் ஏற்படுத்தினான். பின்னால் ஏற்பட்ட டேனர் தாக்குதல்கள் பயனின்றிக் கழிந்தமைக்கு இவையே முக்கியக் காரணங்களாம்.

நாட்டின் நன்மைக்காகச் சட்டங்கள் இயற்றும் மரபு ஒரு நூற்றாண்டாகவே அந்நாட்டில் மறைந்திருந்தது ; அம்மரபை ஆல்பிரடு புதுக்கினான். மிகத் தாழ்ந்திருந்த ஆங்கிலக் கல்வி நிலையையும் மேலோங்கச் செய்தான். பல நாடுகளினின்றும் கற்றோரை வரவழைத்தான். எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்னும் நோக்கம் இவனுக்கிருந்தது. லத்தீன் கற்பிப்பதில் இவன் மிகுந்த ஆர்வங்கொண்டான். இவன் தனது 40 ஆம் வயதில் அம்மொழியைக் கற்றுக்கொண்டான். போதியஸ், ஓரோசியஸ் முதலியோர்களுடைய நூல்களையும்,பீடு (Bede) எழுதிய சமய வரலாறு என்னும் நூலையும் மொழி பெயர்த்தான். இவன் இம்மொழி பெயர்ப்புக்களில் முதல் நூலில் காணாத பல விஷயங்களையும் சேர்த்து எழுதியுள்ளான். ஆங்கிலோ சாக்சன் வரலாற்றுக் குறிப்புக்கள் என்னும் தொகை நூலை இயற்றுவித்தான். இந்நூலில் இவன் காலத்திய ஆங்கிலேயப் பழக்க வழக்கங்கள். சட்டங்கள் முதலியவை எல்லாம் இடம் பெறுகின்றன.

போர்வீரன், நிருவாகத்திறமையில் நிகரற்றவன், சட்டமியற்றியவன், நூலாசிரியன், தத்துவ சாஸ்திரி எனப் பலபடியாகப் புகழப்பெற்றவன் ஆல்பிரடு. இவனை 'மகா ஆல்பிரடு' என்றழைப்பர். இவன் வாழ்க்கை

வரலாற்றில் பல கட்டுக்கதைகளும் புகுந்துவிட்டமை மக்களுக்கு இவன் பெருமையில் இருந்த நம்பிக்கையையே குறிக்கும்.