கலைக்களஞ்சியம்/ஆல்பேனியா

ஆல்பேனியா ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் பால்கன் தீபகற்பத்தில் உள்ள சிறு நாடு. இது ஏட்ரியாடிக் கடலின் கிழக்குக் கரையில் இத்தாலி தேசத்தை நோக்கி அமைந்துள்ளது. பரப்பு : 10,629 ச. மைல். இந் நாட்டின் தென்கிழக்கே கிரீசும், வடக்கேயும் கிழக்கேயும் யூகோஸ்லாவியாவும் இருக்கின்றன. இது பெரும்பாலும் மலைப்பிரதேசம். மலைகளில் ஓக், பைன் காடுகள் உண்டு. சமவெளிகள் மிகச் செழிப்பானவை; மக்காச்சோளமும் உருளைக்கிழங்கும் முக்கிய விளைபொருள்கள்; ஒலிவ மரம் மிகுதியாக உண்டு. தாமிரம், எண்ணெய், உப்பு முதலிய தாதுப்பொருள்கள் இத்தேசத்தில் உண்டு.

ஆல்பேனியா

நாட்டின் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்சுள். வடபகுதியிலுள்ளவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆடுமாடு மேய்த்தல் இவர்களுடைய முக்கியத் தொழில்.

தலைநகரான டிரானாவை டூராசோ என்னும் துறைமுகத்தோடு இணைப்பதற்கு மாத்திரம் ஒரு ரெயில்வே இருக்கிறது. டிரானா மக்: சு. 40.000 (1949); ஸ்கூட்டாரி மக் : சு. 30,000 (1949) ; கோரிட்ஸா மக் :சு.28,000 (1949) ஆகியவை முக்கிய நகரங்கள்.

ஆறு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆரம்பக்கல்வி கட்டாயமாகத் தரவேண்டும் என்பது சட்டமாயினும், பல கல்விச் சாலைகள் இல்லாத குறையால் இச் சட்டம் நடைமுறையில் இல்லை. மக் : சு. 12 இலட்சம் (1950).

வரலாறு: ரோமானிய சாம்ராச்சியம் பிளவு பட்ட பிறகு ஆல்பேனியா டிரேக்கியம், நிக்கோபோலிஸ் என்னும் இரண்டு பைசான்டைன் மாகாணங்களாக ஆயிற்று.4.5ஆம் நூற்றாண்டுகளில் ஆல்பேனியர்கள் காத்தியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்; 535-ல் ரோமானியப் பேரரசனான ஐஸ்டீனியன் இந்நாட்டைத் திரும்ப வென்றான். செர்புகள் 640-ல் வட ஆல்பேனியா மீது படையெடுத்தனர். 861-ல் பல்கேரியர்கள் தென் ஆல்பேனியாவை வென்று, செர்புகளைத் தோற்கடித்து, அந்நாட்டின் பெரும்பகுதியிற் குடியேறினர். 1014-ல் II -ம் பேசில் என்னும் பேரரசன் தென் ஆல்பேனியாவை வென்றான். 1204 வரையில் அந்நாடு பைசான்டைன் ஆட்சியில் இருந்தது. மைக்கேல் கம்சேஸ் என்பவன் எபைரஸ் இராச்சியத்தை நிறுவியபோது, தென் ஆல்பேனியாவும் அதில் ஒரு பகுதியாக இருந்தது. மத்திய ஆல்பேனியா சிசிலி மன்னர்கள் ஆட்சியில் இருந்து வந்தது (1271-1368). ஸ்டீபன் துஷான் 1331-1358) என்பவன் தன் ஆட்சி ஆல்பேனியா முழுவதையும் தன்னகத்தடக்கி யிருந்ததாகக் கூறிக்கொண்டனன். துஷானிடம் அலுவல் பார்த்து வந்த பால்ஷா என்னும் நார்மானியன் ஸ்கூட்டாரியில் ஒரு வமிசத்தை ஸ்தாபித்தான் (1366). ஆயினும் 14ஆம் நூற்றாண்டிறுதியில் வெனிஸ் நகரத்தவர்கள் ஆல்பேனியாவில் பற்பல இடங்களில் வந்து குடியேறி பால்ஷா ஆட்சியை ஒழித்தனர்.

15-ஆம் நூற்றாண்டில் துருக்கி தென்கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பேரரசை நாட்ட முற்பட்டபோது ஆல்பேனியர்கள் ஒருமுகமாக எதிர்த்தும், துருக்கியர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. நாட்டுமக்களில் பலர் கிறிஸ்தவ மதத்தைக் கைவிட்டு முஸ்லிம்களாயினர். 1760-ல் மெகமட் புஷாட்டி என்பவன் துருக்கியின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆல்பேனியாவில் ஒரு தனி ஆட்சி நிறுவினான். 1831-ல் புஷாட்டியின் பேரனான முஸ்தாபா துருக்கியர்களிடம் தோல்வி கண்டதால் புஷாட்டி ஆட்சியும் ஒருவாறு முடிவுற்றது. 1750-ல் யான்னீனாவில் அலிபாஷா என்பவன் ஒரு தனியாட்சியை நிறுவிக்கொண்டான். அவனும் 1822-ல் துருக்கியரால் தோற்கடிக்கப்பட்டான். கிரீஸ், பல்கேரியா, செர்பியா முதலிய நாடுகளில் தேசிய உணர்ச்சியும், துருக்கியில் ஆதிக்க வீழ்ச்சியும் ஒருங்கே தோன்றின.

1910-11-ல் ஆல்பேனியர்கள் துருக்கி ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சி 1912-ல் வலுத்தது. துருக்கி ஆல்பேனியாவிற்குச் சுயாட்சி அளித்தது. இது பொறாத மற்றப் பால்க்கன் நாடுகள் துருக்கிமீது போர்தொடுத்தன. இப்போரில் ஆல்பேனியா தலையிடவில்லை. 1912-ல் இஸ்மேல் கெமால் விலோரா என்பவன் ஆல்பேனியா ஒரு சுதந்திர நாடெனப் பிரகடனம் செய்தான். இதை லண்டனில் 1!913-ல் நடந்த ஒரு மாநாட்டில் பல நாட்டுப் பிரதிதிகளும் ஒப்புக்கொண்டனர். 1914-ல் ஐரோப்பிய வல்லரசுகளால் ஆல்பேனியாவை ஆளுவதற்கு நியமிக்கப்பட்ட வில்லியம் அதே ஆண்டில் முடி துறக்காமல் நாடு கடந்தான்.

முதல் உலக யுத்த காலத்தில் இந்நாட்டின் பெரும் பகுதி இருதிறத்தாரிடையேயும் கைமாறிக்கொண்டிருந்தது.1918-ல் போர் முடிந்தபிறகு துராசோவில் கூடிய தேசிய சபை ஒரு தாற்காலிக அரசாங்கத்தை நிறுவிற்று. அப்போதும் ஆல்பேனியாவின் பெரும் பகுதி இத்தாலியின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இத்தாலியர்கள் இருக்கும்வரை நாங்களும் நாட்டை விட்டு விலகவேமாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்த யூகோஸ்லாவியர்களும் 1920-ல் இத்தாலியர்களைப் பின்பற்றி நாட்டைவிட்டு விலகினார்களாயினும், ஆல்பேனிய அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்து கொண்டேயிருந்தனர். ஆயினும் 1926-ல் ஆல்பேனியாவின் எல்லைகள் பாரிஸ் உடன்படிக்கையால் இறுதியாக நிச்சயிக்கப்பட்டன.

முன்பு குடியரசாக இருந்த ஆல்பேனியா 1928-ல் முடியாட்சியாக மாறி, அகமத் பேக் சோகு (Ahmed Beg Zog) வின் ஆட்சியின் கீழ் 1939 வரையில் இருந்தது.

1939-ல் இத்தாலியர்கள் ஆல்பேனியாவை ஆக்கிரமித்தனர். சோகு மன்னன் நாட்டைவிட்டு ஓடினான். இரண்டாம் உலக யுத்த காலம் முழுவதிலும் அந்நாடு இத்தாலோ-ஜெர்மானியர் ஆட்சிக்குள் இருந்துவந்தது.

யுத்தம் முடிந்த பிறகு, 1945-ல் கூடிய அரசியல் நிருணய சபை ஆல்பேனியாவை ஒரு குடியரசாகச் செய்தது.

அரசியலமைப்பு : 1945 நவம்பர் 10-ல் பிரிட்டிஷ், அமெரிக்க, ரஷ்ய அரசாங்கங்கள் ஜெனரல் என்வர் ஹோக்சாவின் தலைமையில் நிறுவப்பட்ட தாற்காலிக அரசாங்கத்தை அங்கீகரித்தன. அவ்வரசாங்கம் சுதந்திரச் சூழ்நிலையில் தேர்தல்களை நடத்துவதாக ஏற்றுக் கொண்டது. 1945 டிசம்பர் 2-ல் நடந்த தேர்தல்களின் முடிவாகப் பெரும்பான்மைக் கட்சி கம்யூனிஸ்டு கட்சியாக விளங்கிற்று. இக்கட்சி அரசாங்கம் 1946 ஜனவரி 12-ல் ஆல்பேனியாவை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்தது. 1946-ல் பிரிட்டனும் அமெரிக்காவும் ஆல்பேனியாவோடு உறவை ரத்து செய்துகொண்டு அந்நாட்டை ஐ.நா. சபையில் அங்கம் வகிக்க முடியாமல் தடுத்துவிட்டன.

1945ஆம் ஆண்டு அரசியலமைப்புப்படி இந்நாடு ஒரு குடியரசு; இதற்கு ஒரே சபை கொண்ட சட்டசபையுண்டு; தலைவர் ஜனாதிபதி. வாக்குரிமை 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் எல்லோருக்கும் உண்டு. போர்க்காலத்தில் இத்தாலியர்களோடும் ஜெர்மானியர்களோடும் ஒத்துழைத்தவர்களுக்கு வாக்குரிமையில்லை. இங்குத் தேசிய விடுதலை இயக்கக் கட்சி என்ற அரசியல் கட்சி ஒன்றே முக்கியமானது. பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாயிருந்து நிருவாகம் செய்கிறார்.