கலைக்களஞ்சியம்/ஆளுபர்

ஆளுபர் (ஆளுவர்) 7 முதல் 11ஆம் நூற்றாண்டு வரை கன்னட நாட்டில் வனவாசிச் சீமையின் சில பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்கள். இவர்களில் சிலருடைய பெயர்கள், இரண்டாம் புலிகேசி (609-642), விநயாதித்தன் (681-696) ஆகிய சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டுக்களிலும், இரட்ட மன்னன் III-ம் கோவிந்தன் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. சாளுக்கிய மன்னன் VI-ம் விக்கிரமாதித்தன் காலத்தில் வசித்த பில்ஹண கவியும் ஆளுபர்களைக் குறித்திருக்கிறார்.

விநயாதித்தன் காலத்திலுள்ள ஆளுப சிற்றரசர்கள் குணசாகரன்,I-ம் சித்திரவாகன் ஆகியவர்கள். இவர்களின் தலைநகர் பொன்புச்சு (ஹும்சா). III-ம் கோவிந்தன் காலத்தில் வனவாசியிலிருந்து அளுபர்கள் விரட்டப்பட்டார்கள். ஆனாலும் பொன்புச்சைச் சார்ந்த ஆளுவகேடம் ஆறாயிரம் என்னும் இடம் இவர்களின் இராச்சியமென்று கருதப்பட்டது. சுமார் கி. பி. 800-ல் II-ம் சித்திரவாகனும் ரணசாகரனும் அரசுக்குப் போட்டியிட்டார்கள். சித்திரவாகன் உடுப்பி நகருக்கு அருகிலுள்ள உதியாவரத்தைக் கைப்பற்றினான். ரணசாகரன் மறுபடியும் அந்நகரைக் கைப்பற்றினான். ஆனால் சுவேதவாகனுடன் செய்த போரில் தோல்வியடைந்தான். இச்சம்பவங்கள் உதியாவரத்தில் செதுக்கப்பட்ட வீரக் கற்களிலுள்ள கல்வெட்டால் தெரியவருகின்றன. மற்றும் பிருத்வீசாகரன், மாரம்மன் என்று அழைக்கப்பட்ட விஜயாதித்தன் ஆகிய அரசர்களின் பெயர்களும் தெரியவருகின்றன. 'சந்திர வமிசத்தைச் சேர்ந்த உதயாதித்திய உக்தமபாண்டியன், பரமேச்வரன், அதிராஜ ராஜேந்திரன்' என்ற மெய்க்கீர்த்தியானது விஜயாதித்தனின் சாசனங்களில் காணப்படுகின்றது. கூ. ரா. வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆளுபர்&oldid=1491773" இலிருந்து மீள்விக்கப்பட்டது