கலைக்களஞ்சியம்/ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் பதின்மர். அவர்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் எனப்படுவர். ஸ்ரீ ஆண்டாளையும், ஸ்ரீ மதுரகவியாழ்வாரையும் சேர்த்துப் பன்னிருவர் எனக் கூறுதலுமுண்டு (இவர்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு).

இவர்கள் இறைவனுடைய கல்யாண குணங்களிலே ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், இறைவனுடைய வடிவழகிலே ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், மக்கள் படுந் துக்கத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும் இங்ஙனம் ஆழ்வார் என்னும் சொல்லுக்குப் பல வகையாகப் பொருள் கூறுவர்.

ஆகவே,பகவத் குணங்களிலும், அவனுடைய வடிவழகிலும் ஈடுபட்டு அழுந்தின காரணத்தால் சுவாநுபவமும், பிறர் துக்கம் கண்டு பொறாது அழுந்தின காரணத்தால் பரோபதேசமுமான இரு நிலைகளும் இவர்கட்கு மாறி மாறித் தோன்றலாயின. இவ்விரு நிலைகளின் காரியங்களே நாலாயிரப்பிரபந்தம் என்னும் தமிழ்மறையாகும்.

இனிக் கடவுளர்க்கும், அடியார்கட்கும், மக்களிற் சிறந்த இருபாலார்க்கும் இப்பெயர் முற்காலத்தே பெருவழக்காக இருந்தது என்றும், இச் சொற்குச் சுவாமி, பெரியோர் என்பதே பண்டைப் பொருளாக வேண்டும் என்றும், 'பிறரை அடிமைகொண்டு ஆள்பவர்' என்ற பொருளில் 'ஆள்வார்’ என வழங்கிவந்தது; பின்பு ழகர ளகர வேற்றுமையின்றி ஆழ்வார் எனத் திரிந்திருக்கலாமென்றும், பெண்பாலாரான திருமாலடியார் ஒருவர் ஆண்டாள் என்றும் ஆசாரியத் தலைவர்களிற் சிலர் ஆளவந்தார், ஆண்டான் என்றும் வழங்கப் பெறுவதை நோக்குமிடத்து, 'ஆள்' என்பதே இதன் பகுதியாக வேண்டுமென்று சங்கிக்க இடமுண்டு என்றும் கூறிச் சிலாசாசனப் பகுதிகளினின்றும் பலவற்றை மு. இராகவையங்கார் ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்.

ஆழ்வார்கள் ஞானவீரர்கள் ; போர்வீரன் போரினைச் செய்து, நாட்டினை அரசனுக்கு உரிமையாக்குவான். இவர்கள் ஞானத்தை உபதேசித்து உலகத்தையே இறைவனுக்கு உரிமையாக்கினார்கள். “உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை ; ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும், இருக்கு, எசுர், சாமவேத நாண்மலர் கொண்டு உனபாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே” என்பதும், “காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவல் இட்டு உழிதர்கின்றோம்“ என்பதும் இந்த வீரர்களுடைய திருவாக்குக்களாகும்.

இவர்கள் உடன்பட்டு அருளிச்செய்த தத்துவங்கள் மூன்று. அவையாவன : சித்து, அசித்து, ஈசுவரன். இவை பிரகார பிரகாரிகள் ஐக்கியத்தால் ஒன்று என்னலாய்ச் சொரூபபேதத்தாலே பல என்னலாயிருக்கும். இதனாலே, இது 'விசிஷ்டாத்வைதம்' எனப்பெறும். இவற்றுள், சித்தாவது உயிர். அசித்தாவது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்களெல்லாவற்றிற்கும் காரணமாய பிரகிருதி. இதனை மூலப்பகுதி என்பர் ஈசுவரன்- இறைவன். இவை மூன்றும் தனித் தனி இயல்பையுடைய வெவ்வேறு பொருள்கள்; என்றும் அழிவில்லாதவை. ஆயினும், இவை மூன்றும் எக்காலத்தும் சேர்ந்தே இருக்கின்றன. இவற்றுள், இறைவன் சித்து, அசித்து இரண்டனுள்ளும் அந்தர்யாமியாக உள்ளான். இதுவே இவற்றின் நுண்ணிய நிலை (சூக்கும நிலை). மூலப்பகுதி விரிவடைந்து, மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்புகளாகவும், மற்றும் உள்ள பொருள்களாகவும் ஆகின்றது. உயிர் தன்னுடைய புண்ணிய பாவங்கட்கேற்ப ஒவ்வோர் உடம்பை அடைகின்றது; அதுவே உயிர்க்குப் பிறப்பாம். இறைவன் மூலப்பகுதியின் விகாரமாய எல்லாப் பொருள்களுள்ளும், எல்லா உயிர்களுள்ளும் அந்தர்யாமியாக மறைந்துள்ளான். இது, இவற்றின் பருநிலை (தூலநிலை). மூலப் பகுதியின் விகாரமாகிய உடம்பிற்கு வளர்தல், பருத்தல். குறைதல் முதலிய விகாரங்கள் உண்டு. உடம்பினுள் இருக்கும் உயிர்க்கு அத்தகைய விகாரம் ஒன்றுமில்லை. உயிர்க்கு உடம்பைப் பற்றிய இன்பதுன்ப உணர்ச்சிகள் உண்டு. இவ்வுடம்பினுள்ளும் உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன் உடம்பினுடைய விகாரங்களையும், உயிரினுடைய இன்பதுன்ப உணர்ச்சிகளையும் அடைவதில்லை. உயிர் மூலப்பகுதியின் விகாரமாகிய உடம்பைத் தனக்குச் சரீரமாகக் கொண்டிருத்தல் போன்று, இறைவன், உயிர் உடம்பு இரண்டனையும் தனக்குச் சரீரமாகக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல், எக்காலத்தும் தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன. இவை இவற்றின் தன்மை.

ஆக, இப்படிச் சித்து அசித்துக்களோடு கூடின சர்வேச்சுரன் தன்னுடைய பரம கிருபையாலே இந்த உலகைக் காத்து வருகின்றான். சரீரமும் உயிரும் சேர்ந்து வாழ்வது அன்பினாலே யல்லது வேறில்லை. சரீரத்தில் ஓரிடத்தில் ஒரு புண்பட்டால் அப்புண்ணினை ஆற்றுதற்கு வேண்டிய உபாயங்கள் செய்வதும் ஆன்மாவேயாம். அதுபோன்று, அநாதி கரும வாசனையின் பயனாக அநுபவிக்கும் துன்பங்களைப் பார்த்துச் சர்வேச்சுரன் வருந்தி, அதற்கு வேண்டிய மருந்துகள் கொடுக்கின்றான். அம் மருந்தில் முக்கியமான மருந்து சாஸ்திரங்கள். தானே அவதரித்துப் படாத பாடுபட்டதும், ஆழ்வார்களை அவதரிப்பித்ததும் அதற்காகவேயாம். இவ்வளவும் செய்வதற்குக் காரணம் கிருபையேயாம். இது பரமாத்மாவான இறைவன் செயல்.

இனி, சரீரத்தின் தன்மையைப் பார்ப்போம். சரீரம் என்பது, ஒர் உயிரால் எல்லாவகையாலும் தன் பொருட்டாகவே தரிக்கப்படுகின்றதாயும், இன்பத்தினை அனுபவித்து நிலைபெறுதலாகிய தன்மையினைப் பெறுகின்றதாயும் இருப்பதாம். உயிரோடு கூடியிருக்கின்ற உடலுக்கே சரீரம் என்று பெயர். உயிர் நீங்கிய உடலுக்கு அப்பெயர் இன்று. உயிர் நீங்கிய அக்கணமே அது சத்தை இழந்து பிணமாகக் கருதப்படும். இதுவே நாம் உலகில் காணும் உண்மை. சித்தும் அசித்தும் இறைவனுக்குச் சரீரம் என்றதனால், இந்தச் சித்தும் அசித்தும் இறைவனால் தரிக்கப்பட்டும், ஆளப்பட்டு, பணி கொள்ளப்பட்டும் வருகின்றன என்பதும், இறைவன் இவற்றையெல்லாம் தரித்துக் கொண்டும், பாதுகாத்துக் கொண்டும், இவற்றின் பணியினைக் கொண்டும் விளங்குகின்றான் என்பதும் விளங்குவனவாம்.

மேலும், இந்தச் சரீரம் உயிருக்கு அடிமையாக இருக்கின்றது. தனக்குப் பயன் சிறிதுமின்றி உயிர் இன்புறத்தக்க காரியங்களையே செய்துகொண்டிருக்கின்றது. அவ்வாறு செய்வதனாலேயேதான் தரித்திருக்கின்றது. அதுபோன்று, இறைவனுக்குச் சரீரமாக இருக்கின்ற இவ்வுயிர்களெல்லாம் இயற்கையிலேயே இறைவனுக்கு அடிமை என்பதும், ஒரு சிறிய பயனையும் தனக்கென்றின்றி இறைவன் பொருட்டே எல்லாக் காரியங்களையும் செய்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு செய்வதனாலேயே இவை சத்தைப் பெற்று விளங்குகின்றன என்பதும், அவ்வாறு செய்யும் அடிமைத் தொழிலாலுண்டாகும் இன்பமே பேரின்பம் என்பதும் விளங்குகின்றன. ஆக, இவற்றால் இறைவனுக்கும் உலகுக்கும் உள்ள சம்பந்தம் சரீர ஆத்மசம்பந்தம் என்பதும், சரீரமாகிய இவ்வாத்மாக்கள் சரீரியாகிய இறைவனுக்கு எப்பொழு தும் அன்போடு கூடி அடிமை செய்துகொண்டிருத்தலாலேயே சத்தைப் பெறுவன என்பதும், அதுவே இவ்வாத்மாக்கட்குச் சொரூபம் என்பதும் விளங்குவனவாம்.

அங்ஙனம் அடிமைசெய்வது அவனளவில் நில்லாது, அவன் அடியார் அடியார் அடியார்வரையிலும் சேரல்வேண்டும். அவர்கள் எக்குலத்தினராயினும், எத்தொழிலினராயினும் அவற்றைக் கருதலாகாது. பகவத் பக்தி இல்லாதார் எக்குலத்தினராயினும் அவர்களே சண்டாளராவர். குறும்பறுத்த நம்பியைத் தொண்டைமான் சக்கரவர்த்தியும், திருக்கச்சிநம்பியைப் பிராமணோத்தமரான ஸ்ரீ பாஷ்யகாரரும். பாணர் குலத்திற் பிறந்த அழ்வாரை லோகசாரங்க மாமுனியும் அடைந்த விதங்களை ஈண்டு நினைவுகூர்க. இவ்வகையான அடிமை செய்வதற்குக் கால நியமயின்று; தேச நியமமின்று; சாதி நியமமின்று; அதிகாரி நியமமின்று; யானும் நீயே, என்னுடைமையும் நீயே என்னும் வைராக்கியமே வேண்டுவது.

உலகத் தோற்றத்திற்குக் காரணம் இறைவனேயாவன். ஒரு பொருள் உண்டாவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். மண் குடமாகச் செய்யப்படுமிடத்து மண் முதற்காரணம்; அக்குடத்தைச் செய்பவன் நிமித்த காரணம் ; அவன் குடத்தைச் செய்வதற்குக் கருவியாகவுள்ள தண்டம், சக்கரம் முதலானவை துணைக்காரணம். உலகத் தோற்றத்திற்கு இறைவன் இம்மூன்று காரணங்களாகவும் இருக்கிறான். யாங்ஙனம் எனின், சித்தும் அசித்தும் சூக்குமமாக இருக்கும் நிலையில் உலகம் உண்டாவதற்குமுன் அவற்றுக்குள் இறைவன் அந்தர்யாமியாக நிற்கும் நிலை முதற்காரணம் ; சூக்குமநிலையில் இருக்கும் சித்து அசித்துக்களை வெளிப்படுத்தி உலக உற்பத்தி செய்வோம் என்று இறைவன் எண்ணுகின்ற நிலையே நிமித்த காரணம்; இறைவனுடைய ஞானம், சக்தி முதலானவை துணைக்காரணம். இம்முறையில் இறைவன் உலகிற்கு மூன்று காரணங்களுமாக இருக்கின்றான். ஆயின், இறைவன் உலகிற்கு முதற்காரணமாகும்போது 'முதற்காரணமாவது-காரியமாக மாறுவது' என்ற விதிப்படி இறைவனே உலகமாக மாறவேண்டுமே! அப்பொழுது இறைவனுடைய சொரூபத்தில் விகாரம் உண்டாக மாட்டாதோ? என்னில், உண்டாகமாட்டாது. அதுதான் இறைவனுடைய ஆற்றல். “தானே ஜகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமுமாயிருக்கும். ஆனால், நிர்விகாரன் என்னும்படி ஏன் என்னில், சொரூபத்திற்கு விகாரமில்லாமையாலே நிர்விகாரன் என்னக் குறையில்லை. ஆனால் பரிணாமம் உண்டாம்படி ஏன் என்னில், விசிஷ்ட விசேஷண சத்வாகாரமாக “ஒரு சிலந்திக்கு உண்டான சுபாவம் சர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே“ என்றார் தத்துவத்திரய நூலுடையாரும். “நினைந்த எல்லாப் பொருட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே“ என்பது ஆழ்வார் திருவாக்கு.

நாராயணன் என்னும் பெயருள்ளவனே பரம்பொருள் என்பது. இப்பெயர்க்கு நீரை இடமாக உடையவன் என்று பொருள் கூறுவதுண்டு. அப்பொருளினைக் கொண்டிலர் பெரியோர். நாராயணன் என்பது நாரம் அயனம் என்ற இரண்டு சொற்களாலாய தொடர். இதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச் செய்துள்ளனர். நாரம்-அழிவில்லாப் பொருள்களின் கூட்டம்; அவையாவன: மூலப்பகுதியின் விகாரமாயுள்ள எல்லாப் பொருள்களும், எல்லா உயிர்களும், மோட்சத்திலுள்ள எல்லாப் பொருள்களுமாம். அயனம்-இடம். நாராயணன் என்னும் இத்தொடர் அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாக உடையவன் என்றும், அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்தை இடமாக உள்ளவன் என்றும் இருபொருள் கொள்ளுதற்குரியது. அழிவில்லாப் பொருள்களின் கூட்டத்திற்கு இடமாக உள்ளவன் என்பது, இறைவன் எல்லாப் பொருள்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு எங்கும் நிறைந்துள்ள நிலைமையையுணர்த்தும். இப்பொருளால் அவனுடைய பரத்துவம் வெளியாம். அழிவில்லாப் பொருள்களை இடமாகவுடையவன் என்பது, இறைவன் எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாக உள்ள நிலையை உணர்த்துவதோடு அவனுடைய சௌலப்ய குணத்தையும் காட்டும். ஆக, பரம்பொருளுக்குரிய இலக்கணம் இப்பெயரில் அமைந்திருத்தல் காண்க.

மற்றும், கருமம், ஞானம், பக்தி, பிரபத்தி என்னும் நான்கனுள் பிரபத்தி நெறியே இறைவனையடைதற்குரிய சிறந்த நெறி என்பதும், இறைவனை அடையும்போது பெரிய பிராட்டியார் புருஷகாரமாக அடைய வேண்டும் என்பதும், மோட்சம் என்பது ஒரு தனித்த உலக விசேடமே என்பதும், அவ்வுலகத்தில், களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்பு மூப்பு இறப்பு அற்று, ஒளி கொண்ட சோதி வடிவாய், நித்திய முக்தர்களோடு இறைவனுக்கு அவனுகந்த அடிமையைச் செய்துகொண்டிருத்தலே பேறு என்பதும் அப்பெரியோர்கள் கொண்ட முடிபொருள்களாகும். பு. ரா. பு.