கலைக்களஞ்சியம்/ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் இந்தியப் பண்டைக்காலக் கல்வி முறையில் ஒரு முக்கியமான திட்டம். இது இந்நாளில் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே நடந்துவருகிறது.

ஆவணி வந்ததும் கார்காலம் வந்துவிடுவதால் அது முதல் நான்கு மாதங்கள் வெளியே போக முடியாது. பண்டைக் காலத்திலிருந்தவர்கள் தாம் கற்ற கல்வியை மறந்து போகாமல் மனத்தில் நிலைத்து நிற்கும்படி செய்வதற்கு மனப்பாடம் செய்யும் காலமாக இந்தக் காலத்தைப் பயன்படுத்தினர். இந்தக் காலம் ஆவணி மாதம் பூர்ணிமையில் திருவோண நட்சத்திரத்திலோ, அவிட்ட நட்சத்திரத்திலோ துவங்கும். அதனாலேயே இந்த ஓதல் துவக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் கூறுவர். துவக்கம் என்னும் பொருளுடைய உபாகர்மம் என்னும் சொல்லாலும் இதைக் குறிப்பதுண்டு.

இந்த விழாவைத் துவக்கும்போது, வேதங்கள் முதலியவற்றிற்கு ஆதாரமான முனிவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் செய்வார்கள். கல்வியின் தேவதைகளான மேதை, சிரத்தை முதலியவற்றைத் துதித்து ஓமம் செய்வார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த விழாவிற்கு ரிக் வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் முக்கியம் ; யஜூர் வேதிகளுக்குப் பௌர்ணிமை திதி முக்கியம் ; சாமவேதிகள் புரட்டாசி அஸ்த நட்சத்திரத்தில் இதைச் செய்வார் கள். கார் காலம் முடிவடைந்தபின், தை, மாசியில் உத்சர்ஜனம் (அதாவது முடிவுச் சடங்கு) செய்து ஓதலை முடித்துக்கொள்வார்கள். இது பண்டைய முறை.

ஆனால், இக்காலத்தில், ஆண்டு முழுவதும் ஓதல் நடைபெறுவதாக வைத்து, முடிவுச் சடங்கை ஆவணி அவிட்டத்தன்று முதலில் செய்துவிட்டுத் துவக்கச் சடங்கைச் செய்துவருகிறார்கள். வே. ரா.