கலைக்களஞ்சியம்/ஆஸ்ட்டெக் நாகரிகம்

ஆஸ்ட்டெக் நாகரிகம் (Aztec) : கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்ட்டெக் என்னும் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தையும், இன்கா என்னும் மக்கள் தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியாப் பிரதேசத்தையும் கைப்பற்றினர். இந்த இரு மக்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் தங்கள் இடங்களில் ஒரு சிறந்த நாகரிகத்தை வளர்த்தனர்.

மத்திய அமெரிக்காவை டால்ட்டெக்குகளிடமிருந்து கைப்பற்றியபோது ஆஸ்ட்டெக்குகள் தோலாடை கட்டிய நாடோடி மக்களாக இருந்தனர். அவர்களுக்குச் சிறிது விவசாயத்தொழில் தெரிந்திருந்த போதிலும் நெசவுத்தொழில் முதலிய திறமை வாய்ந்த கைத்தொழில்கள் தெரியா. அப்படியிருந்தும் மிக்க விரைவில் அவர்கள் கட்டடக் கலையைக் கற்று, மெக்சிகோ நகரத்தை அழகாகக் கட்டினர். கார்ட்டிஸ் (Cortes) என்ற ஸ்பானிய வீரன் 1519-ல் மெக்சிகோவின் மீது படையெடுத்தபோது ஆஸ்ட்டெக் மக்கள் நிறுவியிருந்த நகரத்தைக் கண்டு வியப்படைந்தான். நகரத்தில் அகலமான வீதிகளும், நீரோடைகளும், பிரமிடுகளும், கோயில்களும், தோட்டங்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன.

டால்ட்டெக் மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை ஆஸ்ட்டெக் மக்களும் வணங்கி வந்தனர். சில தெய்வங்களுக்கு நரபலியுங் கொடுத்தனர். ஆஸ்ட்டெக்குகள் நடத்தின விழாக்கள் குறிப்பிடத்தக்கவை. டெஸ்காப்லிபோகா (Tezcablipoca) என்ற ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுளுக்கு ஆஸ்ட்டெக்குகள் ஒவ்வோர் ஆண்டும் விழா நடத்தி வந்தனர். அச்சமயம் ஓர் அழகிய இளைஞனைக் கடவுளின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுப்பார்கள். அவனுக்கு ஒராண்டுக் காலம் கடவுளுக்குள்ள மரியாதையெல்லாம் செலுத்திவிட்டு, அவ்வாண்டு கடைசியில் அவனைப் பலியிட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு விழாவிற்கு வேறோர் அழகிய இளைஞனைத் தெரிந்தெடுப்பார்கள். தேவதையின் பிரதிநிதி எப்பொழுதும் இளமை மாறாமல் இருக்கவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சைப் (Xipe) என்ற வளங்கொடுக்கும் தேவதைக்கும் நரபலி கொடுப்பது ஆஸ்ட்டெக்குகளின் வழக்கம். போரில் பிடிபட்ட கைதிகளே நரபலியிடப்பட்டனர். ஆஸ்ட்டெக் வீரர்கள் கைதிகளுடைய இதயங்களைப் பிடுங்கிப் பலிபீடத்தில் இட்டு, அவர்களுடைய தோல்களை யணிந்து விழாக் கொண்டாடினார்கள். விழாவிற்குப்பின் தோல்கள் நகரத்தின் வெளியே புதைக்கப்பட்டன.

ஆஸ்ட்டெக் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தில் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தில் கைத்தொழிலும் வாணிபமும் நன்றாக நடைபெற்றன. தங்கவேலை செய்பவர்கள், இறகு வேலை செய்பவர்கள், மட்பாண்டஞ் செய்வோர் முதலியவர்கள் சங்கங்கள் ஏற்படுத்தி, அவைகளில் மற்றவர்களைச் சேர்க்காமல் தங்கள் தொழிலின் தரம் கெடாமல் பாதுகாத்து வந்தனர். இந்தச் சங்கங்களின் வாயிலாக மெக்சிகோ செல்வம் மிகுந்த நாடாயிற்று.

ஆஸ்ட்டெக்குக்களுடைய எழுத்து, சித்திர எழுத்து வகையைச் சார்ந்தது. இவர்கள் வான நூலிலும் பயிற்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் மருத்துவச் சாலைகள் அமைத்திருந்தனர். இவர்கள் விளையாட்டுக்களில் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள். ஆஸ்ட்டெக் மக்களின் அரசியல் திட்டம் சிறந்ததென அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு சிறந்த சட்டதிட்டத்தை வகுத்து, அதற்குக் கட்டுப்பட்டு நாட்டுமக்கள் வாழ்ந்து வந்தனர். இசை, வானவியல், ஓவியம் முதலியன கற்பிப்பதற்குப் பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இப்போது ஆங்கிலத்தில் வழங்கி வரும் டொமேட்டோ, சாக்கலேட் முதலிய சொற்கள் ஆஸ்ட்டெக் மொழியிலிருந்து வந்தவை. எம். வீ. சு.