கலைக்களஞ்சியம்/ஆஸ்ப்பராகஸ்

ஆஸ்ப்பராகஸ் லில்லியேசீயைச்சேர்ந்த ஒற்றைவிதையிலைச் சாதிச்செடி. இதில் 300 இனங்களுண்டு. பூமியின் கிழக்குப் பாதியில் உள்ளவை. தரையின் கீழே மட்டத்தண்டு இருக்கும். அதிலிருந்து தண்டுகள் மேலே வளரும். சிலவற்றில் மட்டத்தண்டு கிழங்குபோல இருக்கும். வேர்களும் சிலவற்றில் கிழங்காக இருக்கும். அவை மணி மணியாகப் பருத்திருப்பதும் உண்டு. அவற்றில் நீர் மிகுதியாகச் சேர்த்து

ஆப்பராகஸ்

உதவி : பீ. அப்பைய செட்டி 1. கிளை: a, செதில் போன்ற இலை. b, இலை போன்ற தண்டு. c, கனி.
2.பூ, 6 இதழ்கள், 6 கேசரங்கள். சூல்பை, சூல் தண்டு,சூல் முடி தெரிகின்றன.
3. ஓரிதழும் ஒரு கேசரமும்.
4. சற்று முதிர்ந்த கனி.

5. கனியின் குறுக்கு வெட்டு : சூல்பையின் மூன்று அறைகளும். அறைக்கு இரண்டாக அச்சு ஒட்டு முறையில் அமைந்திருக்கும் விதைகளும் தெரிகின்றன.

வைக்கப்பட்டிருக்கும். கிளைகள் நேராக நிமிர்ந்து வளர்வதுமுண்டு; நீண்டு கம்பிபோல ஏறுகொடிகளாக இருப்பதுமுண்டு. இலை மிகச் சிறியது. செதில் வடிவாக மாசு படிந்த வெண்ணிறமாக இருக்கும். சில இனங்களில் செதிலிலையின் பின்புறத்தில் முள் ஒன்றிருக்கும். கொடி பற்றி ஏறுவதற்கு இந்த முள் உதவும். செதில்களின் கணுச்சந்துகளில் ஊசிபோன்ற அல்லது நீண்டு குறுகித் தட்டையான உறுப்புக்கள் சாதாரணமாக 3-8 கொத்தாக வளரும். இவை பச்சை நிறமாக இலைபோல் இருக்கும். இவையெல்லாம் கணுச்சந்துக் கிளைகள். இவற்றில் ஒளிச்சேர்க்கை நடக்கிறது. இலைபோன்ற வடிவுடன் இலையின் தொழிலைச் செய்யும் இவை இலைத்தண்டுகள் எனப்படும். ஒவ்வோர் இலைத்தண்டும் ஒரே கணுவிடையாலானது.

ஆஸ்ப்பராகஸ் இனங்கள் நீர்குறைவான வெம்மை மிக்க இடங்களிலும் வாழ்வதற்கேற்ற பாலைச் செடிகள். இலை மிகச் சிறுத்துச் செதில் போலிருப்பதும், தண்டு பசிய நிறமுடையதாகி இலையின் வேலையைச் செய்வதும், வேர் கிழங்குபோல ஆகி நீரைச் சேர்த்து வைத்துக் கொள்வதும் அவ்வகைப் பாலை வாழ்க்கைக்கு ஏற்ற பண்புகள்.

ஆஸ்ப்பராகஸ் பூக்கள் மிகச் சிறியவை. பெரும்பாலும் இருபாலின. ஒருபாற் பூக்களும் சில இனங்களில் உண்டு. ஓரகச் செடிகளும் உண்டு. ஒன்றிரண்டு ஈரக இனங்கள். பூக்கள் தனித்தும் கொத்தாகவும் தொங்கிக் கொண்டிருக்கும். இதழ் 6 பிரிவினது; மணி வடிவு அல்லது புனல் வடிவுள்ளது. கேசரம் 6 ; இதழ்களுடன் இணைந்தவை. சூலகம் 3 அறைகளுள்ளது. அறைக்கு 2 அல்லது அதிகச் சூல்கள் இருக்கும். கனி உருண்டையான சதைக்கனி. சிலவற்றில் பழம் சிவப்பாக இருக்கும். பூக்களுக்கு ஈக்கள் வருவதைப் பார்க்கலாம். மகரந்தச் சேர்க்கை அவற்றால் நடைபெறுகிறது.

தண்ணீர்விட்டான் கிழங்கு ஆஸ்ப்பராகஸ் ராசிமோசஸ் என்பது. மருந்துக்கு உதவும். இது சதாவேரி எனவும்படும். வேலிகளிலும் குறுங்காடுகளிலும் சாதாரணமாக வளர்கின்றது. சில இனங்களின் கிழங்குகளை உணவாக உபயோகிக்கின்றனர். ஒருவித ஆஸ்ப்பராகஸ் (ஆ. அபிஷினாலிஸ்) நல்ல மரக்கறி. இதில் உணவாகும் பாகம் மெதுவான இளங்கிளைகள். இந்தச் செடி மேலே அழகான இறகுகள் போலவும், மிகச் சிறிய மரம் போலவும் தோன்றும். விதைகளிலிருந்து இதைப் பயிர் செய்வார்கள். நாற்று விட்டுப் பாத்திகளில் வரிசையாக நட்டுப் பிறகு மண் அணைப்பார்கள். அப்போது நீண்ட வெண்மையான குருத்துக்கள் உண்டாகும். பல இனங்களைத் தோட்டங்களில் அழகுக்காக வைப்பார்கள் தொங்கும் கூடைபோன்றதொட்டிகளில் வைத்துச் சில இனங்களை வளர்ப்பதுண்டு.