கலைக்களஞ்சியம்/இக்தியோசாரஸ்
இக்தியோசாரஸ் (Ich-thyosaurus) பத்துப்பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த கடல்வாழ் ஊர்வன. மீசொசோயிக் காலத்தைச் சேர்ந்தவை. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் ஏறக்குறைய முழுக் கங்காளங்களே அகப்பட்டிருக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா, ஆஸ்திரேலியா முதலிய இடங்களில் வெகுதூரம் பரவியிருந்தன. கீழ்க் கிரிட்டேஷஸ் காலத்தில் இந்தியாவிலும் இது அகப்படுகிறது. இவை 3 அடி முதல் 30, 40அடி வரையில் இருக்கின்றன. தரையிலோ சதுப்பு நிலச் சேற்றிலோ வாழ்ந்திருந்த ஊர்வனவற்றில் ஒரு கிளை கடலுள்சென்று, திமிங்கிலம்போல வாழத்தொடங்கி இக்தியோசாரஸ் ஆயிருக்கலாம். இவற்றின் தலை பெரியது. முகம் நீளம். கண்கள் பெரியவை. கண்களைச் சுற்றி ஓடுபோலடுக்கிய தகடுகள் உண்டு. பற்கள் மிகப்பல. ஒரு வாயில் 400 பற்கள்கூட எண்ணியிருக்கிறார்கள். இக்தியோசாரஸ் காற்றைச் சுவாசித்தது, மீன் முதலியவற்றைத் தின்றது, குட்டி போட்டது எனத்தெரிகிறது. இதன் உடம்பு திமிங்கிலம் அல்லது மீன்போல வடிவமுள்ளது. நான்கு கால்களும் உருவம் மாறி நீந்துவதற்கு ஏற்ற துடுப்புப்போல இருந்தன. வாலிலும் முதுகிலும் செங்குத்தான வேறு துடுப்புக்கள் இருந்தன. நீரில் நீந்தி வாழ்வதற்கேற்ற வடிவம் மீனிலும் இக்தியோசாரஸிலும் திமிங்கிலத்திலும் உண்டாயிருப்பது வெவ்வேறு வகையுயிர்கள் ஒரேவகைச் சூழ்நிலைக்கும் வாழ்க்கைக்கும் உட்பட்டால், அதற்கு ஏற்றவாறு ஒரேவிதமாக மாறுதலடைதல் உண்டு என்னும் ஒருங்கு பரிணாமத்தைக்(Convergent Evolution) காட்டுகிறது.