கலைக்களஞ்சியம்/இஞ்சி

இஞ்சி

இஞ்சி:இஞ்சி முக்கியமான வாசனைப் பண்டங்களில் ஒன்று. இதன் தாயகம் ஆசியாக் கண்டத்தின் வெப்பவலயம். இப்போது இது இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, சீனம், ஜப்பான், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் முதலியவிடங்களில் பயிராகிறது. இதை வாசனைப் பண்டமாகவும், மருந்தாகவும், ஆதிகால முதல் இந்தியரும் சீனரும் பயன்படுத்தி வந்தனர் என்பது நூல்களிலிருந்து தெரிகிறது.

இஞ்சி என்பது செடியின் மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome). இச்செடி. 1 - 3 அடி வளரும். இதன் தண்டு இலை உறைகளால் மூடப்பட்டிருக்கும். வெளிர்பச்சை நிறமுள்ளது. இரண்டு வரிசையாக அமைந்த மாறொழுங்குள்ளது. 6 அங்குலத்திற்கு மேல் நீளமுள்ளது. முனை கூராக காம்பில்லாதவை. மஞ்சரி சுமார் ஓர் அடி நீளமிருக்கும். இஞ்சிக் கிழங்கை மெல்லிய தோல் மூடியிருக்கும். இதிலிருந்து சல்லி வேர் இஞ்சி வந்திருக்கும். இதில் குருத்துக்கள்நிறைந்திருக்கும். ஒவ்வொரு குருத்தும் முளைத்துத் தனிச்செடியாகும் ஆற்றலுள்ளது.

சாகுபடி: இஞ்சிச் சாகுபடிக்கு நல்ல வளமும் காற்றோட்டமுமுள்ள நிலம் வேண்டும். சாகுபடி வெப்பம் இதன் சாகுபடிக்கு முக்கியமானது. இவ்விரண்டு அனுகூலங்களோடு, நல்ல வடிகாலும், போதுமான மழையுமுள்ள இடமெங்கும் இது பயிராகும். இஞ்சிக் கிழங்கைக் குருத்துக்கள் உள்ள துண்டுகளாக்கி, நட்டுப் பயிர் செய்கின்றனர். மலையாளம், தென்கன்னடம் முதலிய மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களில் இது அதிகமாக வானவாரிப் பயிராக விளைகிறது. இங்குச் சித்திரை கடைசி அல்லது வைகாசி முதல் வாரத்தில் கோடை மழை பெய்ததும் நிலத்தை உழுது, அதில் 3 அடி அகலமும், வேண்டிய அளவு நீளமுமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும். இடையில் வடிகாலுக்காக ஓரடி வாய்க்கால் இருக்க வேண்டும். அந்தப் பாத்திகளில் 9 முதல் 12 அங்குலம் தூரத்துக் கொன்றாகச் சிறு குழி செய்து, அக்குழியில் ஒவ்வொரு பிடி பொடிசெய்த மாட்டு எருவைப் போட்டு, ஒன்று அல்லது இரண்டு முனைகளுள்ள சுமார் ஓரங்குலமுள்ள இஞ்சித் துண்டுகளை நட்டு அக்குழியை மூடவேண்டும். இவ்விதம் நட ஓர் ஏக்கருக்கு 800 முதல் 1,200 ராத்தல்வரை விதைக் கிழங்குகள் வேண்டும். நடவான பாத்திகளைச் சீக்கிரம் மட்கக் கூடிய பசுந்தழை ஏக்கருக்கு 4,000 முதல் 8,000 ராத்தல் வரை போட்டுக் கனமாக மூடவேண்டும். இது பாத்திகளில் மண் மழையின் வேகத்தால் கரைவதைத்தடுப்பதுடன பயிருக்குப் பசுந்தழை யுரமுமாகிறது. நடவான 30 அல்லது 40 நாட்களுக்குப்பின் இரண்டாம் முறையாகவும், பின் ஒரு மாதத்தில் மூன்றாம் முறையாகவும் மேல் குறித்தபடி தழைபோட்டுப் பாத்திகளை மூடவேண்டும். இதன்பின் மாதமொருமுறை தழைபோடுதலும், களை எடுத்து விட்டுப் பாத்திகளிலிருந்து சரிந்த மண்ணை எடுத்து அவற்றின் ஓரத்தில் அணைத்தலும் வேண்டும். பாத்திகளில் மழைத் தண்ணீர் தேங்காதிருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டியது முச்கியம். இல்லையேல் கிழங்குகள் அழுகிப் போவதுடன் பயிரும் நஷ்டமாகும். நவம்பர் கடைசியிலிருந்து டிசம்பர் வரை இஞ்சி மகசூல் எடுப்பு நடைபெறும். அப்பொழுது பயிரின் இலைகள் மஞ்சள் நிறம் கொடுத்து உலர ஆரம்பிக்கும். நன்றாய்ச் சுத்தப்படுத்திய இஞ்சி ஓர் ஏக்கருக்கு 8.000 ராத்தல் முதல் 20,000 ராத்தல்வரை கிடைக்கும். இதில் நல்ல தரமான கிழங்குகளை விதைக்கு எடுத்துக் கொட்டகை போன்ற குளிர்ந்த நிழலுள்ள இடத்தில் குழியுண்டாக்கி, அதில் போட்டுக் காற்றோட்டத்திற்கு வசதியாக ஒரு சிறு தொளையுள்ள பலகையால் மூடி வைப்பார்கள்.

இஞ்சியில் பலவகைகள் உண்டு. நீல இஞ்சி, சேர நாடு, ராஜோல், ஜோர்ஹட் என்பன சிலவகைகள்.

சுக்கு உண்டாக்குதல் (Curing) : இஞ்சியை மண், வேர் முதலியவைகளை நீக்கிச் சுத்தம் செய்தபின், மேல் தோலையும் சுரண்டி எடுத்துவிட்டு, அது கெட்டியாகி முரித்தால் ஓடியும்வரை வெயிலில் உடனே உலர்த்த வேண்டும். அப்படி உலர்த்தியதே சுக்கு. இதைத் ‘தேய்த்த‘ அல்லது ‘பூசிய’ சுக்கு என்பார்கள். இஞ்சியைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து உலர்த்தி, அதன் நிறத்தை வெண்மையாக்குவம் உண்டு.

பயன்கள் : இஞ்சி உணவில் வாசனைக்காகவும் காரத்திற்காகவும் பயன்படுகிறது. முன்காலத்தில் மேனாட்டில் திராட்சரச மதுவில் வாசனைக்காகச் சேர்க்கப்பட்டு வந்தது. மருந்துகளில் ஜீரணசக்தியைக் கொடுக்கவும், தெம்பு உண்டாக்கவும் சாதாரணமாக உபயோக்கப்படுகிறது. பண்டைக்காலத்தில் மனிதனுக்கு வலிமையைக் கொடுக்கவும், விஷமுறிவிற்கும் இதைப் பயன்படுத்தினார்கள். இங்கிலாந்தில் இது பிளேக்கு நோய்க்கு மருந்தாகவும் பயன்பட்டது. குடும்பம் : ஜிஞ்சிபெரேசீ இனம்: ஜிஞ்சிபெர் அபிஷினேல் (Zingiber officinale). அ. அ. ச.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இஞ்சி&oldid=1462979" இலிருந்து மீள்விக்கப்பட்டது