கலைக்களஞ்சியம்/இடமாறுதோற்றம்
இடமாறுதோற்றம் (Parallax) : ஒரு பொருளைப் பார்ப்பவன் இடம் மாறினால் அப்பொருள் இருப்பதாகத் தோன்றும் திசையும் மாறுகிறது. இந்த மாற்றம் 'இடமாறுதோற்றம்' எனப்படுகிறது. நமது முகத்திற்கு நேரே ஒரு விரலை நீட்டிக் கொண்டு, அதை முதலில் வலக் கண்ணாலும், பிறகு இடக் கண்ணாலும் பார்க்கும்போது அது இடம் விட்டு இடம் மாறுவது போல் தோன்றுகிறது. இவ்விளைவு இடமாறுதோற்றத்தால் உண்டாவது. இரு கண்களாலும் பொருள்களை
நோக்கும்போது இந்த விளைவினாலேயே நாம் அவை இருக்கும் தொலைவை அறிய முடிகிறது. நில அளவையிலும் ஓரிடத்திலிருந்து ஒரு பொருளின் தொலைவை அறிய அந்த இடத்தின் இரு புறங்களிலும் உள்ள வேறு இரண்டு இடங்களிலிருந்து அப்பொருளின் தொலைவைக் கணக்கெடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்தி, முதலிற்குறிப்பிட்ட இடத்திலிருந்து அப்பொருளின் தொலைவை அறிவதுண்டு. இதில் கையாளப்படும் தத்துவமும் இடமாறுதோற்றமேயாம்.
புவியின் மேலுள்ள ஒருவன் சந்திரனை நோக்கும் திசை புவியின் மையத்திலிருந்து அதை நோக்கும் திசையினும்
வேறாக இருக்கும். இவ்விரு திசைகளுக்கும் உள்ள வேறுபாடு சந்திரனின் இடமாறுதோற்றம் என்று கூறப்படும். படத்தில் A என்பது புவியின் மேல் நின்று சந்திரனைப் பார்க்கும் இடம்; B என்பது சந்திரன்; C என்பது புவியின் மையம். இப்போது ABC என்னும் கோணம் சந்திரன் இடமாறுதோற்றம் ஆகும். சந்திரனது தொலைவை என்ற சூத்திரத்தைக் கொண்டு கணக்கிடலாம். இது சந்திரன் அடிவானத்திலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்து வேறுபடும். சந்திரன் அடிவானத்திலிருக்கும்போது இதன் அளவு உச்சமாக இருக்கும். புவியின் வடிவம் சரியான கோளமாக இல்லாததாலும் இதன் அளவில் வேறுபாடுகள் தோன்றுகின்றன். சந்திரன் சராசரி இடமாறுதோற்றம் சுமார் 57’ 2.5” சூரியன் இடமாறுதோற்றம் சுமார் 8.8”.
நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் புவியில் இரு இடங்களிலிருந்து அவற்றின் நிலைமாற்றம் புலப்படுவதில்லை. ஆனால் சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 9.3 கோடி-மைல். ஆகையால் புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் பருவத்தையொட்டி ஒரு நட்சத்திரத்தின் நிலையில் மாறுதல் தெரியலாம். இது நட்சத்திர இடமாறுதோற்றம் என்றும், வருடாந்தர இடமாறுதோற்றம் என்றும் கூறப்படும். நமக்கு மிக அருகிலுள்ள ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் 0.76" ஒரு நட்சத்திரத்தின் இடமாறுதோற்றம் p எனில் அதன் தொலைவு மைல்.
இடமாறுதோற்றங்களை அளவிட்டு நட்சத்திரங்களின் தொலைவுகளை மிகத் திருத்தமாகக் கணக்கிட முடிகிறது. இதிலிருந்து இடமாறுதோற்ற அளவுகள் மிக முக்கியமானவை என்பது விளங்கும்.