கலைக்களஞ்சியம்/இணைப்பார்வைக் கருவிகள்

இணைப்பார்வைக் கருவிகள் (Stereoscopic instruments) ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக்கூடிய ஒளியியற் கருவிகள். வானத்திலுள்ள பொருள்களைக் காணவும், தட்டையாகத் தெரியும் ஒரு காட்சியின் ஆழத்தை உணரவும் இவை பயன்படுகின்றன. நாம் ஒரு பொருளை ஒரு கண்ணால் காண்பதைவிட இரு கண்களாலும் பார்ப்பதால், நமது கண் திரைகளில் ஏறக்குறைய ஒரே மாதிரியான இரு படிவங்கள் தோன்றுகின்றன. இவ்விரு படிவங்களையும் நமது மூளை ஒன்று கலந்து காட்சியின் பொருண்மையையும் ஆழத்தையும் உணர்கிறது. இது இணைப்பார்வை எனப்படும். இது எவ்வாறு என்பதை இங்குக் காட்டியுள்ள படம் விளக்கும். இத் தத்துவத்தைப் பயன்படுத்திப் பல ஒளியியற் கருவிகள் இயங்குகின்றன. ஒரு பொருளை இரண்டு கண்களாலும் பார்க்கும் பொழுது அதன் இரண்டு கோடிகள் வழியாகப்போகும் பார்வை அச்சுக்களை வலப்பக்கப் படத்தில் காட்டியிருக்கிறது. வல, இடக் கண்களின் அச்சுக்கள் ஒன்றையொன்று ஒவ்வொரு கோடியிலும் வெட்டுவதால் அவ்விடங்கள் நிலைத்துவிடுகின்றன. இவ்வாறே அந்தப் பொருளிலே நமது கண்களுக்குக் காணும் ஒவ்வோர் இடமும் நிலைத்து விடுகிறது. அப்போது பொருளின் உண்மையான பருமன் வடிவம். ஆழம். தூரம் ஆகிய பண்புகள் உள்ளவாறு ஒரே படித்தாக நம்முடைய உணர்வில் தோன்றும், அதே பொருளை ஒரே கண்ணால் பார்க்கும்போது பார்வையச்சுக்களில் நிலைத்த இடங்கள்

இணைப்பார்வை

உண்டாவதில்லை என்பதை இடப்பக்கப்படம் காட்டுகிறது. அதனால் வலப்பக்கப் படத்தில் காட்டியுள்ள பொருளே, கேள்விக் குறிகள் இட்ட வடிவங்கள்போல, அளவிலும் தொலைவிலும் வேறுபட்டுத் தோன்றலாம். (கண் என்னும் கட்டுரையையும் பார்க்க).

இணைப்பார்வை டெலிஸ்கோப்பு: இதில் ஒரே மாதிரியான இரு டெலிஸ்கோப்புக்களை அமைத்து

இணைப்பார்வை டெலிஸ்கோப்பு
க. கண்கள் க.லெ. கண் லென்ஸ் மு. முப்பட்டைகள் பொ. லெ. பொகஸ் லென்ஸ்
ஒரு திருகாணியின் உதவியால் அவ்விரண்டிலும் தெளிவான வடிவம் விழுமாறு செய்யப்படும். இப்போது இரு கண்களினால் அவற்றை நோக்கினால் ஆழமுள்ள படிவம் ஒன்று தெரிகிறது. இத்தகைய கருவிகள் வெகுநாட்களாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆனால். தற்காலத்தில் அவை சீர்திருத்தப்பட்டுள்ளன. சாதாரண டெலிஸ்கோப்பின் குழல் மிகவும் நீளமாகையால் கருவியும் மிகப் பெரிதாய்விடும். ஆனால் குழலின் நீளத்தைக் குறைக்க இரு செங்கோண முப்பட்டைகளைப் பயன்படுத்தலாம். முப்பட்டைகள் ஒளியை இருமுறை வந்த வழியே திருப்பியனுப்பிக் குழலின் நீளத்தைக் குறைப்பதுடன் தலைகீழான படிவத்தையும் வேறு லென்ஸ்களின் உதவியின்றியே நேராக்குகின்றன. இம் முப்பட்டைகளைப் பயன்படுத்துவதால் கண் லென்ஸ்களின் இடையே உள்ள தொலைவைவிடப் பொருள்வில்லைகளை அதிகமான தொலைவில் அமைக்க முடிகிறது. இதனால் கருவியின் 'பொருண்மைத் திறன்' (Stereopower) அதிகமாகிறது. அதிற் காணும் காட்சிகளும் தெளிவான ஆழங்கொண்டு விளங்குகின்றன. இத்தகைய இணைப்பார்வை டெலிஸ்கோப்புக்கள் எறிபடையியலிலும், கப்பலிலும், தொலைவிலுள்ள பொருள்களைக் கண்டு, அவற்றின் தொலைவை மதிப்பிடவும் உதவுகின்றன.

இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு: சாதாரண மைக்ராஸ்கோப்புக்கள் இரண்டை ஒரு பொருளை

இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு
உதவி: பாஸ் & லாம், நியூயார்க்.

நோக்கியிருக்குமாறு செய்து, அவ்விரண்டிலும் தோன்றும் படிவங்களை ஒன்றாக்கிப் பார்க்குமாறு அமைத்தால் அவ்வமைப்பு இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பு எனப்படும். இதில் தெரியும் படிவம் தனி மைக்ராஸ்கோப்பில் தெரியும் படிவத்தைவிடத் தெளிவாக இருக்கும். தற்கால இணைப்பார்வை மைக்ராஸ்கோப்பில் இரு தனி மைக்ராஸ்கோப்புக்களில் தெரியும் படிவங்கள் செங்கோண முப்பட்டைகளால் நேராக்கப்படும். இம்முப்பட்டைகளைக் கருவியின் இருசைச் சுற்றி நகர்த்தி, இரு படிவங்களின் தொலைவையும் தேவைக்குத் தகுந்தவாறு சரிப்படுத்தலாம்.