கலைக்களஞ்சியம்/இந்தியக் கிளர்ச்சி
இந்தியக் கிளர்ச்சி : ஆங்கில ஆட்சி முறையால் இந்தியர் மனத்தில் பொங்கியெழுந்த ஆத்திரந்தான் 1857-ல் தோன்றிய கிளர்ச்சிக்கு அடிப்படையான காரணம். 'வாரிசிலிக் கொள்கை'யின்படி டால்ஹௌசிப் பிரபு பல இராச்சியங்களைப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுத்தினார். இது இந்திய மன்னர்களிடையே பேரச்சத்தை விளைவித்தது. மேலும் இவர் அயோத்தியைக்கைப்பற்றியதும், பேஷ்வா பாஜிராவின் தத்துப்புதல்வர் நானாசாகிபுக்கு உபகாரச் சம்பளத்தை நிறுத்தினதும் பரபரப்பை மிகுவித்தன. நிலமானியக்காரர்கள் பலரை அரசாங்கம் வெளியேற்றியதால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. அன்றியும், இருப்புப்பாதை, தந்தி முதலிய கருவிகளும், ஆங்கிலக் கல்வி, சமுதாயச் சீர்திருத்தங்கள் ஆகியவையும் இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்க அரசாங்கம் செய்துவரும் சூழ்ச்சிகளென்று கருதப்பட்டன. இவையெல்லாம் கிளர்ச்சிக்கு அடிப்படையான காரணங்களாயிருந்தாலும் கலகம் தலை தூக்கியது சிப்பாய்களிடையேதான். இந்தியப் படையைச் சார்ந்த சிப்பாய்கள் கடல் கடந்து அயல் நாடுகளுக்குச் சென்று போரிட மறுத்தனர். இத்தருணத்தில், பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்பைத் தடவிய தோட்டாக்களைக் கொண்டு சுடும் துப்பாக்கிகள் சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவைகளைக் கையாளச் சிப்பாய்கள் மறுத்துக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர்.
கிளர்ச்சி சிறிது சிறிதாகப் பெருகி, மீரட்டில் தோன்றிப் பின்பு டெல்லிக்கும் பரவியது. ஊர்க்கொள்ளை, சிறைகளிலிருந்து கைதிகளை வெளிப்படுத்தல், ஆங்கிலேயர்களைக் கொலை செய்தல் ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்தன. விரைவில் கான்புரிக்கும் லட்சுமணபுரிக்கும் கிளர்ச்சி பரவியது. ஜான்சி ராணி, நானாசாகிப், அவர் தளகர்த்தர் தாந்தியாத்தோபி முதலியோர் கிளர்ச்சியின் முன்னணியில் நின்று அரசாங்கத்திற்குப் பல இடையூறுகளை விளைவித்தனர்.
ஆனால் இறுதியாக ஜான் லாரென்சும், நிக்கல்சனும் ஆறு நாட்கள் கடும்போர் புரிந்து டெல்லியை மீட்டனர். ஹாவ்லக் நானாசாகிபைத் தோற்கடித்துக் கான்புரியைக் கைப்பற்றினார். இதற்கிடையே ஜான்சி ராணி போரில் மாண்டாள். தாந்தியாத்தோபி, பகதூர்ஷாவின் பிள்ளைகள் முதலியோர் ஆங்கிலேயர்களின் கையில் சிக்கினர். விரைவில் பிரிட்டிஷார் ஒவ்வோர் இடத்தையும் மீட்டார்கள். தகுந்த தலைவர் தோன்றாததும், தோன்றிய தலைவர்களிடம் ஆழ்ந்த யோசனையும் ஒத்துழைப்பும் இல்லாததுமே கிளர்ச்சி சீர்குலைந்ததற்கு முக்கிய காரணங்கள். மேலும், கூர்க்கரும், சீக்கியரும், நாட்டு மன்னர் சிலரும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உதவியாயிருந்தனர். அன்றியும், கிளர்ச்சியில் மக்கள் பெருவாரியாகச் சேரவில்லை; ஆங்காங்குச் சச்சரவுகள் நடந்தனவேயன்றி நாடு முழுவதும் கிளர்ச்சி பரவவில்லை. முக்கியமாக இக்கிளர்ச்சி வட இந்தியாவில் மும்முரமாக இருந்ததாயினும் சென்னை மாகாண மக்கள் இதில் எவ்விதத்திலும் கலந்து கொள்ளவில்லை. கே. க.