கலைக்களஞ்சியம்/இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947
இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947: 1942-ல் கிரிப்ஸ் திட்டம் வெளியிட்டதுமுதல் சுமார் ஐந்தாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும் இந்தியத் தலைவர்களும் ஒருமனமாக இந்தியாவில் எதிர்கால அரசியலமைப்பைப் பற்றி முடிவுக்கு வர முயன்றனர். காங்கிரசுக்கும் முஸ்லிம் லீகுக்கும் பாகிஸ்தான் பிரச்சினை பற்றி வேறுபட்ட கொள்கைகள் இருந்து வந்ததால், இறுதியாக ஆங்கில அரசாங்கமே முடிவு செய்து இந்தியச் சுதந்திரச் சட்டத்தை வெளியிட்டது. இச்சட்டத்தின் முக்கியமான ஷரத்துக்களாவன:
1. 1947 ஆகஸ்டு 15 முதல் இந்தியா, பாகிஸ்தான் என்னும் இரண்டு டொமினியன்கள் அமைக்கப்படும். கிழக்கு வங்காளம், மேற்குப் பஞ்சாப், சிந்து, பிரிட்டிஷ், பலூச்சிஸ்தானம் இவை சேர்ந்து பாகிஸ்தானாகும். எல்லை நிருணயிப்பதற்கு நியமிக்கப்படும் ஒரு கமிட்டியின் திட்டப்படி வங்காளமும் பஞ்சாபும் பிரிக்கப்படும். இது தவிர, அஸ்ஸாம் மாகாணத்திலுட்பட்ட சில் ஹெட், அந்த ஜில்லா மக்களின் வாக்குப்படி கீழ்வங்காளத்தோடோ, மேற்கு வங்காளத்தோடோ சேர்க்கப்படும். வட மேற்கு எல்லை மாகாணம் அவ்விடத்து மக்களின் வாக்கின்படி பாகிஸ்தானோடோ இந்தியாவோடோ இணைக்கப்படும். எஞ்சிய இடம் யாவும் இந்திய டொமினியனைச் சார்ந்தவையாகும்.
2. பிரிட்டிஷ் இந்தியாவிலுட்பட்டிருந்த நாடுகளில் அரசியல் பொறுப்பு யாதொன்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு 1947 ஆகஸ்டு 15 முதல் கிடையாது. இந்த டொமினியன்கள் விரும்பினாலொழிய பிரிட்டிஷ் பார்லிமென்டின் சட்டம் ஒன்றும் அமலிலிராது. பிரிட்டிஷ் அரசாங்கம் தன் மந்திரி வாயிலாக அலுவலாளர்களை நியமிப்பதும் நிறுத்தப்படும்.
3. 1947 ஆகஸ்டு 15 முதல் இந்திய சுதேச சமஸ்தானங்களில் பிரிட்டிஷாரின் மேலாட்சியும், ஆதிக்குடிப் பிரதேசங்கள்மீதுள்ள அதிகார உரிமையும் நீங்கும்.
புதிய இரு சுதந்திர நாடுகளையும் உருவாக்கிய இச்சட்டம் ஆசிய வரலாற்றில் ஒரு சிறந்த சாசனமெனக் கருதப்படுமென்பதற்கு ஐயமில்லை. கே. க.